பாண்டே விட்டது கப்சா.. ஸ்ரீரங்கம் வரலாறு இல்லை! ஆதாரத்தை வெளியிட்ட ஆய்வாளர்

post-img
சென்னை: ஸ்ரீரங்கம் கோயில் பற்றி ரங்கராஜ் பாண்டே பொய்யான வதந்திகளை வரலாறு எனச் சொல்லி இருப்பதாக அறிஞர் பொ.வேல்சாமி ஆதாரங்களுடன் விளக்கம் அளித்துள்ளார். சமூக ஊடகங்கள் எந்தளவுக்குப் பெருகி இருக்கிறதோ அதே அளவுக்குப் பொய் செய்திகளும் பரவி இருக்கிறது. தடி எடுத்தவன் எல்லாம் தண்டல்காரன் என்பதைப் போல வாய் இருக்கின்றவர்கள் எல்லாம் வரலாறு பேசிவருகிறார்கள். அதில் உண்மை இருக்கிறதா? என்பதை விட, மனசாட்சியுடன்தான் பேசுகிறார்களா? என்ற அளவுக்கு சந்தேகம் எழுகிறது. அதற்காகத்தான் அரசாங்கமே இப்போது போலி செய்திகள் என்ன? உண்மை செய்திகள் எது? எனக் கண்டுபிடிக்கத் தனியாக ஒரு இலாக்காவை உருவாக்கி வைத்திருக்கிறது. ஊடகங்கள் பெயரில் அப்படியே உல்டா செய்திகளைப் போட்டு மக்களை நம்ப வைத்து வருகின்றனர். அப்படி ஒரு சர்ச்சையில் இப்போது பத்திரிகையாளர் ரங்கராஜ் பாண்டே சிக்கி இருக்கிறார். இதுவரை அரசியல் விமர்சகராக இருந்து வந்த அவர், ஆன்மிக சொற்பொழிவுகளை நடத்தி வருகிறார். அவர் ஸ்ரீரங்கம் கோயில் பற்றியும் அதன் மீது படையெடுத்து வந்த உலுக் கான் பற்றியும் ஒரு வீடியோவில் பேசி இருந்தார். அது சில நாட்கள் முன்பு சமூக ஊடகங்களில் வைரலானது. அதில் பாண்ட, "உலுக் கான் படை எழுந்து வந்த போது அவனைக் கோயிலுக்கு நுழைய விடாமல் தாமதப்படுத்தி, பெருமாளைக் காப்பாற்றுவதற்காக 12 ஆயிரம் பேர் தனது தலையைக் கொடுத்துக் கொடுத்து கடவுளைக் காப்பாற்றி இருக்கிறார்கள். அப்படி என்றால் காவிரியில் என்ன ஓடி இருக்கும்? ரத்தம் தானே ஓடி இருக்கும்? 12 ஆயிரம் பேர் வரிசையில் நின்று தலையை வெட்டுக் கொடுத்ததால் போர் தாமதமானது. அந்த 2 செகண்ட் என் தலையைக் கொடுப்பதால் என் பெருமாளைக் காப்பாற்றிவிட மாட்டேனா என்று மக்கள் நினைத்திருக்கிறார்கள்" என்று கூறியிருந்தார். அதாவது அந்நியர் படையெடுப்பின் போது ஸ்ரீரங்கம் கோயிலைக் காப்பாற்ற இத்தனை ஆயிரம் பேர் உயிரைத் தியாகம் செய்துள்ளனர் என்கிறார். இதற்கு எல்லாம் என்ன சான்றுகள் உள்ளன என்பதை அவர் விளக்கவில்லை. அதாவது இஸ்லாமிய மதத்தை சேர்ந்தவர்கள் இந்தத் தாக்குதலை நடத்தினார்கள் என்பதை மறைமுகமாகச் சொல்லி இருந்தார் பாண்டே. அதே இஸ்லாமிய ஆட்சியிலிருந்த போதுதான் தாரா பல நிலங்களை இந்து கோயில்களுக்கு நன்கொடையாகக் கொடுத்தார். பல கோயில்களுக்குச் செலவுகளைச் செய்தார். அதைப் பற்றி பாண்டே சொல்லவில்லை. ஆனால், இப்போது உலுக் கான் பற்றி அவர் சொன்னதும் பொய் என்று வரலாற்று ஆய்வாளர் பொ.வேல்சாமி அவரது ஃபேஸ் பக்கத்தில் எழுதி இருக்கிறார். அதற்கான சான்றுகளை அவர் அளித்துள்ளார். 'ரங்கராஜ் பாண்டேயின் பொய்' என்ற தலைப்பில் வேல்சாமி எழுதி உள்ள பதிவில், "சமீபத்தில் ரங்கராஜ் பாண்டே பேசிய ஒரு காணொளியைக் கண்டேன். ஸ்ரீரங்கம் கோவில் வரலாற்றில் நிகழ்ந்ததாக ஒரு கொடூரமான பொய்யைக் கொஞ்சம்கூட கூச்சம் அவிழ்த்துவிட்டுக் கொண்டிருந்தார். படையெடுத்து வந்த இஸ்லாமியர்களால் 12000 பக்தர்களின் தலைகள் வெட்டப்பட்டன என்றும் அதனால் காவிரி நதியில் ரத்தமானது ஆறாகப் பெருகி ஓடியது என்றும் கூறி இருக்கிறார். 'ஸ்ரீரங்கம்' கோவிலின் வரலாற்றை அந்தக் கோவில் நிர்வாகிகளே சுமார் 1000 ஆண்டுகளாக எழுதித் தொகுத்துள்ளனர். அது நூல் 'கோயிலொழுகு' என்பதாகும். 1909 இல் வெளியிடப்பட்ட இந்த நூல் இப்பொழுதும் இணையத்தில் கிடைக்கிறது. இந்த நூலில், படையெடுத்து வந்த இஸ்லாமியர்களைக் கோவிலுக்குள் நுழைய விடாமல் தடுத்து நிறுத்த முயன்ற பக்தர்கள் 12000 பேர்களின் தலைகளை மொட்டை அடித்ததாகத்தான் எழுதப்பட்டுள்ளது. அவர்களுடைய தலைகளை வெட்டியதாக எந்தக் குறிப்பும் எழுதப்படவில்லை. "திருமுடி திருத்தி" என்றுதான் எழுதப்பட்டுள்ளது. "முடி திருத்துதல்" என்பதற்கு தமிழில் என்ன பொருள் உள்ளது என்பதை நான் உங்களுக்கு விளக்க வேண்டியதில்லை. இந்த நிகழ்ச்சி நடந்து கொண்டிருக்கும்போதே இந்தக் கோவிலைச் சேர்ந்த "எம்பெருமான் அடியாரிலே ஒருத்தி" (தேவரடியார்) படையெடுத்து வந்தவர்களின் தலைவனை "கூடியிருந்ததாகவும்" அத்துடன் அந்த இஸ்லாமியருக்கு "சிங்கபிரான் என்கிற உள்ளுர் பிராமணரை "காரியதரிசி" (personal secretary ) ஆக ஆக்கிவிட்டதாகவும் இந்த நிகழ்ச்சிகளால் மனமகிழ்ந்த அந்த படையெடுப்பாளன் மேற்கொண்டு எவ்வித துன்பங்களைச் செய்யாமல் அந்த மக்களைப் பாதுகாத்ததாகவும் கோயிலொழுகு நூலில் எழுதப்பட்டுள்ளது. அதாவது கொலை பாதகமான செயலை ஒருவன் செய்திருந்தால், அதனைக் கண்ணால் கண்டு பதற்றமடைந்து பரிதவிப்பார்களே தவிர, அவனுடன் "எம்பெருமான் அடியாரிலே ஒருத்தி" இணைத்திருக்க ஒப்புக் கொள்வாளா? அத்துடன் அதே ஊரைச் சேர்ந்த சிங்கபிரான் என்கிற பிராமணனை உதவியாளராகச் சேர்த்துவிடுவாளா? அப்படியே சேர்த்திருந்தாலும் அந்தக் கொடும்பாதகனுக்கு உதவியாளராக இருக்க அந்தப் பிராமணன் ஒப்புக்கொள்வாரா? இந்தச் செய்திகள் அனைத்தும் கோயிலொழுகு நூலில் விரிவாகப் பதிவாகியுள்ளன. இதே கப்சாவை 2005இல் எழுத்தாளர் சுஜாதா எழுதினார். அதை மறுத்து அப்போதே நான் எழுதினேன்" என்று கூறியுள்ளார். Note: The content shared here is sourced from publicly available internet platforms, and we do not claim ownership. We are not responsible for any inaccurate or fake information.

Related Post