விடுதலை 2 பேசிய அரசியல்.. படம் பார்த்ததுமே வெற்றிமாறன், விஜய் சேதுபதியை பாராட்டிய திருமாவளவன்!

post-img
சென்னை: விடுதலை 2 படத்தைப் பாராட்டி, படத்தின் இயக்குநர் வெற்றிமாறன், நடிகர் விஜய் சேதுபதி ஆகியோருக்கு சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார் விசிக தலைவர் திருமாவளவன். 'விடுதலை 2' திரைப்படம் முக்கியமான அரசியலைப் பேசியுள்ளது என திருமாவளவன் கூறியுள்ளார். பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் 'விடுதலை இரண்டாம் பாகம் கடந்த வெள்ளிக்கிழமை அன்று திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களின் அமோக வரவேற்பினை பெற்று வருகிறது. முதல் பாகத்துக்கு கிடைத்த பிரம்மாண்ட வெற்றியை தொடர்ந்து இரண்டாம் பாகத்திற்காக நீண்ட நாட்களாக ரசிகர்கள் காத்திருந்த நிலையில், விடுதலை 2 ரிலீஸ் ரசிகர்களை உற்சாகம் கொள்ள வைத்தது. விடுதலை முதல் பாகம் முழுவதும் சூரியை சுற்றியே கதை நகர்ந்த நிலையில், வாத்தியராக நடித்திருந்த விஜய் சேதுபதி போலீசிடம் சிக்குவதோடு 'விடுதலை' படம் முடிந்திருந்தது. இரண்டாம் பாகத்தின் கதை, விஜய் சேதுபதியின் இளமைக்காலம், அவர் வாத்தியாராக மாறுவது, ஆயுதம் ஏந்திய போராட்டத்தை அவர் முன்னெடுக்கும் சூழலை உருவாக்கியது யார்? என்ற பல கேள்விகளுக்கு விடையளிப்பதாக அமைந்துள்ளது. தமிழ்நாட்டில் இடதுசாரி இயக்கங்கள் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக முன்னெடுத்த போராட்டங்கள் என பலவற்றை 'விடுதலை 2' படம் பேசியுள்ளதாக பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் விசிக தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான திருமாவளவன் இன்று 'விடுதலை 2' படத்தை பார்த்தார். அதைத்தொடர்ந்து, விடுதலை 2 படத்தைப் பாராட்டி, படத்தின் இயக்குநர் வெற்றிமாறன், நடிகர் விஜய் சேதுபதி ஆகியோருக்கு சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். அதைத்தொடர்ந்து, செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார் திருமாவளவன். திருமாவளவன் பேசுகையில், "இயக்குநர் வெற்றிமாறனின் இயக்கத்தில், விஜய் சேதுபதி நடிப்பில் வெளியாகியுள்ல விடுதலை 2 படம் பார்த்தோம். விடுதலை 2 திரைப்படம் முக்கியமான அரசியலைப் பேசியுள்ளது. இடதுசாரி அரசியலின் தேவையை உணர்ந்து, முக்கியமான காலச்சூழலில் விடுதலை 2 வெளியாகி இருக்கிறது. வலதுசாரி அரசியல் நாட்டில் ஆதிக்கம் செலுத்தி மேலோங்கி வரக்கூடிய நிலையில் 'விடுதலை 2' திரைப்படம், இடதுசாரி அரசியல் கருத்தை முன்னெடுத்து இருப்பது வரவேற்கத்தக்கது. இயக்குநர் வெற்றிமாறன் இதுவரை இயக்கியுள்ள அனைத்துப் படங்களுமே மக்கள் செல்வாக்கோடு மாபெரும் வரவேற்பைப் பெற்றிருக்கிறது. அந்தவகையில் இதுவும் ஒரு வெற்றிகரமான திரைப்படம். அதேவேளையில் இந்தப் படம் பேசியிருக்கிற அரசியல் மிக முக்கியத்துவம் வாய்ந்தது. நாடாளுமன்ற ஜனநாயகத்தை ஏற்றுள்ள கம்யூனிஸ்ட் கட்சிகள் பேசுகிற அரசியல் ஒன்று, நாடாளுமன்ற ஜனநாயகத்தை மறுத்து மக்களை அரசியல்படுத்தி, புரட்சிகர ஜனநாயகத்தை வென்றெடுக்க வேண்டும் எனப் பேசுகிற அரசியல் இன்னொன்று. மக்களை அரசியல்படுத்தி, அமைப்பாக்கி போர்க்குணம் மிக்கவர்களாக வளர்த்தெடுக்கக்கூடிய அரசியல் இன்று இந்தியாவில் மாவோயிஸ்ட் அரசியல் என அழைக்கப்படுகிறது. இந்த வகை அரசியலை நுட்பமாக விவாதிக்கிற களமாகத்தான் விடுதலை பாகம் 2 அமைந்துள்ளது. கம்யூனிச தத்துவம் எப்போதும் தோற்றதில்லை. அதை கையாண்ட களம், காலம், முறை உள்ளிட்ட பிழைகளால் அதைக் கையாண்ட நபர்கள் தோல்வியைத் தழுவி இருக்கலாம். தமிழ்த் தேசியம் என்பது உணர்வு மட்டுமல்ல; அது விரிவானது ஆழமானது வலுவானது. ஆதிக்கம், சுரண்டல், ஒடுக்குமுறை எந்த வடிவில் இருந்தாலும் எதிர்க்க வேண்டும். கோட்பாடு இல்லாத தலைவர்கள், ரசிகர்களைத்தான் உருவாக்குவார்கள் என்ற வசனம் யாரையும் மனதில் வைத்து இந்த வசனம் எழுதப்படவில்லை. உலகத்துக்கே பொருந்தக்கூடிய கருத்து இது." எனத் தெரிவித்துள்ளார்.

Related Post