சென்னை: 2024 ஆம் வருடம் இன்னும் சில நாட்களில் நிறைவடையப் போகிறது. ஒவ்வொரு வருடமும் எண்ணிலடங்கா நினைவுகளை விட்டுச் செல்லும். அந்த வகையில் 2024 ஆம் ஆண்டு இந்தியாவுக்கு ஏராளமான இயற்கை சீற்றங்கள் ஆறாத வடுவாக உள்ளன. அந்த துயர் சம்பவங்களின் தொகுப்பை இங்கு காணலாம்... (Natural calamities in 2024)
வயநாடு நிலச்சரிவு: கடவுளின் தேசமான கேரளாவில் இயற்கை பேரிடர் புதிது இல்லை. ஆனால் 2024 ஆம் ஆண்டு தேசமே கண்ணீர் விடுமளவுக்கு துயரம் நிகழ்ந்தது. ஜூலை 30 ஆம் தேதி அதிகாலை வயநாடு மாவட்டம் முண்டக்கை, சூரல்மலை பகுதிகளில் அடுத்தடுத்து சக்தி வாய்ந்த நிலச்சரிவு ஏற்பட்டது. விடாது பெய்த கனமழை, மலையின் ஒரு பகுதியை சரிய வைத்தது. பல நூற்றுக்கணக்கான ராட்சத பாறைகளும், மரங்களும், சகதிகளும் அந்த கிராமங்களை மொத்தமாக மூழ்கடித்தன. சுமார் 400க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். 50க்கும் மேற்பட்ட மக்களின் நிலை என்னவானது என்று இப்போது வரை தெரியவில்லை. 400க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். 1500 வீடுகள் தரைமட்டமாகின. ராணுவம், தேசிய, மாநில பேரிடர் மீட்புப் படை என்று மாதக்கணக்கில் மீட்புப் பணிகள் நடந்தன. உயிரிழந்தவர்கள், காயமடைந்தவர்கள், சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் என்று ஒவ்வொருவரின் பின்னாலும் ஒரு சோகக் கதை நாட்டையே உலுக்கியது.
ஃபெஞ்சல் புயல்: ஃபெஞ்சல் புயல் புதுச்சேரி மற்றும் வட மாவட்டங்களில் ருத்ர தாண்டவம் ஆடியது. திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் மழை கொட்டியது. டிசம்பர் 1 ஆம் தேதி திருவண்ணாமலை மலையடிவாரத்தில் ஏற்பட்ட திடீர் நிலச்சரிவால் பாறைகள் உருண்டன. குடியிருப்புப் பகுதியில் ஏற்படுத்திய சேதத்தில் 7 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மிகவும் போராடி தான் உடல்கள் மீட்கப்பட்டன. ஃபெஞ்சல் புயலால் விழுப்புரத்திலும் 8 பேர் உயிரிழந்தனர்.
மும்பை புழுதிப் புயல்: மும்பையில் மே 13 ஆம் தேதி புழுதிப் புயல் ஏற்பட்டது. இதில் ராட்சத விளம்பர பேனர் கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் 17 பேர் உயிரிழந்தனர். 70க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். பொதுவாக தட்டையான நிலப்பரப்புடைய மற்றும் தாவரங்கள் குறைவாக உள்ள பகுதிகளில் புழுதிப் புயல் ஏற்படும் என்று நிபுணர்கள் விளக்கமளித்தனர்.
ரீமல் புயல்: 2024 ஆண் ஆண்டின் முதல் புயல் ரீமல். இந்தப் புயல் காரணமாக வடகிழக்கு மாநிலங்களில் பெரும் சேதம் ஏற்பட்டது. மே 28 ஆம் தேதி மிசோரமில் கல் குவாரி இடிந்து விபத்து ஏற்பட்டது. இதில் 17 பேர் உயிரிழந்தனர். 12 பேரின் நிலை என்ன ஆனது என்று இப்போது வரை தெரியவில்லை. ரீமல் புயல் ஏற்படுத்திய பாதிப்பில் வட கிழக்கு மாநிலங்களில் மொத்தம் 32 பேர் உயிரிழந்தனர்.
வெப்ப அலை: ஒவ்வொரு வருடமும் கோடை காலம், கொடிய காலமாக மக்களை வாட்டி வதைக்கும். இந்தாண்டு கோடை காலத்தில் அதிக வெயிலால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். வடக்கு மற்றும் மத்திய இந்தியாவில் 45 டிகிரிக்கு வெப்பம் வாட்டியது. உத்தரப்பிரதேசம், ராஜஸ்தான், மத்தியப்பிரதேசம் மாநிலங்களில் 145 பேர் வெப்ப அலையால் உடல் நலம் பாதிக்கப்பட்டு உயிரிழந்தனர். பல நூற்றுக்கணக்கான மக்கள் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றனர்.
இந்திய - வங்கதேச எல்லையை மூழ்கடித்த வெள்ளம்: பருவமழை தீவிரமடைந்து ஜூலை 2 மற்றும் 3 தேதிகளில் இந்தியா - வங்கதேசம் எல்லையில் கனமழை கொட்டி வெள்ளாக்காடாக மாற்றியது. ஆறுகளில் காட்டாற்று வெள்ளம், நிலச்சரிவு காரணமாக ஸ்தம்பித்தது. இதனால் மேற்கு வங்கம், அசாம், அருணாச்சல பிரதேசம் உள்ளிட்ட பகுதிகளில் 16 பேர் உயிரிழந்தனர்.
டெல்லி வெள்ளம்: டெல்லி உள்ளிட்ட வட மாநிலங்களில் ஆகஸ்ட் மாதம் அதி கனமழை பெய்தது. ஆகஸ்ட் 1 ஆம் தேதி ஏற்பட்ட வெள்ளத்தால் தலைநகர் தண்ணீரில் மிதந்தது. இந்த மழை வெள்ளத்தில் 11 பேர் உயிரிழந்தனர். இதனால் வட மாநிலங்களில் போக்குவரத்து உள்ளிட்ட அனைத்து சேவைகளும் ஸ்தம்பித்தன.
ஹர்தராஸ் கூட்ட நெரிசல்: ஜூலை 2 ஆம் தேதி உத்தரப்பிரதேசம் மாநிலம் ஹர்தராஸ் நகரில் மதவழிபாட்டு நிகழ்ச்சியில் 2,50,000 பேர் கலந்து கொண்டனர். கூட்ட நெரிசலில் சிக்கி 121பேர் உயிரிழந்தனர். 150க்கும் மேற்பட்ட மக்கள் காயமடைந்தனர்.
குஜராத் வெள்ளம்: குஜராத் மாநிலம் பெருமழை, வெள்ளம் காரணமாக கடுமையாக பாதிக்கப்பட்டது. ஆகஸ்ட் 29 ஆம் தேதி மழை வெள்ளம் தீவிரமடைந்தது. இதில் 28 பேர் உயிரிழந்தனர். வெள்ளத்தால் 1,000க்கும் மேற்பட்ட மக்கள் வீடுகளை இழந்து தவித்தனர். விவசாய நிலங்களும் தண்ணீரில் மூழ்கி கடுமையான சேதத்தை ஏற்படுத்தின.
மேற்கு வங்கம் வெள்ளம்: மழை வெள்ளத்தில் மேற்கு வங்கம் மாநிலமும் தப்பிக்கவில்லை. செப்டம்பர் மாதம் பெய்த கனமழையில் அணைகள் நிரம்பின. இதனால் ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து கரையோர கிராமங்களில் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தியது. மழை வெள்ளத்தால் செப்டம்பர் 20 ஆம் தேதி 26 பேர் உயிரிழந்தனர்.
கர்நாடகா நிலச்சரிவு: கனமழை காரணமாக கர்நாடகா மாநிலம் உத்தர கன்னடா மாவட்டம் அங்கோலா அருகே தேசிய நெடுஞ்சாலையில் ஜூலை 16 ஆம் தேதி பலத்த நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் ஐந்து பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவத்தால் அந்த சுற்றுவட்டாரத்தில் உள்ள 8 மாவட்டங்கள் முடங்கின.
டெல்லி ஐஏஎஸ் பயிற்சி மையம்: தலைநகர் டெல்லியை உலுக்கிய மற்றொரு சம்பவம் இது. ஜூலை 27 ஆம் தேதி டெல்லி ராஜிந்த நகர் பகுதியில் உள்ள தனியார் ஐஏஎஸ் பயிற்சி மையத்தில் வெள்ள நீர் புகுந்து அடித்தளம் தண்ணீரில் மூழ்கியது. இதில் 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இயற்கை சீற்றம் என்பதை கடந்து அந்த கட்டிடம் விதிமீறல் செய்ததும் விபத்துக்கு காரணம்.
விஜயவாடா வெள்ளம்: ஆந்திர மாநிலம் விஜயவாடா மாவட்டத்தில் ஆகஸ்ட் இறுதியில் தொடங்கி செப்டம்பர் முதல் வாரம் வரை மழை வெள்ளம் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தியது. இந்த வெள்ளத்தால் சுமார் 45 பேர் உயிரிழந்தனர். ஆயிரக்கணக்கானோரின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டது.
லக்னோ கட்டிடம் விபத்து: உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் பெய்த கன மழையால் செப்டம்பர் 7 ஆம் தேதி லக்னோவில் கட்டிடம் இடிந்து விபத்துக்குள்ளானது. இதில் 7 பேர் உயிரிழந்தனர். 10க்கும் மேற்பட்ட மக்கள் காயமடைந்தனர்.
இமாச்சல் பிரதேசம் வெள்ளம்: இமாச்சல் பிரதேசம் மாநிலத்தில் ஜூன் மாதம் தொடங்கி ஆகஸ்ட் மாதம் வரை 51 முறை மேக வெடிப்பு சம்பவங்களால் மிக கனமழை கொட்டியது. இதனால் வெள்ளம் ஏற்பட்டு இமாச்சல் தண்ணீரில் தத்தளித்தது. 31 பேர் உயிரிழந்தனர். 33 பேரின் நிலை என்ன ஆனது என்று இப்போது வரை தெரியவில்லை.
கோவை மழை பாதிப்பு: கோவை மாவட்டம், வால்பாறையில் கனமழையால் ஜூலை 30 ஆம் தேதி வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் 2 பேர் உயிரிழந்தனர். அதே நாளில் பொள்ளாச்சி திப்பம்பட்டி அருகே வீட்டின் சுவர் இடிந்து இளைஞர் ஒருவர் உயிரிழந்தார். சிறியளவு பெய்த மழைக்கே கோவை மாநகரிலும் பாதிப்பு அதிகளவு இருந்தது.
அசாம் வெள்ளம்: கேரளாவை போல அசாம் மாநிலத்திலும் இயற்கை சீற்றங்கள் அதிகம் நிகழ்ந்து வருகிறது. இந்தாண்டு அங்கு நடைபெற்ற மழை வெள்ளத்தில் 117 பேர் உயிரிழந்தனர். அசாமில் கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் 2024 வரை ஏற்பட்ட வெள்ளத்தால் 880க்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்தனர்.
சூரத் கட்டிடம் விபத்து: கனமழை காரணமாக குஜராத் மாநிலம் சூரத்தில் ஜூலை 6 ஆம் தேதி கட்டிடம் இடிந்து விழுந்தது. இதில் 7 பேர் உயிரிழந்தனர். 15க்கும் மேற்பட்ட மக்கள் காயமடைந்தனர்.
சென்னை விமான சாகச நிகழ்வு: இந்திய விமானப்படையின் 92 ஆம் ஆண்டு விழாவை முன்னிட்டு சாகச நிகழ்ச்சி அக்டோபர் 6 ஆம் தேதி மெரினா கடற்கரையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் 15 லட்சம் மக்கள் கலந்து கொண்டனர். அதீத வெப்பம், கட்டுங்கடங்காத கூட்டத்தில் சிக்கி 5 பேர் உயிரிழந்தனர். 240 மக்கள் மயக்கமடைந்தனர்.
தென் மாவட்டங்களில் வெள்ளம்: தூத்துக்குடி, நெல்லை, தென்காசி மாவட்டங்களில் கடந்தாண்டை போல இந்தாண்டும் கனமழை வெள்ளம் ஏற்பட்டது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. தேசிய நெடுஞ்சாலையே தண்ணீரில் தத்தளித்து பாதிப்பு ஏற்படுத்தியது. இதேபோல ராமநாதபுரம், மதுரை உள்ளிட்ட மாவட்டங்களிலும் மழை வெள்ளம் சேதங்களை ஏற்படுத்தியது.
பெங்களூர் மழை வெள்ளம்: கர்நாடகா மாநிலத்தின் தலைநகர் பெங்களூரும் இந்தாண்டு மழை வெள்ளத்தால் அதிகம் பாதிக்கப்பட்டது. அக்டோபர் 20 ஆம் தேதி தொடங்கி தொடர்ந்து பெய்த கனமழை இந்தியாவின் ஐடி தலைநகர் எனப்படும் பெங்களூருவை புரட்டி போட்டது. 100க்கும் மேற்பட்ட நீர்நிலைகள் நிறைந்து சுமார் 1,500க்கும் மேற்பட்ட வீடுகள் பாதிக்கப்பட்டன. சில கட்டிடங்கள் மழையில் இடிந்தும் விழுந்தன. மழை வெள்ளத்தால் பல நாட்கள் ஐடி ஊழியர்கள் வொர்க் ஃப்ரம் ஹோமில் தான் இருந்தனர்.
மத்தியப்பிரதேசம் வெள்ளம்: மத்தியப்பிரதேசம் மாநிலத்தில் வரலாறு காணாத மழை காரணமாக ஜூலை - ஆகஸ்ட் காலத்தில் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தியது. அணைகளும், நீர்நிலைகளும் நிரம்பி வழிந்து அருகில் உள்ள கிராமங்களை மூழ்கடித்தன. இதில் சுமார் 100 பேர் உயிரிழந்தனர். 50க்கும் மேற்பட்ட மக்கள் காயமடைந்தனர். வெள்ளத்தில் பல ஆயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டார்கள்.
தெலங்கானா வெள்ளம்: ஆந்திராவை போல தெலங்கானா மாநிலமும் மழை வெள்ளத்தில் கடுமையாக பாதிக்கப்பட்டது. ஆகஸ்ட் - செப்டம்பர் இடையே ஏற்பட்ட மழை வெள்ளத்தில் சிக்கி 16 பேர் உயிரிழந்தனர். மாநிலம் முழுவதுமே வெள்ளத்தால் ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் மதிப்பில் சேதம் ஏற்பட்டது.
பருவமழை பாதிப்பு: இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தகவல்படி 2024 பருவமழை காலத்தில் 1,492 மக்கள் உயிரிழந்துள்ளனர். 895 மக்கள் மழை, வெள்ளத்தில் சிக்கியும், 597 மக்கள் இடி, மின்னல் தாக்கியும் உயிரிழந்துள்ளனர். மொத்தமாக 525 முறை கனமழை (115 மி.மீ - 204 மி.மீ) பெய்துள்ளது. கடந்த ஐந்து ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் அதிக மழை பெய்துள்ளது. மேலும் 96 முறை மிக கனமழை (204 மி.மீக்கு மேல்) பெய்துள்ளது.
Note:
The content shared here is sourced from publicly available internet platforms, and we do not claim ownership. We are not responsible for any inaccurate or fake information.