மூடுபனி+ காற்று மாசு.. டெல்லியில் முடங்கும் விமான சேவை.. தொடர்ந்து 3வது நாளாக மோசமான பாதிப்பு!

post-img
டெல்லி: வட இந்தியாவில் இப்போது குளிர்காலம் ஆரம்பித்துவிட்டது. இதனால் அங்குக் கடுமையான மூடுபனி நிலவும் சூழலில், டெல்லியில் இன்று மட்டும் 6 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. மேலும், 100க்கும் மேற்பட்ட விமானங்கள் தாமதமாகின. நேற்றைய தினம் பனிப்பொழிவு காரணமாக சுமார் 9 மணி நேரம் அங்கு விமான போக்குவரத்து பாதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் இப்போது குளிர் காலம் தொடங்கிவிட்டது. குறிப்பாக வட இந்தியாவில் இந்த காலத்தில் கடும் குளிரும் பனிப்பொழிவும் தொடர்ந்து இருக்கும். டெல்லியில் பனிப்பொழிவு: இதற்கிடையே டெல்லியில் கடுமையான பனிப்பொழிவு நிலவும் சூழலில் காலை 8.30 மணி வரை மட்டும் 6 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன மற்றும் 123 விமானங்கள் தாமதமாகியுள்ளன. ஒவ்வொரு விமானமும் சராசரியாக 20 நிமிடங்கள் வரை தாமதம் ஆவதாகச் சொல்லப்படுகிறது. மூடுபனி தொடர்ந்து இருக்கும் நிலையில், மேலும் பல விமானங்கள் ரத்து செய்யப்படலாம் அல்லது தாமதம் ஆகலாம் என்று அஞ்சப்படுகிறது. விமானச் சேவை பாதிப்பு நேற்று சனிக்கிழமை மட்டும் டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் 48 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.. மேலும் 564 விமானங்கள் தாமதம் ஆனது குறிப்பிடத்தக்கது. நேற்றைய தினம் ஓடுபாதை விமானியின் கண்களுக்குச் சுத்தமாகத் தெரியாத வகையில் மூடுபனி சூழ்ந்தது. இதனால் நேற்று அங்கு விமானச் சேவை சுமார் 9 மணி நேரம் வரை பாதிக்கப்பட்டது. இன்றைய தினம் அந்தளவுக்கு நிலைமை மோசமாக இல்லை.. காலை 4 மணி முதல் 8 மணி வரை மூடுபனியால் ஓடுபாதை மொத்தமாக மூடப்பட்ட போதிலும், அதன் பிறகு நிலைமை சற்று சீரானது. காலை 8 மணியளவில் சுமார் 50 மீட்டர் வரை எதிரே இருக்கும் பொருட்கள் தெரியும் சூழல் இருந்தது. இதனால் அங்கு விமானச் சேவை தொடங்கியது. காற்றின் தரமும் மோசம்: மூடுபனியுடன் காற்று மாசும் சேர்ந்ததாலேயே அங்கு நிலைமை மோசமாக இருக்கிறது. ஒரு பக்கம் அங்கு வெப்பம் சுமார் 10 டிகிரி செல்சியஸ் என்ற அளவிலேயே இருக்கிறது. மற்றொருபுறம் அங்குக் காற்று மாசும் மோசமாக இருக்கிறது. இன்று காலை அங்குக் காற்றின் தரம் 377 என்ற மோசமான நிலைக்குச் சென்றுவிட்டது. இது விமானங்களை இயங்க சவாலான ஒரு சூழலை உருவாக்குகிறது. இது தொடர்பாக டெல்லி ஏர்போர்ட் தனது எக்ஸ் பக்கத்தில், "டெல்லி விமான நிலையத்தில் தரையிறங்கும் மற்றும் புறப்படும் போது, தாமதம் ஏற்படலாம்.. உங்கள் விமானம் எப்போது தரையிறங்கும் அல்லது புறப்படப் போகிறது என்பதைச் சம்பந்தப்பட்ட விமான நிறுவனத்தைத் தொடர்பு கொண்டு கேளுங்கள்.. அதற்கேற்ப உங்கள் பயணத்தைத் திட்டமிட்டுக் கொள்ளவும். அசௌகரியத்திற்கு வருந்துகிறோம்" என்று கூறப்பட்டுள்ளது. வரும் நாட்கள்: இந்த மூடுபனி காரணமாக விமானச் சேவை மட்டுமின்றி ரயில் சேவையும் கூட கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. நேற்றைய தினம் டெல்லியில் மட்டும் சுமார் 81 ரயில்கள் இந்த பனிப்பொழிவு காரணமாகத் தாமதமாக இயக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. அடுத்த சில நாட்களுக்கும் இதே வானிலை தொடரும் எனச் சொல்லப்படும் சூழலில், இது அங்கு விமானம் மற்றும் ரயில் சேவையைக் கடுமையாகப் பாதிக்கும் என்றே அஞ்சப்படுகிறது. Note: The content shared here is sourced from publicly available internet platforms, and we do not claim ownership. We are not responsible for any inaccurate or fake information.

Related Post