பாமக என்னவாகும்? பனையூரில் மாவட்ட செயலாளர்களுடன் 3-வது நாளாக அன்புமணி ராமதாஸ் 'தனி' ஆலோசனை!

post-img
சென்னை: சென்னையை அடுத்த பனையூரில் தனி அலுவலகம் திறந்துள்ள பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் (பாமக) அன்புமணி ராமதாஸ் இன்று 3-வது நாளாக கட்சியின் மாவட்டச் செயலாளர்களுடன் ஆலோசனை நடத்தினார். பாமக இளைஞரணித் தலைவராக பேரன் முகுந்தனை அக்கட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிவித்ததற்கு பொதுக்குழுவில் பகிரங்கமாக எதிர்ப்பு தெரிவித்த அன்புமணி ராமதாஸ் மாவட்ட செயலாளர்களுடன் தனியே ஆலோசனை நடத்தி வருவதால் பாமக என்னவாகுமோ என்ற கேள்வி தொடருகிறது. பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸுக்கும் அவரது மகனும் கட்சித் தலைவருமான அன்புமணி ராமதாஸுக்கும் இடையே கூட்டணி உள்ளிட்ட விவகாரங்களில் கருத்து வேறுபாடுகள் இருந்து வந்தன. கடந்த லோக்சபா தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைக்க டாக்டர் ராமதாஸ் விரும்பினார். இது தொடர்பாக அதிமுக எம்பியான முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம், ராமதாஸுடன் பேச்சுவார்த்தை நடத்தி முடித்திருந்தார். பாமக கேட்கிற தொகுதிகளுடன் ராஜ்யசபா சீட்டும் தரப்படும் என அதிமுக உறுதி அளித்திருந்தது. ஆனால் பாஜகவுடன் கூட்டணி அமைக்க வேண்டும் என அன்புமணி ராமதாஸ் விரும்பினார். அதன்படியே பாஜக தலைமைய்லான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைந்து தேர்தலை எதிர்கொண்டது பாமக. ஆனால் லோக்சபா தேர்தலில் பாமக பெரும் தோல்வியைத் தழுவியது. தருமபுரியில் போட்டியிட்ட அன்புமணி மனைவி சவும்யா அன்புமணியும் தோல்வியைத் தழுவினார். மேலும் வட மாவட்ட தொகுதிகளில் பாமகவுக்கு குறைவான வாக்குகள் கிடைத்தன. இதனால் பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறியாக வேண்டும் என்பது டாக்டர் ராமதாஸ் நிலைப்பாடு. ஆனாலும் பாஜக கூட்டணியிலேயே நீடிப்போம்; எப்படியாவது மத்திய அமைச்சர் பதவி கிடைத்துவிடும் என்பது அன்புமணி ராமதாஸ் நிலைப்பாடு. இந்த நிலையில்தான் பாமக பொதுக் குழு மேடையில், பாமக இளைஞரணித் தலைவராக பேரன் முகுந்தனை டாக்டர் ராமதாஸ் அறிவித்தார். இதற்கு அதே மேடையில் அன்புமணி ராமதாஸ் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். ஆனாலும் டாக்டர் ராமதாஸோ, என் முடிவை ஏற்காதவர்கள் கட்சியை விட்டு போகலாம் என காட்டமாக கூறினார். அப்போது அன்புமணியோ, சென்னையை அடுத்த பனையூரில் தனி அலுவலகம் திறந்துவிட்டேன். அங்கு வந்து என்னை சந்திக்கலாம் எனவும் அறிவித்தார். இதனால் பாமக உடையும் என்கிற நிலைமை உருவானது. இந்த களேபரங்களுக்கு மத்தியில், இளைஞரணித் தலைவராக முகுந்தனை நியமித்தது நியமித்ததுதான்; அன்புமணியுடன் எந்த மோதலும் இல்லை என டாக்டர் ராமதாஸ் விளக்கம் அளித்திருந்தார். ஆனாலும் அன்புமணி தொடர்ந்து அதிருப்தியில் இருந்து வருகிறார். பனையூரில் இன்று 3-வது நாளாக பாமகவின் மாவட்டச் செயலாளர்களை வரவழைத்து ஆலோசனை நடத்தினார் அன்புமணி ராமதாஸ். பேரன் முகுந்தன் நியமனத்தில் ராமதாஸ் உறுதியாக இருக்கும் நிலையில் அன்புமணியின் அடுத்த கட்ட நடவடிக்கை பெரும் எதிர்பார்ப்புக்குரியதாக இருக்கிறது. Note: The content shared here is sourced from publicly available internet platforms, and we do not claim ownership. We are not responsible for any inaccurate or fake information.

Related Post