டெல்லி: உலகின் சிறந்த விமான நிறுவனங்கள் குறித்த லிஸ்ட்டை ஏர் ஹெல்ப் என்ற அமைப்பு சமீபத்தில் வெளியிட்டு இருந்தது. அதில் இண்டிகோ நிறுவனம் மோசமான நிறுவனங்கள் லிஸ்டில் இடம் பிடித்து இருந்தது. இது தொடர்பாகச் சந்தேகத்தைக் கிளப்பியுள்ள இண்டிகோ நிறுவனம், சில முக்கிய விளக்கங்களையும் அளித்துள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் ஏர் ஹெல்ப் என்ற நிறுவனம் உலகெங்கும் உள்ள விமான நிறுவனங்களை ஆய்வு செய்து அவற்றுக்கு ரேங்கிங் வழங்கும். அதன்படி இந்தாண்டும் ரேங்கிங் வெளியிடப்பட்டது.
ஏர் ஹெல்ப்: ஐரோப்பாவைச் சேர்ந்த இந்த ஏர் ஹெல்ப் ஏஜென்சி வெளியிட்டுள்ள ரேங்கிங்கில் உலகின் மோசமான விமான நிறுவனங்களில் ஒன்றாக இண்டிகோ பட்டியலிடப்பட்டுள்ளது. இந்தியாவின் மிகப் பெரிய விமான நிறுவனமான இண்டிகோ இந்த லிஸ்டில் இடம்பெற்று இருப்பது பலருக்கும் ஆச்சரியத்தை அளிப்பதாகவே இருக்கிறது.
அதாவது ஏர் ஹெல்ப் அமைப்பின் 2024 ரேங்கிங்கில் இண்டிகோவுக்கு வெறும் 4.80 மார்க் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 109 நிறுவனங்களைக் கொண்ட விமான நிறுவனங்களின் லிஸ்டில் இண்டிகோ 103வது இடத்தைப் பிடித்துள்ளது. சரியான நேரத்தில் விமானத்தில் இயக்குவது, வாடிக்கையாளர்கள் சொல்லும் கருத்து, இழப்பீடுகளை பிராசஸ் செய்வது உள்ளிட்டவற்றைக் கருத்தில் கொண்டு இந்த மதிப்பெண்களை வழங்கியுள்ளதாக ஏர் ஹெல்ப் அமைப்பு தெரிவித்துள்ளது.
ஏர் இந்தியா: இந்த லிஸ்டில் இந்தியாவின் மற்றொரு விமான நிறுவனமான டாடாவின் ஏர் இந்தியாவும் இடம் பிடித்துள்ளது. ஏர் இந்தியா நிறுவனத்திற்கு 6.15 மார்க் தரப்பட்டுள்ள நிலையில், அது இந்த லிஸ்டில் 61வது இடத்தைப் பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது..
இந்த லிஸ்டில் பெல்ஜியம் நாட்டை சேர்ந்த பிரஸ்ஸல்ஸ் ஏர்லைன்ஸ் 8.12 மதிப்பெண்களுடன் முதலிடத்தைப் பிடித்துள்ளது.. தொடர்ந்து கத்தார் நாட்டின் கத்தார் ஏர்வேஸ் (8.11) மற்றும் அமெரிக்காவின் யுனைடெட் ஏர்லைன்ஸ் (8.04) மதிப்பெண்கள் உடன் டாப் 3 இடங்களைப் பிடித்துள்ளது. ஆப்பிரிக்க நாடான துனிசியா நாட்டை சேர்ந்த துனிசா ஏர் விமான நிறுவனம் இதில் கடைசியாக 109வது இடத்தை பிடித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.
விளக்கம்: இந்தியாவின் மிகப் பெரிய விமான நிறுவனமாக இருக்கும் இண்டிகோ இந்த லிஸ்டில் 103ம் இடத்தை பிடித்தது பலருக்கும் ஆச்சரியத்தைக் கொடுத்தது. இதற்கிடையே இது தொடர்பாக இண்டிகோ மிக முக்கிய விளக்கத்தைக் கொடுத்துள்ளது. அதாவது இந்த சர்வேயில் போதியளவில் இந்தியப் பயணிகளிடம் கருத்து கேட்கவில்லை என்றும் பிற சர்வே முறைகளையும் உரிய முறையில் பின்பற்றவில்லை என்று கூறப்பட்டுள்ளது.
இது தொடர்பாக இண்டிகோ வெளியிட்டுள்ள அறிக்கையில், "மத்திய அரசின் டிஜிசிஏ அதாவது டைரக்டரேட் ஜெனரல் ஆஃப் சிவில் ஏவியேஷன் அமைப்பு, ஒவ்வொரு மாதமும் விமானத்தின் நேரம் தவறாமை, விமானச் சேவை குறித்த டேட்டாவை வெளியிடுகிறது. அதில் குறித்த நேரத்தில் இயங்குவதில் இண்டிகோ நிறுவனம் தொடர்ந்து அதிக மதிப்பெண்களைப் பெற்றுள்ளது. வாடிக்கையாளர் புகார் விகிதமும் அதில் மிகக் குறைவாகவே இருக்கிறது.
வழிகாட்டுதல்கள்: அதேநேரம் இப்போது வெளியிட்டுள்ள ரேங்கிங் என்பது ஏர் ஹெல்ப் என்ற ஐரோப்பிய ஏஜென்சி வெளியிட்ட ஒன்றாகும். அதில் போதியளவில் இந்தியப் பயணிகளிடம் கருத்துக் கேட்கப்படவில்லை. மேலும், விமானத் துறையில் சர்வே நடத்த உள்ள வழிமுறைகள் அல்லது இழப்பீட்டு வழிகாட்டுதல்களை அவர்கள் கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லை. இதனால் அந்த ரேங்கிங்கின் நம்பகத்தன்மையில் சந்தேகம் ஏற்படுகிறது.
இந்தியாவின் மிகவும் விருப்பமான விமான நிறுவனமாக இண்டிகோ தொடர்ந்து இருக்கிறது. எனவே, இந்த ரேங்கிங்கை இண்டிகோ சந்தேகிக்கிறது. சரியான நேரத்தில் விமானத்தை இயக்குவது, குறைந்த விலையில் டிக்கெட் ஆகியவற்றில் சிறப்பாகவே இண்டிகோ இருக்கிறது" என்று அதில் கூறப்பட்டுள்ளது.
இந்தியாவில் உள்நாட்டு விமான போக்குவரத்தில் 60% சந்தையுடன் இண்டிகோ தான் டாப் இடத்தில் இருக்கிறது. கடந்த 2023ஆம் ஆண்டில் மட்டும் இண்டிகோ நிறுவனத்தில் சுமார் 10 கோடி பயணிகள் பணித்துள்ளனர்.
சிவில் போக்குவரத்து இயக்குநரகம்: மத்திய அரசின் சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகத்தின் டேட்டா கூட ஏர் ஹெல்ப் அமைப்பின் சர்வேவுக்கு எதிராகவும் இண்டிகோ சொல்வதை ஆதரிப்பதாகவே இருக்கிறது. அதாவது 10,000 பயணிகளுக்கு இண்டிகோ நிறுவனத்தில் வெறும் 0.2 புகார்கள் மட்டுமே வருவதாக அதில் கூறப்பட்டுள்ளது. டிஜிசிஏ அறிக்கையிலும் இந்தியாவில் மிகக் குறைவான புகார் உள்ள விமான நிறுவனங்களில் ஒன்றாகவும் இண்டிகோ இருப்பதாகக் கூறப்பட்டுள்ளது.
இண்டிகோ மோசமான நிறுவனம் என்று ஏர் ஹெல்ப் அறிக்கை சொல்ல.. டிசிஜிஏ தரவுகளோ அதற்கு நேர்மாறாக இருக்கிறது. நீங்கள் இண்டிகோவில் பயணம் செய்திருந்தால் நீங்கள் சொல்லுங்கள்.. உங்கள் அனுபவம் எப்படி இருந்தது.
Weather Data Source: Wettervorhersage 21 tage