புத்தாண்டில் நடிகர் சிவராஜ் குமாருக்கு கிடைத்த குட் நியூஸ்.. வெளியிட்ட ஹாப்பி வீடியோ

post-img
பெங்களூர்: கன்னட சினிமாவின் பிரபல நடிகர் சிவ ராஜ்குமார் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். புத்தாண்டை முன்னிட்டு சிவா மற்றும் அவரின் மனைவி வெளியிட்டுள்ள வீடியோவில், சமீபத்திய புற்றுநோய் ரிப்போர்ட் நெகடிவ் என்று வந்துள்ளதாக மகிழ்ச்சியுடன் அனைவருக்கும் நன்றி தெரிவித்துள்ளனர். கன்னட சினிமாவின் சூப்பர் ஸ்டாராக இருந்தவர் ராஜ்குமார். இவரின் மகன் சிவ ராஜ்குமார் அந்த மாநிலத்தின் முன்னணி நடிகராக உள்ளார். நெல்சன் இயக்கத்தின் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ஜெயிலர் படத்தின் மூலம் தமிழ் படத்திலும் அவருக்கு நல்ல வரவேற்பு இருந்தது. அருண் மாதேஷ்வரன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் கடந்தாண்டு வெளியான கேப்டன் மில்லர் படத்திலும் சிவ ராஜ்குமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இதனிடையே அ. வினோத் இயக்கத்தில் விஜய் நடிக்கும் தளபதி 69 படத்திலும் அவர் நடிப்பதாக இருந்தது. கன்னடத்திலும் அவர் அடுத்தடுத்து படங்களில் கமிட் ஆகி வந்தார். ஆனால் அவருக்கு திடீரென்று உடல்நலக்குறைவு ஏற்பட்டது. புற்றுநோய் பாதிப்பால் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சிவா அமெரிக்காவில் சிகிச்சைக்காக சென்றிருந்தார். அவருக்கு புற்றுநோய் உறுதி செய்யப்பட்ட தகவல் கர்நாடகா திரையுலகை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. அவர் வேகமாக குணமடைய ரசிகர்கள் பிரார்த்தனை செய்தனர். அமெரிக்காவில் அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இந்நிலையில் 2025 புத்தாண்டை முன்னிட்டு சிவ ராஜ்குமார் தன் எக்ஸ் தள பக்கத்தில் ஒரு வீடியோ வெளியிட்டிருந்தார். அதில், "வணக்கம். அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துகள். என் உடல்நிலையை பற்றி சொல்ல வேண்டும் என்றால் உண்மையில் பயமாகத்தான் இருந்தது. ரசிகர்கள், உறவினர்கள், நண்பர்கள், சக திரை கலைஞர்கள் மற்றும் மருத்துவர்கள், செவிலியர்கள் கொடுத்த ஆதரவு மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. முக்கியமாக மருத்துவர் ஷசிதருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இதை எப்படி சமாளித்தேன் என்று புரியவில்லை. கீமோதெரஃபி தொடங்கி பல சிகிச்சைகள் சென்றன. எனக்கு பயமாக தான் இருந்தது. உங்களின் ஆதரவால் தான் மீண்டு வந்துள்ளேன். இந்த நேரத்தில் என் மனைவி கீதாவின் அன்பை சொல்ல வார்த்தைகள் இல்லை. என்னுடைய ஒவ்வொரு அசைவுக்கும் பின்னால் அவரின் அன்பும், ஆதரவும் மிகுந்த நம்பிக்கையை கொடுத்தது. பிளோரிடாவில் உள்ள மியாமி புற்றுநோய் மையத்தில் உள்ள அனைத்து ஊழியர்களும் எனக்கு பக்க பலமாக இருந்தனர். அறுவை சிகிச்சை வெற்றிகரமாக செய்யப்பட்டது. சிறுநீரகப்பை மாற்றப்பட்டுள்ளது. மருத்துவர்களின் ஆலோசனை மற்றும் உங்களின் அக்கறையை ஏற்று அடுத்த ஒரு மாதம் என் உடல் நலனை கவனித்துக் கொள்ளப் போகிறேன். மிக விரைவில் மீண்டு வருவேன். லவ் யூ ஆல்." என்று கூறினார். அந்த வீடியோவில் சிவ ராஜ்குமாரின் மனைவி கீதா பேசும்போது, "உங்களின் பிரார்த்தனை மற்றும் ஆசிர்வாதங்களால் சிவாவுக்கு புற்றுநோய் ரிப்போர்ட் நெகடிவ் என்று வந்துள்ளது. மிகவும் பயந்து கொண்டிருந்த ரிப்போர்ட்டில் அவருக்கு புற்றுநோய் இல்லை என்று கூறிவிட்டனர். இந்த நேரத்தில் உங்களின் பிரார்த்தனைகளையும், அன்பையும் எப்போதும் மறக்க மாட்டோம். அனைவருக்கும் என் இதயத்தில் இருந்து மனபூர்வமான நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். புத்தாண்டு வாழ்த்துகள்." என்று கூறியுள்ளார். இந்த தகவலால் சிவ ராஜ்குமாரின் ரசிகர்கள் மற்றும் கன்னட திரையுலகத்தினர் மகிழ்ச்சியாகியுள்ளனர். Note: The content shared here is sourced from publicly available internet platforms, and we do not claim ownership. We are not responsible for any inaccurate or fake information.

Related Post