சென்னை: அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்வம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரம் குறித்து காவல்துறை மீது சந்தேகம் இருப்பதாகவும், குற்றம் தொடர்பாக எஃப்ஐஆர்-ஐ வெளியிட்ட காவலர் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.
அதாவது, “அண்ணா பல்கலைக்கழக வளாகத்திற்குள் மாணவி ஒருவர் சமூக விரோதிகளால் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது. இந்நிலையில் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டவர், மன உளைச்சலுக்கும், வலிகளுக்கும் துயரத்துக்கும் உள்ளான சூழலிலும் தைரியமாக காவல்துறையில் புகார் அளித்துள்ளார். அவர் அளித்த புகார் காவல்துறையின் முதல் தகவல் அறிக்கையாக (FIR) இணையத்தில் வெளிப்படையாக வெளியிடப்பட்டுள்ளது. அதில், பாதிக்கப்பட்ட மாணவியின் பெயர், முகவரி, செல்போன் எண் என அனைத்து விபரங்களும் தெரியும் வண்ணம் காவல்துறை வெளியிட்டுள்ளது.
பாலியல் வன்முறை வழக்கில் பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயர் மற்றும் அடையாளங்களை வெளியிடக் கூடாது என உச்சநீதிமன்ற வழிகாட்டல் முறைகளும், விசாகா குழுவின் சிபாரிசுகளும் உள்ள சூழ்நிலையில் பாதிக்கப்பட்ட பெண்ணின் முழு விபரத்தையும் பொதுவெளியில் வெளியிட்டது ஏன்?. காவல்துறையினரின் இச்செயல் வன்மையான கண்டனத்திற்குரியதாகும்.
பாதிக்கப்பட்ட பெண்ணும், அவர்களை சார்ந்தவர்களும் சொல்லொணா துயரத்தை வலியை சுமந்து கொண்டிருக்கும் இச்சூழலில், பாதிக்கப்பட்டவர்களோடு சட்ட ரீதியாக, மனிதநேயத்தோடு நின்று நீதிக்காக செயலாற்ற வேண்டிய காவல்துறை அரசு நிர்வாக அமைப்புகள் அதற்கு எதிர்திசையில் செயல்படுவது எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ளத்தக்கதல்ல. எனவே, மாணவியின் எப்.ஐ.ஆரை வெளியிட்ட பெருநகர சென்னை மாநகர காவல்துறை ஆணையர் உள்ளிட்டு இதற்குக் காரணமான அனைவரும் மீதும் சட்ட ரீதியான நடவடிக்கையை தமிழ்நாடு அரசு உடனே மேற்கொள்ள வேண்டும்.
மேலும், இவ்வழக்கில் குற்றவாளி ஒருவர் கைது செய்யப்பட்டு விசாரணை செய்யப்பட்டுள்ள நிலையில் மற்ற குற்றவாளிகள் இதுவரை கைது செய்யப்படாததும், அவர்களின் விபரங்களை வெளியிடாமல் இருப்பதும் காவல்துறை மீது பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளது. எனவே, இவ்வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் அனைவரையும் விரைந்து கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு நடவடிக்கைகள் மேற்கொள்வதை தமிழ்நாடு அரசு உறுதி செய்ய வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது” என சிபிஎம் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.
அதேபோல திருமாவளன் கூறுகையில், “இந்த சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளி கைது செய்யப்பட்டிருப்பது ஆறுதல் அளிக்கிறது. இந்தக் குற்றச் செயலில் தொடர்புடையவர்கள் வேறு யார் இருந்தாலும் அவர்கள் உடனடியாக கைது செய்யப்பட வேண்டும். வழக்கில் குற்றவாளிகளுக்கு பினை உடனடியாக வழங்கக் கூடாது. குற்றவாளியை சிறையில் வைத்தவரே விசாரணையை மேற்கொள்ள வேண்டும். குற்றவாளிகளுக்கு உரிய தண்டனையை உரிய காலத்தில் பெற்று தர வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்” என்று கூறியுள்ளார்.
எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கூறுகையில், “அண்ணா பல்கலைக்கழக வளாக பாலியல் வழக்கில், காவல்துறை மாணவியின் தனிப்பட்ட விவரங்களுடன் FIR-ஐ எப்படி இணையத்தில் வெளியிட்டது? பாதிக்கப்பட்டவரின் பெயரை வெளியிடக்கூடாது என்ற அடிப்படை கூட திராவிட மாடல் அரசின் காவல்துறைக்கு தெரியாதா?
காமக்கொடூரன் ஞானசேகரன் அண்ணா பல்கலைக்கழகத்தில் மேலும் ஒரு மாணவியை இதேபோன்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளதாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது. இவனை இத்தனை நாட்கள் சுதந்திரமாக நடமாடவிட்டதற்கு திமுக அரசின் காவல்துறையே முழு பொறுப்பு!
ஞானசேகரன் திமுக உறுப்பினரே இல்லை என்று அமைச்சர் ரகுபதி பேட்டியளித்துள்ள நிலையில், அவர் திமுகவின் பகுதி துணை அமைப்பாளர் பொறுப்பில் உள்ளதற்கான திமுக நோட்டிஸ், முரசொலி நாளேடு செய்தி உட்பட பல ஆதாரங்கள் சமூக வலைத்தளங்களில் வலம் வருகின்றன.
கைது செய்யப்பட்ட ஞானசேகரன், நேற்று இரவே விடுவிக்கப்பட்டு, மீண்டும் கைது செய்யப்பட்டதாக செய்திகள் வருகின்றன. இவ்வளவு முக்கியமான வழக்கின் குற்றவாளியை எதற்கு காவல்துறை விடுவிக்க முயற்சித்தது? ஆளுங்கட்சியான திமுகவில் ஞானசேகரன் பொறுப்பில் இருப்பதை இத்துடன் பொருத்திப் பார்த்தால், இவ்வழக்கில் அரசியல் அழுத்தம் இருப்பதற்கான சந்தேகம் மேலும் வலுக்கிறது.
FIR-ல் ஞானசேகரனுடன் இன்னொரு நபருக்கும் இதில் தொடர்பு உள்ளது தெரியவந்துள்ளது. யார்அந்த நபர்? யாரைக் காப்பாற்ற முயற்சிக்கிறது இந்த திமுக அரசு? பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு முழு பாதுகாப்பு அளிக்க வேண்டியது திராவிட மாடல் அரசின் பொறுப்பு! இனி இந்த வழக்கை திமுக அரசின் காவல்துறை விசாரிப்பதற்கு தார்மீகத் தகுதியில்லை! எந்தவித அரசியல் இடையூறும் இன்றி, பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நீதி வழங்க, இந்த வழக்கை CBI விசாரிக்க வேண்டும்!” என்று வலியுறுத்தியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
Note:
The content shared here is sourced from publicly available internet platforms, and we do not claim ownership. We are not responsible for any inaccurate or fake information.