நாம் தமிழரின் 11 முக்கிய பொறுப்பாளர் விலகல்.. திருட்டு பழி சுமத்துவதாக பரபரப்பு குற்றச்சாட்டு

post-img
நாகப்பட்டினம்: நாம் தமிழரின் நாகை மாவட்ட 11 முக்கிய பொறுப்பாளர் உள்பட 50க்கும் மேற்பட்டவர்கள் திடீரென்று அந்த கட்சியில் இருந்து விலகி உள்ளனர். அதோடு திருட்டு பழி சுமத்துவதாக அவர்கள் பரபரப்பான குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனர். சீமானின் நாம் தமிழர் கட்சி அரசியலில் யாருடனும் கூட்டணி வைக்காமல் தனித்தே போட்டியிட்டு வருகிறது. இந்நிலையில் தான் சில வாரங்களாக நாம் தமிழர் கட்சியில் இருந்து பல்வேறு மாவட்ட நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகி வருகின்றனர். அந்த வகையில் தற்போது நாகை தொகுதி பொருளாளராக இருந்த நாகராஜன், செய்தி தொடர்பாளராக செயல்பட்ட அகமது, இளைஞரணி செயலாளராக இருந்த பிரவீன் உள்பட 11 முக்கிய பொறுப்பாளர்கள் உள்பட 50க்கும் அதிகமானவர்கள் நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகி உள்ளனர். இதுதொடர்பாக நாகை தொகுதி நாம் தமிழர் கட்சியின் மாஜி பொருளாளர் நாகராஜன் கூறுகையில், ‛‛நாம் தமிழர் கட்சியில் ஒருங்கிணைப்பாளராக இருக்க கூடிய சீமான் மீது நம்பிக்கையில்லாததை சமீப காலமாக உணர்கிறோம். காரணம் நாகை தொகுதி, நாகை மாவட்டத்தில் நாம் தமிழர் கட்சி வளர்ந்து வந்த வேகத்தை விட வேகமாக சரிந்து வருகிறது. இதற்கு இங்குள்ள பொறுப்பாளர்களின் பொறுப்பற்ற தன்மை தான் காரணம். நாங்கள் களத்தில் பயணிப்பதால் அது எங்களுக்கு தெரிகிறது. நாங்கள் களத்தில் பயணிக்கும் நேரத்தில் சிறுசிறு தவறு என்றால் அதனை கடந்து சென்று விடலாம். ஆனால் கட்சியின் இயக்கம், குடும்பம் என்று சொல்லும்போது சிறுசிறு முரண்பாடு, கருத்து வேறுபாடு இருக்கும். அது எந்த பிரச்சனையும் இல்லை. ஆனால் தொடர்ந்து தவறு செய்தல், பழிவாங்கும் போக்கு, தனக்கு கீழ் உள்ளவர்களை அடிமை போல் வைத்திருக்கும் சூழல் உள்ளிட்டவை நடக்கிறது. அதேபோல் கட்சி பிடிக்கவில்லை என்று சென்றால் அவர்களை விட்டு விட வேண்டும். ஆனால் கட்சியை விட்டு செல்வோர் மீது பழிசுமர்த்தும் செயல் நடக்கிறது. ஒருவர் மீது பழிசுமர்த்தும்போது அவர் மட்டுமின்றி அவரது குடும்பமும் சமுதாயத்தில் பாதிக்கும். கட்சியில் சேர்க்கும்போது அவர்களை வரவேற்பதும், கட்சியை விட்டு செல்லும்போது அவதூறு பரப்பும் போக்கு உள்ளது. திருட்டு பழி சுமர்த்துவது, துரோகிகள், கட்சியை உடைப்பவர் என்று கூறுகின்றனர். நாகை மாவட்டத்தில் உள்ள 2 தொகுதிகளில் தலா 8 பேர் கொண்ட கமிட்டி போட்டுள்ளனர். இந்த கமிட்டியினர் கட்சியில் இருந்து நிர்வாகிகளை நீக்கி வருகின்றனர். நாகை தொகுதி பொருளாளராக இருந்த என்னை உள்பட பலரை நீக்கி உள்ளனர். ஏன் நீக்கினார்கள் என்று விளக்கம் அளிக்கவில்லை. இதனால் விலகி உள்ளோம்'' என்றார்.

Related Post