“சுவாமியே சரணம் ஐயப்பா” மகரவிளக்கு பூஜைக்காக சபரிமலை கோயிலில் நடைதிறப்பு.. இன்று முதல் சிறப்பு பூஜை!

post-img
சபரிமலை: சபரிமலை ஐயப்பன் கோயிலில் மகரவிளக்கு வழிபாட்டுக்காக நேற்று மாலை நடை திறக்கப்பட்டது. இன்று (டிசம்பர் 31) அதிகாலை முதல் சிறப்பு வழிபாடுகள் தொடர்ந்து நடைபெறும். உச்ச நிகழ்வாக மகரவிளக்கு பூஜை ஜனவரி 14 ஆம் தேதி நடைபெற உள்ளது. சபரிமலை அய்யப்பன் பக்தர்கள் 48 நாட்கள் விரதத்திற்கு பிறகு இருமுடி கட்டிக்கொண்டு காடு மேடு ஆறு மலை கடந்து சபரிமலை நோக்கி பயணம் மேற்கொள்வார்கள். அவ்வாறு கல் முள் கடந்து சென்று ஐயப்பனை தரிசிக்கும் பக்தர்களுக்கு தீராத பிரச்சனைகள் எல்லாம் தீரும் என்பது ஐதீகம். அதன்படி, பக்தர்கள் மாலை அணிந்து விரதம் இருந்து வருகின்றனர். இந்த ஆண்டு சபரிமலை ஐயப்பன் கோவில் நவம்பர் 15 ஆம் தேதி மண்டல பூஜைக்காக நடை திறக்கப்பட்டது. சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டல பூஜைக்குப் பிறகு கடந்த 26 ஆம் தேதி இரவு 10 மணியளவில் ஹரிவராசனம் இசைக்கப்பட்டு நடை சாத்தப்பட்டது. பின்பு அய்யப்பன் சந்நிதானம் முழுவதும் சுத்திகரிப்பு செய்யப்பட்டது. இந்நிலையில், வரும் ஜனவரி 14 ஆம் தேதி மகரவிளக்கு பூஜை நடைபெற உள்ளது. இதற்காக நேற்று (டிசம்பர் 30) மாலையில் கோயில் நடை திறக்கப்பட்டது. தந்திரிகள் கண்டரரு ராஜீவரு, பிரம்மதத்தன் ராஜீவரு ஆகியோர் முன்னிலையில் மேல்சாந்தி அருண்குமார் நம்பூதிரி கோயில் நடையை திறந்தார். பின்பு ஆழிக்குண்டத்தில் ஜோதி ஏற்றினார். அதைத்தொடர்ந்து, ஐயப்ப விக்கிரகத்தில் பூசப்பட்டிருந்த திருநீறு, பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது. தொடர்ந்து மாளிகைப்புறம் மேல்சாந்தி வாசுதேவன் நம்பூதிரி கணபதி மற்றும் நாகராஜாவை வழிபட்டு மாளிகப்புறத்தம்மன் கோயிலை திறந்தார். இதனைத் தொடர்ந்து, தரிசனத்துக்காக பக்தர்கள் பதினெட்டாம் படி வழியே ஏற அனுமதிக்கப்பட்டனர். 3 நாட்களுக்குப் பிறகு நடை திறக்கப்பட்டதால் பக்தர்கள் ஆர்வமுடன் தரிசனத்துக்கு வந்திருந்தனர். நடை திறக்கப்பட்டதைத் தொடர்ந்து தீபாராதனை நடைபெற்றது. பின்பு இரவு 11 மணிக்கு நடை சாத்தப்பட்டது. இன்று (டிசம்பர் 31) அதிகாலை 3 மணிக்கு நடை திறக்கப்பட உள்ளது. தந்திரி கண்டரரு ராஜீவரு, அய்யப்பனுக்கு நெய்யபிஷேகம் நடத்துவார். தொடர்ந்து வரும் ஜனவரி 14 ஆம் தேதி வரை நெய், சந்தன அபிஷேகம், மாலையில் தீபாராதனை, இரவில் அத்தாழ பூஜை உள்ளிட்ட பல்வேறு வழிபாடுகள் தொடர்ந்து நடைபெறும். ஜனவரி 11 ஆம் தேதி முதல் எருமேலியில் பேட்டை துள்ளல் நடைபெறும். பந்தள மகாராஜா வழங்கிய திருவாபரணங்கள் ஜனவரி 14-ம் தேதி ஐயப்பனுக்கு அணிவிக்கப்பட்டு மகரபூஜை வழிபாடு நடைபெறும். அன்று மாலையில் பொன்னம்பலமேட்டில் மகரஜோதி தரிசனம் நடைபெறும். அதனைத் தொடர்ந்தும் ஜனவரி 19 ஆம் தேதி வரை பக்தர்கள் அரச கோலத்தில் உள்ள ஐயப்பனை தரிசிக்க அனுமதிக்கப்படுவார்கள். அதன்பிறகு 20 ஆம் தேதி பந்தள மகாராஜாவின் வம்சாவளியினருக்கு மட்டும் சிறப்பு பூஜை, தரிசன வழிபாடு நடைபெறும். அன்று பக்தர்களுக்கு அனுமதி கிடையாது. பின்பு சபரிமலை கோயில் நடை சாத்தப்பட்டு இந்த ஆண்டுக்கான மகரபூஜை நிறைவு பெறும். அதன்பிறகு மாசி மாத பூஜைகளின் போது மட்டுமே சபரிமலை கோவில் நடைதிறக்கப்படும். சபரிமலை ஐயப்பன் கோவில் மகரவிளக்கு பூஜைக்காக தற்போது பம்பாவில் ஸ்பாட் புக்கிங் கவுண்டர்கள் 7-ல் இருந்து 10 ஆக அதிரிக்கப்பட்டுள்ளது. 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு சிறப்பு கவுண்டர் வசதியும் செய்யப்பட்டுள்ளது. Note: The content shared here is sourced from publicly available internet platforms, and we do not claim ownership. We are not responsible for any inaccurate or fake information.

Related Post