தனியார்மயம்+நவ தாராளமயம்! இன்றைக்கும் சர்ச்சையை கிளப்பும் மன்மோகன் சிங்கின் பொருளாதார திட்டங்கள்

post-img
டெல்லி: முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உடல் நலக்குறைவு காரணமாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சற்று முன்னர் அனுமதிக்கப்பட்டிருந்தார். தற்போது அவர் உயிரிழந்துவிட்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. அவர் மறைந்தாலும், அவர் கொண்டுவந்த பொருளாதார திட்டங்கள் குறித்த விவாதங்கள் இன்றளவும் மறையாமல் தொடர்கிறது. பொருளாதார நெருக்கடி: இந்தியா தொடக்கத்திலிருந்தே சோசலிச உணர்வுடன்தான் வளர்ந்தது. அதன் தலைவர்கள் நேரு தொடங்கி இந்திரா காந்தி வரை அப்படித்தான் வளர்த்தார்கள். சோவியத் ஒன்றியத்திலிருந்து பெறப்பட்ட படிப்பினைகள் இதற்காக பெரிய அளவில் உதவி செய்திருந்தன. முதல் ஐந்தாண்டு திட்டம் தொடங்கி பல்வேறு பொருளாதார திட்டங்கள் சோவியத் ரஷ்யாவை பார்த்துதான் நாம் பின்பற்றியிருந்தோம். ஆனால் அதுவே நமக்கு பெரிய பின்னடைவை கொடுத்துவிட்டது. ஏற்றுக்கொள்ளப்பட்ட பொருளாதார திட்டங்களை சரியாக பின்பற்றாததால், ஏறத்தாழ அனைத்து பொதுத்துறையிலும் நஷ்டம் ஏற்பட்டது. உதாரணத்திற்கு ஏர் இந்தியாவை சொல்லலாம். அமைச்சர்கள், எம்பியாக இருந்தவர்கள் என பல அரசாங்க புள்ளிகள் அநியாயத்திற்கு இந்த விமான சேவையை பயன்படுத்தி வந்தனர். மறுபுறம் தங்களுக்கும், தங்கள் உறவினர்களுக்கும் ஏர் இந்தியா விமான சேவையை, அந்த நிறுவனத்தை சேர்ந்த தலைக்கட்டுகள் பலரும் முறைக்கேடாக பயன்படுத்தியதாக புகார் மேல் புகார் எழுந்தன. ஏறத்தாழ அனைத்து பொதுத்துறையிலும் இதே கதைதான். கேட்க கேட்பாறற்று நிறுவனங்கள் செயல்பட்டுக்கொண்டிருந்தன. இது நஷ்டத்தை நோக்கி நிறுவனத்தை தள்ளியது. இதை சரி செய்ய வேண்டிய பொறுப்பில் அரசு இருந்தது. ஆனால் அதை செய்வதற்கு பதிலாகத்தான் புதிய பொருளாதார கொள்கையை அப்போதைய அரசு அறிவித்தது. அதன் மூலகர்த்தாவாக இருந்தவர்தான் மன்மோகன் சிங். சோவியத் ரஷ்யா 1990களின் தொடக்கத்தில் உடைந்துவிட்டது. சோசலிசத்தை கனவு கண்ட பல நாடுகளுக்கு இது ஏமாற்றமாக இருந்தது. இந்த காலத்தில்தான் இந்தியா அமெரிக்காவுடன் தனது உறவை பலப்படுத்த தொடங்கியது. இந்த உறவின் மூலம் பிறந்த குழந்தைகள்தான் தராளமயமும், தனியார்மயமும், உலகமயமும். நாட்டின் பொருளாதாரம் அதள பாதாளம் நோக்கி சென்றுக்கொண்டிருந்த நேரத்தில்தான் அமெரிக்காவின் வழிக்காட்டுதலின்படி, உலக வங்கியிடம் இந்தியா கடன் வேண்டி நின்றது. உலக வங்கியும் தாராளமாக கடன் கொடுத்தது. ஆனால் அதற்கான விதிமுறைகள் சில இருந்தன. மேற்குறிப்பிட்ட 3 மயங்கள்தான் உலக வங்கியின் பிரதான விதிமுறைகள். முதலில் அந்நிய முதலீடை ஈர்ப்பது என்றும், அதன் மூலம் வேலை வாய்ப்பு, தொழில் வளர்ச்சி, பொருளாதார வளர்ச்சியை ஏற்படுத்துவது என்றும் வி.பி.நரசிம்ம ராவ் தலைமையிலான அரசு முடிவெடுத்தது. இதற்கான செயல் திட்டத்தை மன்மோகன் சிங் போட்டு கொடுத்தார். அதன்படி நாட்டில் தனியார் ஆதிகம் தொடங்கியது. கல்வி கொடுப்பதில், மருத்துவம் கொடுப்பதில், குடிநீர் கொடுப்பதில் ஆகியவற்றிலிருந்து அரசு விலகிக்கொள்ள வேண்டும் அல்லது தனியார்கள் அனுமதிக்கப்பட வேண்டும் என்கிற உலக வங்கியின் கொள்கைகள் இந்தியாவில் கொஞ்சம் கொஞ்சமாக அமலாகின. வால்மார்ட்டை நுழையவிட்டது, அமெரிக்காவுடன் அனுசக்தி ஒப்பந்தம், சில்லறை வணிகத்தில் 51% அந்நிய முதலீடு, உள்நாட்டு போக்குவரத்தில் 49%, மின்சார துறையில் 49%, தகவல் ஒலிபரப்பு துறையில் 74% என அந்நிய மூலதனங்கள் அனுமதிக்கப்பட்டது எல்லாம் மன்மோகன் சிங் காலத்தில்தான். இவை அனைத்தும் இந்தியாவில் வேலை வாய்ப்பை ஏற்படுத்தியதா என்று கேட்டால், அதற்கு பதில் 'ஆம்' என்றுதான் இருக்கிறது. ஆனால் அவை அனைதும் சமூக பாதுகாப்பற்ற வேலைகள். திடீரென உருவான தனியார் நிறுவனங்கள் அள்ளி அள்ளி வேலையை கொடுத்தன. ஆனால் ஊதியம் மிக குறைந்த அளவில்தான் இருந்தன. அதே நேரம், வேலையை விட்டு எப்போது வேண்டுமானாலும் தூக்குவார்கள் என்கிற நிலையை தனியார்மயமும், உலகமயமும் ஏற்படுத்தியது. அன்று வேலைவாய்ப்புகள் குறித்து மன்மோகன் உருவாக்கிய அச்சம் இன்று வரை இளைஞர்கள் மத்தியில் நீடித்துக்கொண்டேதான் இருக்கின்றன. நெருக்கடி காலத்தில் இந்தியாவை மீட்க வந்த மீட்பர் என்று இன்றும் மன்மோகன் புகழப்பட்டாலும், கொஞ்சம் முயற்சி எடுத்து பொதுத்துறையை ஊழல் இல்லாமல் காப்பாற்றியிருந்தால் இன்றைய இளைஞர்கள் சமூக பாதுகாப்பாற்ற வேலை குறித்து இப்படி புலம்பிக்கொண்டிருந்திருக்க மாட்டார்கள். அந்த வகையில் மன்மோகன் சிங் இன்றும் இளைஞர்கள் மத்தியில் வாழ்ந்துக்கொண்டுதான் இருக்கிறார். Note: The content shared here is sourced from publicly available internet platforms, and we do not claim ownership. We are not responsible for any inaccurate or fake information.

Related Post