ஹேப்பி நியூ இயர்.. பிறந்தது 2025 புத்தாண்டு.. கோயில்கள், தேவாலயங்களில் சிறப்பு வழிபாடு, பிரார்த்தனை

post-img
சென்னை: 2025 ஆங்கிலப்புத்தாண்டு இன்று பிறந்துள்ளது. இதையொட்டி தமிழகத்தின் கோயில்களில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன.. அதேபோல, தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனைகள் நடைபெற்றன.. புத்தாடைகளை அணிந்து பொதுமக்கள், ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்களை உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் தெரிவித்து வருகிறார்கள். புத்தாண்டை வரவேற்க சென்னையில் பொதுமக்கள் வழக்கமாக நள்ளிரவுகளில், பொது இடங்களில் கூடுவது வழக்கமாகும். எனவே, புத்தாண்டு கொண்டாட்டத்தையொட்டி ஆயிரக்கணக்கான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். அந்தவகையில், தமிழகம் முழுவதும் 1.10 லட்சம் போலீசார் பாதுகாப்பு பணியில் போடப்பட்டிருந்தனர். ஹேப்பி நியூஇயர்: நேற்றிரவும் சென்னை மெரினாவில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் குடும்பத்துடனும், நண்பர்களுடனும் கூடினார்கள்.. அதேபோல் புதுச்சேரியிலும் சுற்றுலாப் பயணிகள் ஆயிரக்கணக்கானோர் திரண்டு வந்தனர். சரியாக நள்ளிரவு 12 மணிக்கு புத்தாண்டை கரகோஷம் செய்து மகிழ்ச்சியுடன் வரவேற்றனர். ஒருவருக்கு ஒருவர் வாழ்த்து தெரிவித்தும் மகிழ்ந்தனர். பல்வேறு இடங்களில் வாணவேடிக்கை நிகழ்த்தி புத்தாண்டை வரவேற்றனர். Happy New Year என்ற கோஷங்கள் சாலைகளில் எதிரொலித்து கொண்டேயிருந்தது.. சுற்றுலா தலங்கள், பூங்காக்கள், வணிக வளாகங்கள் என அனைத்து பொது இடங்களிலும் வாண வேடிக்கைகளுடன் கேக், இனிப்புகள் வழங்கி விடிய விடிய கொண்டாடி வரவேற்றனர். புத்தாண்டு கொண்டாட்டத்திற்காக சென்னை உள்பட மாநிலம் முழுவதும் காவல்துறை விதித்த கட்டுப்பாடுகளுடன் நட்சத்திர ஓட்டல்கள், ரிசாட்டுகள், கேளிக்கை விடுதிகள், விருந்தினர் மாளிகைகள், பண்ணை வீடுகளில் மது விருந்துகளுடன், ஆட்டம் பாட்டத்துடன் மக்கள் கொண்டாடி மகிழ்ந்தார்கள். வரவேற்பு: புத்தாண்டையொட்டி நாகப்பட்டினம் வேளாங்கண்ணி, சென்னை சாந்தோம் உள்ளிட்ட தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனைகள் நடைபெற்றன.. கோவை, ஈரோடு உள்ளிட்ட முக்கிய நகரங்களில் உள்ள தேவாலயங்களிலும் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. பொதுமக்கள் தங்கள் ஊர்களிலுள்ள தேவாலயத்திற்கு முன்பு கூடியிருந்து புத்தாண்டை வரவேற்றனர். அதேபோல, புத்தாண்டையொட்டி இந்து கோவில்களிலும் இன்று அதிகாலை முதலே சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன.. இதனால் பக்தர்கள் அதிகாலை முதல் சாமி தரிசனம் செய்ய நீண்ட வரிசையில் காத்திருந்தனர் சென்னை வடபழனி: சென்னை வடபழனி முருகன் கோவிலில் இன்று அதிகாலை சிறப்பு பூஜை செய்யப்பட்டது. உற்சவருக்கு ராஜ அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. பக்தர்கள் நீண்ட வரிசையில் சாமி தரிசனம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதிகாலை முதல் அவர்கள் வரிசையில் நின்று தரிசனம் செய்து கொண்டிருக்கிறார்கள். கோவை, சேலம், திருச்சி என தமிழகத்தின் கோயில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. Note: The content shared here is sourced from publicly available internet platforms, and we do not claim ownership. We are not responsible for any inaccurate or fake information.

Related Post