வ.உ.சி. குறித்து தொடர் ஆய்வு! ஆ.இரா.வெங்கடாசலபதிக்கு சாகித்ய அகாடமி விருது அறிவிப்பு!

post-img
சென்னை: வ.உ.சி குறித்து தொடர்ந்து ஆய்வுகளை மேற்கொண்டு, அதை நூலாக எழுதி வெளியிட்டு வருகிறார் ஆ.இரா.வெங்கடாசலபதி. இவருடைய 'திருநெல்வேலி எழுச்சியும் வ.உ.சி.யும் 1908' என்கிற நூலுக்காக 2024ம் ஆண்டுக்கான சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டிருக்கிறது. ஆங்கிலேயர்களின் ஆதிக்கத்திற்கு எதிராக பல்வேறு வழிகளில் சுதந்திர போராட்டம் பற்றி எரிந்த காலம் அது. எழுத்து, கலை, போராட்டம், ஆயுதம் தாக்கிய போராட்டம் என விடுதலைக்கான போர் தீவிரமடைந்திருந்தது. இதில் வ.உ.சி தனித்துவ கவனம் பெற்றவராக இருந்தார். ஆங்கிலேயர்கள் வணிகம் செய்யதானே இந்தியாவுக்கு வந்தார்கள்? அவர்களால் மட்டும்தான் வணிகம் செய்ய முடியுமா? நான் செய்து காட்டுகிறேன். அவர்களை திவாலாக்கி ஓடவிடுகிறேன் என்று முழக்கமிட்டு கப்பலோட்டினார் வ.உ.சி. சொகுசான குடும்பத்தில் பிறந்திருந்தாலும், வளர்ந்தது எல்லாம் விடுதலை உணர்வோடுதான். படிப்பை முடித்துவிட்டு வக்கீலாக மாறிய வ.உ.சி, ஏழை மக்களுக்கான சட்ட போராட்டத்தை கையில் எடுத்தார். இந்த போராட்டம் அவருடைய விடுதலை உணர்வுக்கு மிகுந்த பசியாற்றியது. தொடக்கத்தில் சிறிய வழக்குகளில் கவனம் செலுத்தி வந்த அவர், பின்னர் நேரடியாக பெரும் பண்ணையாளர்களுக்கு எதிராகவும், அவர்கள் போற்றும் ஆங்கிலேயர்களுக்கு எதிராகவும் போராட தொடங்கினார். இது சாமானிய மக்கள் தொடங்கி பல்வேறு தரப்பு மக்கள் வரை, வ.உ.சி மீது நன்மதிப்பை ஏற்படுத்தியது. இவரது கவனம் முழுவதும் இப்போது, ஆங்கிலேயர்களை எப்படி விரட்டுவது என்பதில் இருக்கிறது. இதற்காக பெரும் திட்டத்தை போடுகிறார். முதலில் ஆங்கிலேயர்களுக்கான பலம் என்ன என்பதை ஆய்வு செய்கிறார். அதில் பொருளாதாரம்தான் பலம் என்பது தெரியவருகிறது. பொருளாதாரத்திற்கு ஆங்கிலேயர்கள் கப்பல் வணிகத்தையே பெரியதாக நம்பியிருந்தனர். ஆக கப்பல் வணிகத்தை கைப்பற்றுவதன் மூலம் ஆங்கிலேயர்களை திவாலாகி ஓட வைக்க முடியும் என்று நம்புகிறார். இதற்கான முயற்சிகள் தீவிரமாக நடக்கின்றன. ஆனால் இதை மோப்பம் பிடித்த ஆங்கிலேயர்கள் வ.உ.சியை கைது செய்கின்றனர். இவரது கைது நடவடிக்கை மக்கள் மத்தியில் காட்டு தீ போல பரவுகிறது. மக்களின் உணர்ச்சி உச்சத்துக்கு செல்கிறது. 1908ம் ஆண்டு மார்ச் மாதம் 13ம் தேதி, அன்று வெள்ளிக்கிழமை. இந்த செய்தி கேட்ட மக்கள் கூட்டம் கூட்டமாக தெருவில் போராட்டத்திற்காக குதிக்கின்றனர். வேலை நிறுத்தம் நடக்கிறது. ஆங்கிலேய அரசு போராட்டத்தை ஒடுக்குகிறது. ஆனாலும் சற்றும் பின் வாங்காத மக்கள், பொது சொத்துக்களை சேதப்படுத்தி ஒடுக்குமுறைக்கு பதிலளிக்கின்றனர். இறுதியாக அரசு தனது கோர முகத்தை காட்டுகிறது. துப்பாக்கிச்சூடு நடத்தி மக்களை கலைக்கிறது. 4 பேர் சம்பவ இடத்திலேயே குண்டுக்கு பலியாகி மாண்டனர். 100க்கும் மேற்பட்டோர் கைதாகிறார்கள். மக்கள் மீது திமிர் வரியை அரசு விதிக்கிறது. 6 மாத காலத்திற்கு தூத்துக்குடியில் தண்டக்காவல் படையை நிறுத்தியது. இந்த பகுதியில் இதற்கு முன்னர் இப்படி ஒரு கிளர்ச்சி நடக்கவில்லை என்று சொல்லும் அளவுக்கு மக்கள் போராட்டம் இருந்தது. இந்த சம்பவத்தை மையாக கொண்டுதான் ஆ.இரா.வெங்கடாசலபதி, 'திருநெல்வேலி எழுச்சியும் வ.உ.சி.யும் 1908' ஆய்வு நூலை எழுதியுள்ளார். இந்த போராட்டத்தில் பங்களித்த எளிய மக்களை வெங்கடாசலபதி வெளியுலகத்திற்கு கொண்டு வந்திருக்கிறார். தமிழ்நாட்டில் வ.உ.சி குறித்து ஆய்வுகளை மேற்கொள்ள சொல்லிக்கொள்ளும்படியாக ஆய்வாளர்கள் இருந்தாலும், வெங்கடாசலபதியின் ஆய்வு உண்மைக்கு நெருக்கமானதாக இருப்பதாக எழுத்தாளர்களால் பாராட்டப்படுகிறது. சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவனத்தில் பேராசிரியராக இருக்கும் இவர், மனோன்மணியம் சுந்தரனார், சென்னை, சிகாகோ, சிங்கப்பூர் பல்கலைக்கழகங்களில் பணியாற்றி இருக்கிறார். வி.கே.ஆர்.வி. ராவ் விருதும் (2007) விளக்கு புதுமைப்பித்தன் விருதும் (2018) பெற்றிருக்கிறார். சிறு வயது முதல் வ.உ.சி குறித்து தேடி தேடி படிக்கும் பழக்கத்தை கொண்டிருந்த இவர் தனது படைப்பின் உச்சமாக 'திருநெல்வேலி எழுச்சியும் வ.உ.சி.யும் 1908' என்கிற நூலை கொடுத்திருக்கிறார். இந்த நூலுக்கு தற்போது 2024க்கான சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டிருக்கிறது.

Related Post