HMPV தொற்றுக்கு தடுப்பூசி இருக்கிறதா! நம்மை பாதுகாத்துக் கொள்ள என்ன செய்ய வேண்டும்! முக்கிய தகவல்

post-img
பெங்களூர்: கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு இதேபோல புத்தாண்டு சமயத்தில் தான் சீனாவில் கொரோனா பாதிப்பு முதலில் பரவியது. இப்போது அதேபோல புத்தாண்டு சமயத்தில் அங்கு ஹெச்எம்பிவி தொற்று பரவ தொடங்கியுள்ளது அச்சத்தைக் கிளப்பியுள்ளது. இந்தச் சூழலில் அந்த ஹெச்எம்பிவி தொற்று பெங்களூரிலும் உறுதியாகியுள்ள பகீர் கிளப்புவதாக இருக்கிறது. இந்த தொற்றுக்கு வேக்சின் இருக்கா.. இதைத் தடுப்பது எப்படி என்பது குறித்து நாம் பார்க்கலாம் சீனாவில் புத்தாண்டு கொண்டாடத்தின் சமயத்தில் திடீரென அங்குள்ள மருத்துவமனைகளில் கூட்டம் அதிகரித்தது. திடீரென அங்கே பலருக்கும் ஹெச்எம்பிவி தொற்று பரவ தொடங்கியதாகச் சொல்லப்பட்டது. 2019இல் இதேபோலத் தான் கொரோனா பரவி மிக மோசமான பாதிப்பை ஏற்படுத்தியிருந்தது. இப்போது 5 ஆண்டுகளுக்குப் பிறகு கிட்டதட்ட அதேபோல ஒரு சம்பவம் நடப்பது அச்சத்தை ஏற்படுத்துவதாக இருக்கிறது. சரி, சீனாவில் தானே இந்த வைரஸ் பரவுகிறது என்று நாம் நினைப்பதற்குள் இந்தியாவிலும் ஹெச்எம்பிவி தொற்று பரவியிருக்கிறது. பெங்களூரில் தனியார் மருத்துவமனையில் எட்டு மாத குழந்தைக்கு இந்த HMPV வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதாவது ஹெச்எம்பிவி வைரஸ் புதிய வைரஸ் இல்லை. அது கடந்த 2001ம் ஆண்டு நெதர்லாந்தில் முதலில் கண்டறியப்பட்டது. Human Metapneumovirus என்ற இந்த வைரஸ் வைரஸ் சுவாசக் குழாயைப் பாதிக்கிறது. இது பாராமிக்ஸோ வைரஸ் குடும்பத்தைச் சேர்ந்தது ஆகும். இந்த வைரஸ்தான் பெங்களூரில் இப்போது எட்டு மாத குழந்தைக்குக் கண்டறியப்பட்டுள்ளது. எட்டு மாத குழந்தை வெளியே போய் இருக்க வாய்ப்பில்லை. அப்படியிருக்கும் போது எப்படி சீன வைரஸ் பாதிப்பு குழந்தைக்கு ஏற்பட்டது என்ற சந்தேகம் பலருக்கும் வரும். இங்கு தான் நாம் ஒரு விஷயத்தைக் கவனிக்க வேண்டும். அதாவது எல்லா வைரஸ்களும் தன்னை தானே மாற்றிக் கொண்டே இருக்கும். கொரோனா கூட பல்வேறு வேரியண்ட்களாக உருமாறியது நமக்கு நினைவு இருக்கும். அதுபோலத் தான் இப்போது ஹெச்எம்பிவி வைரஸின் ஒரு திரிபு சீனாவில் வேகமாகப் பரவி வருகிறது. அதேநேரம் சீனா இந்த வைரஸ் பாதிப்பு தொடர்பாக அதிகாரப்பூர்வமாக எந்தவொரு அறிவிப்பையும் வெளியிடவில்லை என்பதால் அது என்ன திரிபு என்று நமக்குத் தெரியாது. எனவே, சீனாவில் பரவும் அதே திரிபு தான் இங்கும் பரவுகிறது என்பதை நம்மால் உறுதியாகச் சொல்ல முடியாது. சரி முக்கியமான விஷயத்திற்கு வருவோம்.. இந்த ஹெச்எம்பிவி தொற்றுக்கு வேக்சின் உள்ளதா.. இதை எப்படித் தடுக்கலாம். இந்த வைரஸ் 2001ம் ஆண்டு முதலே இருந்தாலும் கூட இதுவரை ஹெச்எம்பிவி தொற்றுக்குத் தடுப்பூசிகள் எதுவும் இல்லை.. அதேபோல குறிப்பிட்ட சிகிச்சை முறையும் இல்லை.. தற்போதைய சூழலில் இந்த பாதிப்பு ஏற்பட்டோருக்குத் தென்படும் அறிகுறிகளுக்கு மட்டுமே சிகிச்சை தரப்பட்டு வருகிறது.. இருமல், காய்ச்சல், மூக்கடைப்பு மற்றும் மூச்சுத்திணறல் இதன் முக்கிய அறிகுறிகளாக இருக்கும் சூழலில், தற்போது வரை நம்மிடம் இருக்கும் தகவல்களை வைத்துப் பார்க்கும்போது இது கொரோனாவை போலக் காற்றின் மூலம் பரவுவதாகத் தெரியவில்லை. இது பாதிக்கப்பட்ட நபரின் உடலில் இருந்து வெளிவரும் நீர்த்துளிகள் மூலமாகவே பரவுகிறது. எனவே, நோய்ப் பாதிப்பு உடையவர்களுடன் நேரடி தொடர்பு கொள்வதைத் தவிர்க்கவும். மேலும், மாஸ்க் அணிவது, தனிமனித இடைவெளி, அடிக்கடி கைகளைக் கழுவுவது மூலம் இதை நாம் தடுக்க முடியும். Note: The content shared here is sourced from publicly available internet platforms, and we do not claim ownership. We are not responsible for any inaccurate or fake information.

Related Post