“யார் அந்த சார்? ஆதாரம் இருந்தா கொடுங்க.. யாராக இருந்தாலும் நடவடிக்கை” முதல்வர் ஸ்டாலின் உறுதி!

post-img
சென்னை: "அந்த சார் யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும்" என தமிழக முதல்வர் ஸ்டாலின் இன்று சட்டப்பேரவையில் அறிவித்துள்ளார். அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை தொடர்பான எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுகளுக்கு சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் இன்று காட்டமாக பதில் அளித்துப் பேசியுள்ளார். பாலியல் வழக்கில் கைதான ஞானசேகரன் திமுக உறுப்பினர் அல்ல, திமுக ஆதரவாளர் மட்டுமே; திமுக ஆதரவாளர் என்பதை மறுக்கவில்லை. திமுகவைச் சேர்ந்தவராக இருந்திருந்தாலும் நடவடிக்கை எடுத்திருப்போம் என இன்று சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கை முன்வைந்த்து, "யார் அந்த சார்?" என்ற கேள்வி தொடர்ந்து எழுப்பப்பட்டு வருகிறது. அதிமுக எம்.எல்.ஏக்கள், "யார் அந்த சார்?" என பேட்ச் உடன் தான் சட்டசபையில் பங்கேற்றுள்ளனர். இந்நிலையில் அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவம் குறித்து தமிழக முதல்வர் ஸ்டாலின் இன்று முதல் முறையாக விளக்கம் அளித்துள்ளார். 2025 ஆம் ஆண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டதொடர் கடந்த 3 நாட்களாக நடைபெற்று வருகிறது. முதல் நாள் கூட்டத்தொடரின் போது, தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி சட்டப்பேரவையில் உரையாற்றாமலே வெளியேறினார். அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரம் குறித்து அதிமுக, காங்கிரஸ், பா.ம.க வி.சி.க, இடதுசாரிகள், பா.ஜ.க உள்ளிட்ட கட்சிகள் கவன ஈர்ப்புத் தீர்மானம் நோட்டீஸை சபாநாயகர் அப்பாவுவிடம் அளித்தது. கூட்டத்தொடரின் 3வது நாளான இன்று, ஆளுநர் உரைக்கும் நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான் விவாதம் நடைபெற்றது. இதனையடுத்து, அண்ணா பாலியல் வன்கொடுமை விவகாரம் குறித்து எதிர்க்கட்சிகள் கொடுத்த கவன ஈர்ப்பு தீர்மானம் ஏற்றுக்கொள்ளப்பட்டு விவாதம் நடைபெற்றது. கட்சிக்கு ஒரு சட்டமன்ற உறுப்பினர் என்ற வகையில் பேரவையில் ஒவ்வொருவரும் பேசினர். அதற்கு பதில் அளித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிலுரை ஆற்றினார். முதல்வர் ஸ்டாலின் பேசுகையில், "பல்கலைக்கழகம் பெயரை உச்சரித்து, பல்கலைக்கும், அண்ணாவின் பெயருக்கும் களங்கம் ஏற்படுத்த விரும்பவில்லை. உயர் நீதிமன்ற உத்தரவுப்படி நியமிக்கப்பட்ட சிறப்புப் விசாரணைக் குழுதான் விசாரித்து வருகிறது. சம்பந்தப்பட்ட நபர் கைது செய்யப்பட்டு குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டுள்ளார். மாணவிக்கு நேர்ந்துள்ளது மாபெரும் கொடூரம். இதனை யாராலும் நிச்சயமாக ஏற்றுக்கொள்ள முடியாது. இது குறித்து எம்எல்ஏக்கள் பேசியிருக்கிறீர்கள். இந்த விவகாரத்தில், பாதிக்கப்பட்ட பெண்ணின் பக்கம் நின்று, நியாயம் பெற்றுத் தருவதைத் தவிர தமிழக அரசுக்கு வேறு எந்த நோக்கமும் இல்லை என்பதை இங்கே தெளிவுபடுத்திக் கொள்கிறோம். பாலியல் வழக்கில் முதல் தகவல் அறிக்கை வெளியானதற்கு தமிழக அரசு காரணமில்லை. மத்திய அரசின் கீழ் இருக்கும் துறைதான் காரணம். தொழில்நுட்பக் கோளாறு இருப்பதைக் கண்டுபிடித்து காவல்துறைதான், உடனடியாக மத்திய அரசின் துறைக்குத் தெரிவித்து தொழில்நுட்பக் கோளாறு சரி செய்யப்பட்டது. அதனை அந்த அமைப்பே ஒப்புக்கொண்டு கடிதம் அனுப்பியது. எதிர்க்கட்சி எம்எல்ஏக்கள் அவ்வப்போது "யார் அந்த சார்?" என்று கேட்கிறீர்கள். உங்களிடம் யார் அந்த சார் என்பது குறித்து ஆதாரம் இருந்தால் உடனடியாக உயர் நீதிமன்றம் அமைத்த சிறப்பு விசாரணைக் குழுவிடம் அதனை அளிக்கலாம். குற்றவாளி யாராக இருந்தாலும் அரசு கடும் நடவடிக்கை எடுக்கப்படும். 60 நாள்களுக்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும். பாலியல் வழக்கில் கைதான ஞானசேகரன் திமுக உறுப்பினர் அல்ல, திமுக ஆதரவாளர் மட்டுமே; திமுக ஆதரவாளர் என்பதை மறுக்கவில்லை. திமுகவைச் சேர்ந்தவராக இருந்திருந்தாலும் நடவடிக்கை எடுத்திருப்போம். பல்கலைக்கழக வளாகத்தில் சிசிடிவி கேமராக்கள் சரியாக இல்லை என்று எப்படி கூற முடியும்?" எனக் கூறியுள்ளார் முதல்வர் ஸ்டாலின். Note: The content shared here is sourced from publicly available internet platforms, and we do not claim ownership. We are not responsible for any inaccurate or fake information.

Related Post