புத்தாண்டு 2025: புத்தாண்டு ஓரிரண்டு நாட்களில் பிறக்கப் போகிறது. 2025 புத்தாண்டில் தனுசு ராசிக்காரர்கள் என்ன விதமான நற்பலன்களைப் பெறப் போகிறார்கள், எந்த விஷயங்களில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.. (New year rasi palan for dhanusu)
தனுசு ராசிக்காரர்கள் எந்த ஊரில் இருந்தாலும், வெளிநாட்டில் சொகுசான வேலையில் இருந்தாலும் பிறந்த மண்ணையும், பேசுகின்ற மொழியையும், பெற்ற தாயையும் மறக்காமல் இருப்பவர்கள் நீங்கள். 2024 ஆம் ஆண்டில் பேசினாலே பிரச்னை என்பதுபோல பல பிரச்னைகளை சந்தித்திருப்பீர்கள். குடும்பத்தில் கணவன் மனைவிக்கிடையே எப்போதும் தகராறு ஏற்பட்டுக் கொண்டிருந்திருக்கும். இந்தப் பிரச்னைகள் எல்லாமே இனிமேல் மாறும்.
தனுசு ராசிக்குள் சந்திரன் இருக்கும்போது புத்தாண்டு பிறந்துள்ளதால் தொடர்ந்து உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது நல்லது. எல்லா பிரச்னைகளையும் ஒன்று சேர்த்து பார்க்காமல் பிரித்து பிரித்து பார்த்தால் ஒவ்வொரு பிரச்னையாக சரியாகும். எல்லா வகையிலும் வெற்றியையும், சந்தோஷத்தையும் நீங்கள் எதிர்பார்க்கலாம்.
உங்கள் ராசிக்கு மூன்றாவது வீட்டில் சனி பகவான் உட்கார்ந்திருக்கும்போது சனி பகவான் அமர்ந்திருப்பதால் சிறிது சிறிதாக சேமித்து வைத்த பணத்தின் மூலம் வீடு, வீட்டுமனை வாங்கும் யோகம் உண்டாகும். கொஞ்சம் கடன் வந்தாலும் அது சுப கடனாக இருக்கும். குரு பகவான் உங்களுடைய ராசிநாதன் ஆறாம் வீட்டில் இருப்பதால் சகட குருவாக இருந்து உங்களுக்கு ஏகப்பட்ட சங்கடத்தை தந்து கொண்டிருக்கிறார்.
மே 14 ஆம் தேதி முதல் சகட குரு விலகி ராசிக்கு ஏழாம் இடத்தில் வந்து குரு பகவான் உட்காரப் போகிறார். அன்று முதல் உங்களுக்கு அனைத்து நல்லதும் நடக்கும். எதிர்ப்புகள் அனைத்தும் விலகும். எதிர்பார்த்த விஷயங்கள் அனைத்தும் நடக்கும். பார்த்தும் பார்காததுபோல சென்றவர்கள், பேசாமல் இருந்தவர்கள் வலிந்து வந்து பேசுவார்கள். வெற்றி வாய்ப்புகள் கூடி வரும்.
மே 14 ஆம் தேதி முதல் உங்கள் ராசி நாதன் குரு பகவான் பார்ப்பதால் அழகு அதிகரிக்கும். சுறுசுறுப்பு அதிகரிக்கும். சோம்பல் குறையும். முன்கோபம் குறையும். எல்லா வகையிலும் உங்களுக்கு வெற்றி உண்டாகும். மார்ச் மாதம் 29 ஆம் தேதி முதல் நான்காவது வீட்டில் சனி பகவான் உட்காருவதால் வாகனங்களில் செல்லும்போது கவனமாக இருக்க வேண்டும். இரவு நேர பயணங்களைத் தவிர்ப்பது நல்லது.
பணம் கொடுக்கல் வாங்கல் விஷயங்களில் கொஞ்சம் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. அங்கீகாரம் இல்லாத நிதி நிறுவனங்களில் முதலீடு செய்வதைத் தவிர்ப்பது நல்லது. ராகு கேது பெயர்ச்சி மே 18 ஆம் தேதி உங்களுக்கு சாதகமாக வருகிறது. நான்காவது வீட்டில் உட்கார்ந்திருக்கும் ராகு மூன்றாவது வீட்டிற்கு வருவதால் சொத்து பத்து சேர்க்கை உண்டு. ஒன்பதாவது இடத்தில் கேது வந்து உட்காருவதால் அப்பாவுக்கு மருத்துவச் செலவுகள் உண்டாகும்.
உத்தியோகத்தில் நல்ல மதிப்பும், மரியாதையையும் பெறுவீர்கள். 2025 ஆம் ஆண்டு அனைத்து விதமான வெற்றிகளையும் பெறுவீர்கள். மேலும் மேலும் நன்மைகள் நடப்பதற்கு துர்கை அம்மனை வழிபடுவது நல்லது. உலர் திராட்சைகளை தானமாக வழங்கலாம். ஏழை மாணவர்களுக்கு உதவுவது, அன்னதானம் அளிப்பது நன்மைகளைத் தரும்.
Note:
The content shared here is sourced from publicly available internet platforms, and we do not claim ownership. We are not responsible for any inaccurate or fake information.