லாக் டவுன் வருமா? சீனாவை அலறவிடும் புது வைரஸ்.. கொரோனாவுக்கும் இதற்கும் இவ்வளவு ஒற்றுமை இருக்கா!

post-img
பெய்ஜிங்: சீனாவில் இப்போது புதிதாக ஹெச்எம்பிவி வைரஸ் பாதிப்பு பரவ தொடங்கியுள்ளது பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த ஹெச்எம்பிவி வைரஸ் கொரோனாவை போல பெருந்தொற்றை ஏற்படுத்துமோ எனப் பலரும் அஞ்சி வருகிறார்கள். இந்த ஹெச்எம்பிவி வைரஸ் அறிகுறி என்ன.. இதற்கும் கொரோனாவுக்கும் உள்ள ஒற்றுமை என்ன என்பது குறித்து நாம் பார்க்கலாம். கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு சீனாவில் புத்தாண்டு காலகட்டத்தில் எப்படி கொரோனா பரவியதோ.. அதேபோல இப்போது அங்கே ஹெச்எம்பிவி வைரஸ் பரவ ஆரம்பித்துள்ளது. ஹெச்எம்பிவி வைரஸ்: இந்த ஹெச்எம்பிவி வைரஸ் காரணமாகச் சீனாவில் உள்ள மருத்துவமனைகள் நிரம்பி வழிவதாக எல்லாம் சமூக வலைத்தளங்களில் தகவல் வெளியாகியுள்ளது. அவ்வளவு ஏன் ஹெஎம்பிவி வைரஸ் பாதிப்பைச் சமாளிக்கச் சீனா அவசரநிலையை அறிவித்துள்ளதாகக் கூட செய்திகள் வெளியானது. இருப்பினும், அதைச் சீனா இதுவரை அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யவில்லை.. உலகெங்கும் பரபரப்பைக் கிளப்பியுள்ள இந்த வைரஸ் குறித்து நாம் சில விஷயங்களைப் பார்க்கலாம். ஹெச்எம்பிவி வைரஸ் என்பது ஒன்றும் புதிய வைரஸ் இல்லை. இது கடந்த 2001ம் ஆண்டில் முதலில் கண்டறியப்பட்டது. நிமோவிரிடே குடும்பத்தைச் சேர்ந்த இது சுவாச ஒத்திசைவு வைரஸுடன் நெருங்கிய தொடர்புடையது. இருமல், மூக்கு ஒழுகுதல் மற்றும் தொண்டைப் புண் ஆகியவை இதன் முக்கிய அறிகுறிகளாக இருக்கிறது. ஒற்றுமைகள்: குழந்தைகள், முதியவர்கள் மற்றும் இணை நோய் இருப்போருக்கு இது நிமோனியா, மூச்சுக்குழாய் அழற்சி மற்றும் ஆஸ்துமா உள்லிட்ட தீவிர பாதிப்பைக் கூட ஏற்படுத்தும். இந்த வைரஸ் நமது உடலில் புகுந்து 3 நாட்களிலேயே அதன் அறிகுறிகள் தென்படத் தொடங்கும். இந்த HMPV வைரஸும் கொரோனைவை ஏற்படுத்திய SARS-CoV-2 வைரஸும் வெவ்வேறு வைரஸ் குடும்பங்களைச் சேர்ந்தவை என்றாலும், இரண்டிற்கும் இடை குறிப்பிடத்தக்க ஒற்றுமைகள் உள்ளன. முதலில் இரண்டுமே சுவாச நோயாகும். அதாவது இரு வைரஸ்களும் முதன்மையாகச் சுவாச மண்டலத்தைக் குறிவைத்து, லேசான முதல் கடுமையான நோய்த் தொற்றை ஏற்படுத்துகிறது. காய்ச்சல், இருமல், தொண்டை வலி, மூச்சுத்திணறல் மற்றும் மூச்சுத் திணறல் ஆகியவை பொதுவான அறிகுறிகளாக இரண்டிற்கும் உள்ளன. கொரோனாவை போலவே இதுவும் முதியவர்கள் இணை நோய் இருப்போர் இடையே தான் அதிகம் பரவுகிறது. வேறுபாடு: அதேநேரம் இது பரவும் முறையில் தான் முக்கியமான வேறுபாடு இருக்கிறது. அதாவது கொரோனாவை பொறுத்தவரை அதில் காற்றின் மூலமாகவே பரவும். அதாவது கொரோனாவால் பாதிக்கப்பட்ட நபரின் மூச்சில் வெளிப்படும் காற்றின் மூலமாக இந்த வைரஸ் அப்படியே பரவும். அதேநேரம் ஹெச்எம்பிவி வைரஸ் தற்போதைய சூழலில் காற்றினால் பரவுவது போலத் தெரியவில்லை. இது பாதிக்கப்பட்ட நபர்களில் இருந்து வெளிவரும் நீர்த்துளி மூலமாகவே பரவுவதாகச் சொல்லப்படுகிறது. வைரஸ் பரவலைத் தடுப்பது என்பது இந்த இரு வைரஸ் மட்டுமின்றி எல்லாவற்றுக்கும் ஒன்று தான். அதாவது மாஸ்க் அணிவது, அடிக்கடி கைகளைக் கழுவி சுகாதாரத்தைக் கடைப்பிடிப்பது ஆகியவை மூலம் வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தலாம். மேலும், சமூக இடைவெளியைக் கடைப்பிடிப்பதும் முக்கியத்தனதாகப் பார்க்கப்படுகிறது. தடுப்பூசியைப் பொறுத்தவரை கொரோனாவுக்கு இப்போது நம்மிடம் பல தடுப்பூசிகள் உள்ளன. ஆனால், ஹெச்எம்பிவி வைரசுக்குத் தடுப்பூசிகள் எதுவும் இல்லை.. அதன் அறிகுறிகளுக்கு மட்டுமே சிகிச்சை தர வேண்டிய சூழல் இருக்கிறது. நாம் கவலைப்பட வேண்டுமா: தற்போது வரை இந்தியாவில் யாருக்கும் இந்த வகை வைரஸ் பாதிப்பு கண்டறியப்படவில்லை. மேலும், மத்திய அரசும் கூட சீனாவில் நிலவும் சூழலை உன்னிப்பாகக் கவனித்து வருவதாகவும் தற்போதைய சூழலில் எந்தவொரு பாதிப்பும் கண்டறியப்படவில்லை என்றே கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது. சீனாவிலேயே இதற்குக் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு போலத் தெரியவில்லை. இதனால் தற்போதைய சூழலில் ஊரடங்கு குறித்தெல்லாம் யோசிக்கக்கூடத் தேவையில்லை என்றே ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். Note: The content shared here is sourced from publicly available internet platforms, and we do not claim ownership. We are not responsible for any inaccurate or fake information.

Related Post