தேர்தல் ஜூரம்: விசிக, தவாக, சிபிஎம்.. திமுகவுக்கு விடாது நெருக்கடி தரும் கூட்டணி கட்சிகள்!

post-img
சென்னை: தமிழ்நாடு சட்டசபை தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெறும் நிலையில் இப்போதே அரசியல் களம் அதிரி புதிரியாக அனல் பறக்கின்றன. ஆளும் திமுக கூட்டணியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, தமிழக வாழ்வுரிமைக் கட்சி ஆகியவற்றைத் தொடர்ந்து தற்போது சிபிஎம் கட்சியும் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கின்றன. அண்ணா திமுக வலுவான கூட்டணியை அமைக்க ஒரு பக்கம் முயற்சித்து வரும் நிலையில் திமுக கூட்டணியின் சலசலப்புகள் எந்த திசையை நோக்கி நகரும் என்பது எதிர்பார்ப்பாக உள்ளது. திமுக தலைமையிலான கூட்டணியில் விசிக, இடதுசாரிகள், தவாக, காங்கிரஸ், முஸ்லிம் லீக், மதிமுக உள்ளிட்டவை இடம் பெற்றுள்ளன. சட்டசபை மற்றும் லோக்சபா தேர்தல்களில் இந்த கூட்டணியே நீடித்து வெற்றியும் பெற்றது. தமிழ்நாட்டில் அதிமுக- பாஜக கூட்டணி அமைந்ததால் பாஜகவை கொள்கை ரீதியாக எதிர்க்கும் இடதுசாரிகள், விசிக, தவாக, முஸ்லிம் லீக, மதிமுக ஆகியவை இயல்பாகவே திமுக கூட்டணிக்குதான் செல்ல வேண்டிய கட்டாயம் இருந்தது. லோக்சபா தேர்தலில் பாஜகவுடன் அதிமுக கூட்டணி இல்லை என்ற போதும் மறைமுகமான கூட்டணி இருக்கிறது என்பதாலும் திமுக கூட்டணி அப்படியே நீடித்தது. தற்போது அண்ணா திமுகவுடன் கூட்டணி அமைக்க பாஜக படுதீவிரமாக முயற்சிக்கிறது. அண்ணா திமுகவோ, நடிகர் விஜய், தேமுதிக உள்ளிட்டவைகளுடன் கூட்டணி குறித்து சிந்திக்கிறது. பாஜக எப்படியும் அதிமுகவை கூட்டணிக்குள் இழுத்துவிடவும் முடிக்கிறது. அண்ணா திமுக- பாஜக கூட்டணி அமையாமல் போனால் அல்லது நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் தலைமையில் பிரம்மாண்ட கூட்டணி அமைந்தால் தாங்கள் என்ன செய்வது என்கிற சிந்தனையில்தான் திமுக கூட்டணிக் கட்சிகளும் இருக்கின்றன. இதனால் திமுக கூட்டணியில் இயல்பாகவே சில சலசலப்புகளை அதன் கூட்டணிக் கட்சிகள் தொடர்ச்சியாக உருவாக்கி வருகின்றன. விடுதலைச் சிறுத்தைகள் கட்சிதான் முதலில் ஆட்சியில் பங்கு- அதிகாரத்தில் பங்கு என்கிற முழக்கத்தை முன்வைத்து பிரளயத்தை உருவாக்கியது. இதனைத் தொடர்ந்து திமுக கூட்டணியில் 25 தொகுதிகளைக் கேட்கப் போகிறோம்; டபுள் டிஜிட் இடங்கள்தான் எங்களுக்கு வேண்டும் என விசிக பேசியது. இதனை திமுக தலைமை கடுமையாக வெறுத்திருந்தது. விடுதலைச் சிறுத்தைகள் உருவாக்கிய பிரளயத்தின் நீட்சியாக, தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் பண்ருட்டி தி.வேல்முருகன் எம்.எல்.ஏ, அமைச்சர்கள் எங்களை மதிக்கவில்லை; எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்துவிட்டு பண்ருட்டி இடைத்தேர்தல் நடந்தால் அமைச்சர்கள் தொகுதிக்குள் நுழையவே முடியாது என்றெல்லாம் மிரட்டல் விடுத்தார். இந்த மிரட்டல்களுக்குப் பின்னர், திமுக எங்கள் குடும்ப கட்சி; நாங்கள் வளர்த்த கட்சி; உரிமையோடு பேசுகிறோம்; அதற்காக பாசிச பாஜகவை உள்ளே நுழையவிடமாட்டோம் என்றார். இந்த வரிசையில் விழுப்புரம் மாநாட்டில் பேசிய சிபிஎம் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், தமிழ்நாட்டில் அவசர நிலை பிரகடனமா? என ஆவேசமாகவும் கடுமையாகவும் கேள்வி எழுப்ப திமுக தலைமை மிகவும் கடுமையாக அதிர்ச்சி அடைந்தது. இதனால் திமுகவின் நாளேடான முரசொலியில், இது தோழமைக்கு இலக்கணம் அல்ல என்ற தலைப்பில் உள்ளே கடுமையான வார்த்தைகளுடன் கே.பாலகிருஷ்ணன் விமர்சிக்கப்பட்டுள்ளார். திமுக கூட்டணியில் இப்படி அடுத்தடுத்து கூட்டணிக் கட்சிகள் அதிருப்தியை வெளிப்படுத்துவதும் பின்னர் சமாதானமடைவதும் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன. இவற்றின் பின்னணி குறித்து பேசிய மூத்த பத்திரிகையாளர்கள், தேர்தல் களத்தை நோக்கி அனைத்து கட்சிகளும் முழு வீச்சில் இறங்கிவிட்டன. இப்படி திமுக தலைமைக்கு நெருக்கடி தருவதன் மூலமே தங்களுக்கான தொகுதி பேரத்தின் வலிமையை அதிகரிக்க முடியும்; கூடுதல் சீட்டுகளைப் பெற முடியும் என கூட்டணிக் கட்சிகள் நம்புகின்றன; இதனை திமுக தலைமையும் உணராமல் இல்லை என்கின்றனர். Note: The content shared here is sourced from publicly available internet platforms, and we do not claim ownership. We are not responsible for any inaccurate or fake information.

Related Post