சென்னை: தேமுதிக லைவர் விஜயகாந்தின் முதலாமாண்டு நினைவு தினத்தையொட்டி அவருடைய நினைவிடத்தில் ஏராளமானோர் அஞ்சலி செலுத்தி வரும் நிலையில் நினைவிடத்தை கருடன் 3 முறை வலம் வந்தது பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
தேமுதிக தலைவர் விஜயகாந்தின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி கோயம்பேட்டில் உள்ள அவருடைய நினைவிடத்தில் குருபூஜை நடந்தது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
நீண்ட வரிசையில் காத்திருந்து தொண்டர்களும் பொதுமக்களும் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள். இந்த நிலையில் அங்கு கருடன் 3 முறை வட்டமிட்ட காட்சியை எண்ணி தொண்டர்கள் நெகிழ்ச்சி அடைகிறார்கள். இதுகுறித்து அவர்கள் கூறுகையில், விஜயகாந்த் வாழ்ந்தார், வாழ்ந்தார், வாழ்ந்தார் என்பதற்கேற்ப அவர் இறக்கவில்லை.
இன்னும் மக்கள் மனங்களில் வாழ்ந்து கொண்டிருக்கிறார். எம்ஜிஆருக்கு அடுத்தபடியாக தனது சொந்த காசில் மக்களுக்கு உதவிகளை செய்தவர் விஜயகாந்த்தான்! அவர் செய்த தான தர்மங்களே இன்று வந்திருக்கும் லட்சோப லட்சம் கூட்டமே சாட்சி!
பொதுவாக கும்பாபிஷேகம் உள்ளிட்ட தெய்வ நிகழ்வுகளின் போதுதான் கருடன் வானில் வட்டமிடுவார். ஆனால் இன்று குருபூஜையின் போது விஜயகாந்த் சமாதியை கருடன் 3 முறை வட்டமிட்ட காட்சி நெகிழ்ச்சியாக இருக்கிறது. இவ்வாறு தெரிவித்தனர்.
இதே போல் விஜயகாந்தின் இறுதி ஊர்வலத்தின் போதும் கருடன் வட்டமிட்டது. இதை கட்சியினரும் பிரேமலதா உள்ளிட்டோரும் பார்த்து கையெடுத்து கும்பிட்டு வணங்கினார். கருடன் வட்டமிட்டால் அந்த ஆன்மாவானது நேராக பெருமாளின் திருவடியை சென்று சேரும் என்கிறார்கள்.
இந்த நினைவஞ்சலி நிகழ்வில் அமைச்சர் சேகர்பாபு, முன்னாள் முதல்வர் ஓபிஎஸ், முன்னாள் ஆளுநர் தமிழிசை, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, கரு நாகராஜன், முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், நாம் தமிழர் கட்சியின் சீமான், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் துணை பொதுச் செயலாளர் வன்னியரசு, எம்எல்ஏ பாலாஜி, தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் உள்ளிட்டோர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.
விஜயகாந்தின் ஆளுயர சிலைக்கு மாலை அணிவித்த போது அவரை கட்டியணைத்துக் கொண்டு பிரேமலதா கண்ணீர்விட்டார். பின்னர் அவரை மகன்கள் விஜய பிரபாகரனும் சண்முக பாண்டியனும் தம்பி எல்.கே.சுதீஷும் தேற்றினார்கள்.
விஜயகாந்தின் குரு பூஜையையொட்டி நிறைய பேர் மாலை அணிந்து கொண்டு இருமுடி கட்டிக் கொண்டு வந்திருந்தனர். சாரை சாரையாக கூட்டம் வருவதால் கோயம்பேடு பகுதிகளில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
Note:
The content shared here is sourced from publicly available internet platforms, and we do not claim ownership. We are not responsible for any inaccurate or fake information.