இந்தியா vs சீனா: இலங்கை ஜனாதிபதி முதல் பயணமாக இந்தியா செல்வதன் மூலம் உணர்த்தும் சேதி என்ன?

post-img
இலங்கை ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தனது முதலாவது வெளிநாட்டு விஜயத்தை இந்தியாவிற்கு மேற்கொள்ள தீர்மானித்துள்ளார். இதன்படி, அநுர குமார திஸாநாயக்க எதிர்வரும் 15-ஆம் தேதி இந்தியாவிற்கு அதிகாரபூர்வ விஜயத்தை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளார். டிசம்பர் 15-ஆம் தேதி இந்தியா செல்லும் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க, 17-ஆம் தேதி வரை அங்கு தங்கியிருப்பார் என அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். ''இந்தியாவின் குடியரசுத் தலைவர், பிரதமர் உள்ளிட்ட இந்தியாவின் உயர்மட்ட இராஜதந்திரிகளை ஜனாதிபதி சந்திப்பார்." என அவர் கூறுகின்றார். இந்திய விஜயத்தின் போது ஏற்படுத்தப்படும் இரு தரப்பு உடன்படிக்கைகள் குறித்து, விஜயத்தின் இறுதியில் அறிவிக்கப்படும் என அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போதே அவர் இதனைக் கூறினார். ''இந்த விஜயத்தின் இறுதியின் இரு தரப்புக்களும் கருத்துக்கள் வெளியிடும் வரை நாம் காத்திருப்போம். இந்த விஜயத்தின் நேர அட்டவணையை வெளிவிவகார அமைச்சு வெளியிடும். இந்த தீர்மானங்கள் குறித்து இந்த விஜயத்தின் பின்னர் நாம் வெளியிடுகின்றோம்." என அவர் குறிப்பிடுகின்றார். இலங்கையில் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்படும் ஒருவர், தனது முதலாவது விஜயமாக அண்டை நாடான இந்தியாவையே தெரிவு செய்வது வழக்கமான ஒன்றாக காணப்படுகின்றது. இந்த நிலையில், அண்டை நாட்டிற்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் திஸாநாயக்கவும், தனது முதலாவது வெளிநாட்டு விஜயத்தை இந்தியாவிற்கு மேற்கொள்ள திட்டமிட்டுள்ளதாக பத்திரிகையாளரும், அரசியல் ஆய்வாளருமான ஆர்.சனத் பிபிசி தமிழுக்கு தெரிவித்தார். ''இலங்கை, அணிசேரா வெளிநாட்டுக் கொள்கையைக் கடைபிடித்துவந்தாலும், அண்டை நாடு என்ற வகையில் இந்தியாவுக்கு முன்னுரிமையும், முக்கியத்துவமும் வழங்கி வருகிறது. இதனை உறுதிப்படுத்தும் வகையில் புதிதாக அரியணையேறும் அரச தலைவர்கள் தமது முதலாவது வெளிநாட்டுப் பயணத்தை இந்தியாவுக்கு மேற்கொள்வது வழமை. ஆட்சிகள் மாறினாலும் வெளிவிவகாரக் கொள்கையென்பது முழு அளவில் பெரும்பாலான நாடுகளில் மாறாது. அந்தவகையிலேயே தனது முதல் விஜயம் பற்றிய ஜனாதிபதி அநுரவின் தேர்வும் இடம்பெற்றுள்ளது. ஜே.வி.பியினர் (ஜனதா விமுக்தி பெரமுன கட்சியினர்) இந்திய எதிர்ப்புக் கொள்கையை ஆரம்ப காலப்பகுதியில் கடைபிடித்திருந்ததாலும், சீனாவுடன் நெருங்கிய தொடர்பு இருந்ததாலும் இலங்கை மீதான இந்தியாவின் அணுகுமுறை மாறும் என்ற அச்சத்தை இந்திய ஊடகங்கள் சில வெளியிட்டிருந்தன. எனவே தமது ஆட்சியிலும் இந்தியாவுக்குரிய முக்கியத்துவம் மாறாது என்ற செய்தி அநுரவின் பயணத்தில் உள்ளடங்கி இருப்பது எனது பார்வையில் ஒரு விசேட அம்சமாகும்." என ஆர்.சனத் குறிப்பிடுகின்றார். ''ஜனாதிபதி தேர்தலில் தேசிய மக்கள் சக்தி வெற்றிபெறும் என்பது இந்தியாவின் கணிப்பாக இருந்தது. அதனால்தான் ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னதாகவே திஸாநாயக்க டெல்லி சென்று பேச்சு நடந்தி இருந்தமை குறிப்பிடத்தக்கது. டிஜிட்டல் பொருளாதாரத்தை ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க குறி வைத்துள்ளார். டிஜிட்டல் பொருளாதாரத்தில் இந்தியா முன்னிலை வகிக்கின்றது. எனவே அது சார்ந்த விடயங்கள் பற்றியும் அதிக கவனம் செலுத்தப்படக்கூடும்.'' என்கிறார் ஆர்.சனத் திஸாநாயக்கவின் இந்திய விஜயத்தை சீனா, அமெரிக்கா உள்ளிட்ட ஏனைய நாடுகள் உற்று அவதானித்து வருவதாக கூறப்படுகின்ற நிலையில், இது தொடர்பிலும் அவர் கருத்து வெளியிட்டார். "ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் இந்திய பயணம் தொடர்பில் சீனா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளும் கூடுதல் கவனம் செலுத்தியுள்ளன. டெல்லி விஜயம் முடிந்த கையோடு ஜனவரியில் திஸாநாயக்க பெய்ஜிங் செல்கிறார். இந்தியாவுடன் நெருக்கமாக செயற்பட்டாலும் சீனாவுடனான நட்புறவிலும் மாற்றம் வராது என்ற செய்தி இதன்மூலம் சொல்லப்படுகின்றது. இந்தோ - பசுபிக் பிராந்தியத்தில் சீனாவின் ஆதிக்கத்தை கட்டுப்படுத்துவதற்கு இந்தியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகள் கூடுதல் கவனம் செலுத்திவரும் நிலையில், அந்த தரப்புகள் பக்கம் இலங்கை முழுமையாக சாய்வதை தடுப்பதற்குரிய தேவைப்பாடு சீனாவுக்கு உள்ளது." என பத்திரிகையாளர் ஆர்.சனத் சுட்டிக்காட்டினார். "பிரிக்ஸ் அமைப்பில் அங்கத்துவம் பெறுவதற்கு இலங்கை முன்னெடுத்த முயற்சிகள் கைகூடவில்லை. இன்றைய உலக அரங்கில் பிரிக்ஸ் அமைப்பு முக்கியத்துவம் மிக்கதாக கருதப்படுகின்றது. பொருளாதார பலமும் உள்ளது. எனவே, பிரிக்ஸ் அமைப்பில் உள்ள நாடுகளுக்கு தமது முதல் இரு வெளிநாட்டு பயணங்களை ஜனாதிபதி மேற்கொள்வது இலங்கைக்கு கூடுதல் பயனை தரக்கூடும். கடன் மறுசீரமைப்பு உள்ளிட்ட விடங்களில் அது கைகொடுக்கக்கூடும்." என பத்திரிகையாளரும், அரசியல் ஆய்வாளருமான ஆர்.சனத் தெரிவிக்கின்றார். இலங்கையில் ஏற்பட்டுள்ள இந்த ஆட்சி மாற்றமானது, உலக அரசியல் அரங்கில் பாரிய மாற்றங்களை ஏற்படுத்தியுள்ள நிலையில், சர்வதேச நாடுகள் இலங்கை தொடர்பில் தற்போது அதிக கவனம் செலுத்தி வருகின்றன. இந்த நிலையில், தனது முதலாவது விஜயத்தை அநுர குமார திஸாநாயக்க இந்தியாவிற்கு மேற்கொள்வதோடு, அதனை தொடர்ந்து, சீனாவிற்கு விஜயத்தை மேற்கொள்ள திட்டமிட்டு வருவதாக அரசியல் ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர். Note: The content shared here is sourced from publicly available internet platforms, and we do not claim ownership. We are not responsible for any inaccurate or fake information.

Related Post