Weather Update: "இனி மிதமான மழையே.. ஆனாலும் பனிமூட்டம்?" - வானிலை மைய எச்சரிக்கை இதோ!

post-img
வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி ஆந்திர கடலோரத்தை நோக்கி நகர்வதால் தமிழகத்தில் இனி மிதமான மழைக்கே வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “நேற்று, தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, இன்று (19-12-2024) தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவுகிறது. இது, அடுத்த 12 மணி நேரத்தில், வடமேற்கு திசையில் வடதமிழக - தெற்கு ஆந்திர கடலோரப் பகுதிகளை நோக்கி நகர்ந்து, அதற்கடுத்த 24 மணி நேரத்தில், வடக்கு திசையில் ஆந்திர கடலோரப்பகுதிகளை ஒட்டி நகரக்கூடும். இதன்காரணமாக, இன்று (டிச.19) வடகடலோர தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், இதர தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நாளை (டிச.20) தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும். நாளை மறுநாள் (டிச.21) முதல் அடுத்த புதன்கிழமை (டிச.25) வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னை மற்றும் அதன் புறநகரைப் பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசானது அல்லது மிதமான மழை பெய்யக்கூடும். அதிகாலை வேளையில் ஒருசில பகுதிகளில் லேசான பனிமூட்டம் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 27-28° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 23° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும். மீனவர்களுக்கு எச்சரிக்கை இன்றும், நாளையும் தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா, அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக் காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். வங்கக்கடல் பகுதிகளில் இன்று தொடங்கி அடுத்த திங்கட்கிழமை (டிச.23) வரை சூறாவளிக் காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் இந்த நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Post