விமானத்தில் பறவைகள் மோதினால் என்ன நடக்கும்? விபத்து ஏற்படுவது ஏன்? - விளக்கும் விமானி

post-img
"வேகமாகவும் அதேசமயம் பதட்டம் இன்றியும் முடிவுகளை எடுக்க வேண்டும். என்ன நடந்தாலும், பயணிகளின் பாதுகாப்புக்கு தான் முன்னுரிமை அளிக்க வேண்டும்," என்கிறார், சென்னையை சேர்ந்த விமானி அன்பு. அன்பு போன்ற விமானிகளால், பல சமயங்களில் மிகவும் பொறுமையாக அமர்ந்து முடிவு எடுக்க முடியாது. அவசர நேரங்களில் இவர்கள் எடுக்கும் துரிதமான முடிவுகள், நூற்றுக்கணக்கான மக்களின் உயிருடன் பிணைக்கப்பட்டிருக்கிறது. அதேசமயம், அவர்கள் எடுக்கும் உடனடி முடிவுகள், புறச்சூழல் தரும் அழுத்தத்தாலோ, பதட்டத்தாலோ விளைந்ததாக இருக்கக் கூடாது. அனைத்தையும் யோசித்து விவேகமான முடிவுகளை எடுக்க வேண்டியவர்கள் விமானிகள். தென் கொரியாவில் ஞாயிற்றுக்கிழமை (டிச. 29) ஏற்பட்ட விமான விபத்தில் 179 பேர் உயிரிழந்த சம்பவம், ஒட்டுமொத்த உலகத்தையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இத்தகைய விபத்துகள் உள்ளிட்ட அவசர காலங்களில் விமானிகளின் எண்ண ஓட்டம் என்னவாக இருக்கும்? அச்சமயங்களில் அவர்கள் எப்படி முடிவெடுப்பார்கள். தனியார் விமான நிறுவனம் ஒன்றில், கடந்த ஏழு ஆண்டுகளாக விமானியாக பணியாற்றிவரும் அன்பு பிபிசி தமிழிடம் பேசினார். "அவசர காலங்களில் உடனடியாக முடிவெடுக்க வேண்டும். அந்த சூழல்களை சமாளிக்க என்னதான் பயிற்சி எடுத்தாலும் உரிய நேரத்தில் சரியான முடிவை எடுக்காவிட்டால் பெரும் விபத்து நிகழ்வதற்கான ஆபத்து உண்டு" என கூறியவர், சில ஆண்டுகளுக்கு முன் நிகழ்ந்த சவாலான தருணத்தை விவரித்தார். பிலிப்பைன்ஸில் நிகழ்ந்த அச்சம்பவம் இன்றுவரை தனக்கு நேர்ந்த சவாலான தருணம் என குறிப்பிடுகிறார் அன்பு. பிலிப்பைன்ஸில் ஒரு குறிப்பிட்ட தீவில் விமானத்தைத் தரையிறக்கும் போது காற்றின் வேகத்திலும் திசையிலும் மாற்றம் ஏற்பட்டுள்ளது. இதனை 'விண்ட் ஷியர்' Wind shear என குறிப்பிடுகின்றனர். இந்த சூழல், பல விமானிகளுக்கும் இக்கட்டான சூழலாக உள்ளது. "விண்ட் ஷியர் ஏற்படும்போது குரல் எச்சரிக்கை தொடர்ந்து வரும். அப்போது, விமானிதான் விமானத்தைத் தரையிறக்கலாமா, வேண்டாமா என்பதை முடிவெடுக்க வேண்டும். அந்த சமயத்தில் விமானத்தைத் தரையிறக்கலாம் என்பது என்னுடைய முடிவாக இருந்தது. ஆனால், என் சக விமானி (Co-pilot) திரும்பி சென்றுவிடலாம் என்று கூறினார். உடனேயே அவர் கூறிய அந்த முடிவைத்தான் செயல்படுத்தினோம்," என்கிறார் அன்பு. அவர் குறிப்பிட்ட விமானத்தில் 170 பயணிகள் இருந்துள்ளனர். தன் முடிவின்படி தரையிறக்கியிருந்தால் விமானம் பெரும் விபக்துக்குள்ளாகி, உயிரிழப்புகள் ஏற்பட்டிருக்கும் என்பதையும் அன்பு குறிப்பிடுகிறார். விமானிகள் தன்னுடைய முடிவில் பிடிவாதமாக இருக்கக் கூடாது என்பது தங்களுக்கான முக்கிய படிப்பிணை என்கிறார் அவர். "சக விமானி என்ன சொல்கிறார் என்பதை கேட்க வேண்டும். ஒரு முடிவில் பிடிவாதமாக இருக்கக் கூடாது" என்றார். ஒரு விமானத்தில் விமானியை decision in command என கூறுகின்றனர். அவர்கள் முடிவெடுப்பதுதான் இறுதி. ஆனாலும், அவசர சமயங்களில் சக விமானியின் முடிவும் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தக்கூடும் என்பதற்கு இந்த சம்பவம் ஓர் உதாரணமாக திகழ்கின்றது. கடந்த 2017-ல் பயிற்சி விமானியாகவும் சில இக்கட்டான தருணங்களை அவர் சந்தித்துள்ளார். "முதன்முதலில் விமானத்தை செலுத்தியபோது இன்ஜின் செயலிழந்துவிட்டது. இம்மாதிரியான சமயங்களில் அதே இடத்தில் 180 டிகிரி விமானத்தைத் திருப்பி தரையிறக்க வேண்டும். அப்படிச் செய்வது கடினமானது. எப்போதும் காற்று எதிர்திசையில் அடிக்கும்போதுதான் விமானம் புறப்பட வேண்டும். இதனால், விமானம் லேசாக சாய்ந்து உயர பறக்கும். அதேபோன்றுதான் தரையிறங்கும்போதும் இருக்க வேண்டும். ஆனால், காற்று எதிர்திசையில் அடிக்கவில்லையென்றால் விமானம் நிலையாக இருக்காது" என்கிறார் அன்பு. அன்பு மட்டுமல்லாமல், அவருடைய சக விமானிகளும் இத்தகைய சவாலான சூழல்களை கடந்துவந்திருக்கின்றனர். இந்தோனீசியாவில் அப்படி சக விமானி ஒருவருக்கு ஏற்பட்ட அனுபவத்தை விவரித்தார். இந்தோனீசியாவில் காற்று எப்படி, எந்த திசையில் அடிக்கும் என்பதை எப்போதும் சரியாக கணிக்க முடியாது எனக்கூறிய அவர், ஒரு தீவிலிருந்து மற்றொரு தீவுக்கு செல்லும்போது வானிலை மோசமாகிவிட்டதாக தெரிவித்தார். அப்போது, அவர் குறிப்பிட்ட விமானியால் விமானத்தைத் தரையிறக்க முடியவில்லை. "நம்முடைய வலது, இடது என இருபுறத்திலும் காற்று அடித்தால் அதனை cross wind என்கிறோம். அந்த காற்றை எவ்வளவு தூரம் தாங்க முடியும் என்பது ஒவ்வொரு விமானத்தையும் பொறுத்தது. அந்த குறிப்பிட்ட விமானம் 20 நாட்ஸ் அளவு காற்றைதான் தாங்க முடியும் என்றால், அந்த வானிலையில் அது 120 நாட்ஸ் அளவுக்கு சமம். இன்ஜின் மிகுந்த சேதமாகிவிட்டது. அப்படியொரு இக்கட்டான சூழலில் அந்த விமானி தரையிறக்கினார்", என விவரித்தார் விமானி அன்பு. விமானம் ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு செல்கிறது என்றால், நடுவில் ஒரு முக்கியமான பகுதி (critical point) ஒன்று இருக்கும். அந்த பகுதிக்குள் விமானத்தில் ஏதாவது கோளாறு ஏற்பட்டால், விமானத்தைப் புறப்பட்ட இடத்திற்கே கொண்டு வந்துவிட வேண்டும் என்பது நடைமுறையாக இருக்கிறது. ஆனால், அந்த பகுதியைத் தாண்டிவிட்டால் விமானம் எங்கு செல்ல வேண்டுமோ அந்த இடத்தை அடைந்துதான் ஆக வேண்டும் என்கிறார் அவர். விமானத்தை இயக்குவது நவீனமாகிவிட்ட காலகட்டத்தில் அதன் பெரும்பாலான பணிகளை ஆட்டோ-பைலட் கருவி கவனித்துக்கொள்கிறது. எரிபொருள் கணக்கிடுவது, விமானத்தின் எடை, பயணிகள் எத்தனை பேர், விமான நிலையம் குறித்தத் தகவல்கள், விமானத்தின் மற்ற கருவிகளின் நிலையை கண்காணித்தல் ஆகிய பணிகளை விமானி அறையிலிருந்து (cockpit) விமானிகள் கவனிக்கின்றனர். பறவைகள் விமானத்தின் மோதி விபத்து ஏற்படுவது பரவலாக அறிந்த ஒன்றாகவே உள்ளது. தென் கொரியா விமான விபத்திலும் அதுகுறித்து விசாரிக்கப்படுகிறது. "விமானத்தின் மேல் பகுதியில் பறவைகள் மோதினால் அவ்வளவாக பாதிப்பு இல்லை. ஆனால், இன்ஜினில் மோதினால் பாதிப்பு ஏற்படும். இன்ஜின் 7,000 ஆர்.பி.எம் (Revolutions per minute) அளவில் சுற்றிக்கொண்டிருக்கிறது. அதில் சிறிய கல்லைத் தூக்கிப் போட்டால்கூட உள்ளே எல்லாமே சேதமாகிவிடும். 2,000 டிகிரி செல்சியஸில் அதன் வெப்பநிலை இருக்கும், சிறிதாக உராய்வு ஏற்பட்டால்கூட பெரும் வெடிப்பு ஏற்படும்." என, பறவைகள் ஏன் பெரும் விபத்துக்குக் காரணமாக அமைகின்றன என்பதை விளக்கினார் விமானி அன்பு. நடுவானில் மற்ற விமானங்களால் டிராஃபிக் ஏற்படக்கூடும். இது சமீப காலமாக பிரச்னையாக உருவெடுத்து வருகிறது. அப்படியான சமயங்களில் திரும்பி செல்வதற்கான அறிவிப்பே தங்களுக்கு வரும் என்கிறார் அன்பு. "அம்மாதிரியான சமயங்களில் எரிபொருள் கூடுதலாக தேவைப்படும். வசதியான விமான நிறுவனங்கள், கூடுதலாக எரிபொருளை வைத்திருக்கும். ஆனால், குறைவான பட்ஜெட்டில் செயல்படும் நிறுவனங்கள் சரியான அளவிலேயே எரிபொருளை கொண்டு வரும். அப்போது, நிறுவனங்கள் நாங்கள் சரியாக தரையிறக்க வேண்டும் என்பதில்தான் கவனம் செலுத்தும்." இந்தியாவின் விமானப் போக்குவரத்து கண்காணிப்பு ஆணையத்தின் (டிஜிசிஏ) விதிகளின்படியும் சர்வதேச விதிகளின்படியும் விமானி ஒருவர், ஒருநாளைக்கு 8 மணிநேரம்தான் விமானத்தை இயக்க வேண்டும். ஒரு வாரத்திற்கு 30 மணிநேரமும் ஒரு மாதத்திற்கு 100 மணிநேரமும் ஒரு வருடத்திற்கு 1,000 மணிநேரங்கள் என்று வரையறுக்கப்பட்டுள்ளன. ஆனால், பல சமயங்களில் அதிக நேரம் பணி செய்ய வேண்டியிருக்கும், இது ஒவ்வொரு நிறுவனத்திற்கும் மாறுபடும் என்கிறார் அன்பு. "இதனால் உடல்நலம் கெடும். மன அழுத்தம், தூக்கமின்மை ஏற்படும். சரியான முடிவுகளை எடுக்க முடியாது. உடல்நலப் பிரச்னைகளும் ஏற்படும். இதனால் ஆரம்பத்தில் எனக்கு தனிப்பட்ட ரீதியாக பிரச்னைகள் ஏற்பட்டன" என பகிர்ந்துகொண்டார் அன்பு. நீண்ட நேரம், உதாரணத்திற்கு 16 மணிநேரம் விமான பயணம் என்றால் விமானிகள் இருவர், சக விமானிகள் இருவர் என நான்கு பேர் இருப்பார்கள். அவர்கள் எட்டு மணிநேரத்திற்கு தங்கள் வேலையை பிரித்துக்கொள்வார்கள் என்கிறார் அவர் "எங்கள் குடும்பத்தை விமான விபத்து செய்திகள் நிச்சயம் பாதிக்கும். அடுத்த நிமிடமே நம்மை அழைத்துப் பேசுவார்கள். விமானிகளான எங்கள் நண்பர்களுடன் நாங்கள் அந்த விபத்தை எப்படி தவிர்த்திருக்கலாம் என எங்களுக்குள் ஆய்வு செய்துபார்ப்போம். பயிற்சிக் காலத்தில் பயம் இருந்தது. அதன்பின்பு, பயம் இல்லை" என்கிறார் அன்பு. முன்னாள் விமானி பயிற்சியாளரும் (instructor pilot ) விமான பாதுகாப்பு ஆலோசகருமான மோகன் ரங்கநாதன், அவசர காலங்களில் விமானிகள் எப்படி முடிவெடுக்க வேண்டும் என்பது குறித்து பிபிசி தமிழிடம் பேசினார். "இன்ஜின் பழுதானால் என்ன செய்ய வேண்டும், மோசமான வானிலையை எப்படி சமாளிக்க வேண்டும் என எல்லா பயிற்சிகளும் விமானிகளுக்கு வழங்கப்படுகின்றன. அமைதியாக முடிவெடுக்க வேண்டும். பரபரப்பாகி விடக்கூடாது. முன்பு எல்லாமே விமானி தான் முடிவெடுப்பார். இப்போது, பெரும்பாலான விமானங்களில் சக விமானியும் ஒருவர் இருக்கிறார்." என்கிறார் மோகன் ரங்கநாதன். விமானத்தின் செயல்பாடு தற்போது அதிநவீனமாகிவிட்டதாக அவர் குறிப்பிடுகிறார். 'நாங்கள் தொடங்கிய சமயத்தில் விமானத்தில் ரேடார் இருக்காது. பின்னர், கருப்பு-வெள்ளை ரேடார், இப்போது வண்ண ரேடார்கள் வந்துவிட்டன." என்கிறார் அவர். மழை, புயல் போன்ற வானிலைகளில் வெளியே எப்படி இருக்கிறது என்பது தெரியாது என்றும் அப்போது 'காட்சி மயக்கம்' (optical illusion) ஏற்படும் என்றும் குறிப்பிடுகிறார் அவர். "அம்மாதிரியான சமயங்களில் தரையிறக்கும்போது கவனமாக இருக்க வேண்டும். அதற்கு சிறப்புப் பயிற்சி தேவை." என்கிறார் அவர். விமானிகளுக்கு பணியால் ஏற்படும் சோர்வு மிகப்பெரிய பிரச்னை என்றும் அவர்களுக்கு தேவையான ஓய்வை அளிக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார். Note: The content shared here is sourced from publicly available internet platforms, and we do not claim ownership. We are not responsible for any inaccurate or fake information.

Related Post