சென்னை, மும்பை அணிகளுக்கு பின் ஐபிஎல் தொடரில் நட்சத்திர அணி என்றால் ஆர்சிபி தான். எவ்வளவு அடி வாங்கினாலும் அந்த அணியின் மாறாத ரசிகர்களும், அந்த அணியினரின் கொண்டாட்டமும் ஆர்சிபி-யை நட்சத்திர அணியாக உயர்த்தியுள்ளது. இரு முறை கோப்பையை வெல்வதற்கு வாய்ப்பு கிடைக்கும் ஆர்சிபி அணி தவறவிட்டது.
இருப்பினும் சென்னை மற்றும் மும்பை அணிகளுக்கு பின் அதிக முறை பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறிய அணி என்ற சாதனையை ஆர்சிபி அணி வைத்துள்ளது. அதுமட்டுமல்லாமல் 2019ஆம் ஆண்டு முதல் தொடர்ச்சியாக 3 முறை பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறி ஜாம்பவான் அணிகளையும் மிரட்டியது. இதற்கு அந்த அணியின் தலைமை பயிற்சியாளர் மைக் ஹெசன் முக்கிய காரணமாக அமைந்தார்.
இந்த சூழலில் கடந்த சீசனில் ஆர்சிபி அணி 6வது இடத்தில் நிறைவு செய்தது. இதனால் ஆர்சிபி அணி மைக் ஹெசனின் ஒப்பந்தத்தை நீட்டிப்பு செய்யவில்லை. அதற்கு பதிலாக புதிய பயிற்சியாளராக ஜிம்பாப்வே முன்னாள் வீரரும், இங்கிலாந்து அணியின் முன்னாள் பயிற்சியாளருமான ஆண்டி பிளவரை ஆர்சிபி அணி ஒப்பந்தம் செய்தது.
இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு நேற்று வெளியாகியது. இதையடுத்து ஆர்சிபி அணியின் பயிற்சியாளர் மைக் ஹெசன் இன்ஸ்டாகிராமில் தனது விரக்தியை பதிவு செய்துள்ளார். அதில், கடைசியாக விளையாடிய 4 சீசன்களில் 3 முறை பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறி இருக்கிறோம். ஆனால் வீரர்கள், ரசிகர்கள் எதிர்பார்த்த ஐபிஎல் கோப்பையை வெல்ல முடியவில்லை.
ஆர்சிபி அணியை விட்டு வெளியேறுவது ஏமாற்றம் அளிக்கிறது. ஏனென்றால் நன்றாக முன்னேற்றமடைந்து வந்தோம். இந்த அணியில் சிறந்த வீரர்கள், நிர்வாகிகள், மனிதர்கள்உடன் பணியாற்றியது மகிழ்ச்சியளிக்கிறது. ஆர்சிபி அணியின் புதிய பயிற்சியாளர்கள் குழுவினருக்கும் வாழ்த்து தெரிவித்துக் கொள்கிறேன் என்று பதிவிட்டுள்ளார்.