டெல்லியில் மகளிருக்கு மாதம் தோறும் ரூ.1,000.. வெற்றி பெற்றால் ரூ.2,100.. கெஜ்ரிவால் அதிரடி

post-img
டெல்லி: டெல்லியில் அனைத்து மகளிருக்கும் மாதம் ரூ.1,000 வழங்கப்படும் என அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார். வெற்றி பெற்று ஆட்சி அமைந்தால் மாதம் தோறும் ரூ.2,100 வழங்கப்படும் எனவும் கெஜ்ரிவால் கூறினார். விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், மகளிர் வாக்குகளை கவரும் விதமாக கெஜ்ரிவால் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். டெல்லியில் வரும் பிப்ரவரி மாதத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தேர்தல் விரைவில் நடைபெற உள்ளதால் ஆட்சியை பிடிக்க பாஜகவும், ஆட்சியை தக்க வைக்க ஆம் ஆத்மியும் தற்போதே வியூகம் வகுத்து வருகிறது. டெல்லியில் கடந்த 2015 முதல் அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சியே ஆட்சியில் உள்ளது. தற்போது மதுபான முறைகேடு வழக்கில் கைது ஆகி ஜாமினில் இருக்கும் அரவிந்த் கெஜ்ரிவால் முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். மீண்டும் மக்களை சந்தித்தே முதல்வராக பதவியேற்பேன் என்று கெஜ்ரிவால் கூறி வருகிறார். அதேவேளையில் பாஜக எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என்பதில் தீவிரமாக உள்ளது. இந்த நிலையில் தான், டெல்லியில் மகளிருக்கு மாதம் தோறும் ரூ. 1,000- வழங்கப்படும் என்று கெஜ்ரிவால் அறிவித்துள்ளார். சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தால் ரூ.2,100 வழங்கப்படும் என்று கெஜ்ரிவால் அறிவித்து இருக்கிறார். தற்போது ரூ.1,000 அறிவிக்கப்படாலும் இந்த தொகையை கொடுக்க இயலாது என்றும் கெஜ்ரிவால் அறிவித்து இருக்கிறார். ஏனென்றால், தேர்தல் தேதி இன்னும் 10 - 15 நாளில் அறிவிக்கப்படும் என்பதால் அதற்குள் இந்த திட்டத்தை நிறைவேற்றுவது கடினம் எனவும் கெஜ்ரிவால் கூறியுள்ளார். கடந்த 1998-ம் ஆண்டுக்கு பிறகு ஒரு முறை கூட டெல்லியில் ஆட்சியை பிடிக்காத பாஜக, இந்த முறை எப்படியாவது ஆட்சியை கைப்பற்றும் தீவிரத்தில் இருக்கிறது. அதே சமயத்தில், 3-வது தடவையாக ஆட்சியை கைப்பற்றும் முனைப்பில் ஆம் ஆத்மி உள்ளது. எதிர்க்கட்சிகள் அடங்கிய 'இந்தியா' கூட்டணியில் காங்கிரஸ் கட்சியும், ஆம் ஆத்மியும் உள்ளன. லோக்சபா தேர்தலில் டெல்லியில் இரு கட்சிகளும் கூட்டணி அமைத்து போட்டியிட்டன. ஆனால் வெற்றி கிடைக்கவில்லை. இதனால், பிப்ரவரி மாதம் நடைபெற உள்ள தேர்தலில் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி கிடையாது என்று கெஜ்ரிவால் அறிவித்துள்ளார் .இதனால், டெல்லியில் மும்முனை போட்டி நிலவுகிறது.

Related Post