தமிழ்நாட்டில் நடந்த ரூ.1000 கோடி சைபர் கிரைம் மோசடி.. கொல்கத்தாவில் சல்லடை போடும் அமலாக்கத்துறை!

post-img
கொல்கத்தா: தமிழ்நாட்டில் நடந்த ரூ.1,000 கோடிக்கும் அதிகமான சைபர் கிரைம் மோசடி தொடர்பாக மேற்கு வங்கத்தில் கொல்கத்தா உள்ளிட்ட பல்வேறு இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். 2024 ஜனவரி மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரையிலான காலகட்டத்தில் தமிழ்நாட்டில் ரூ.1,116 கோடி அளவுக்கு சைபர் மோசடி நடந்துள்ளதாக தெரியவந்துள்ளது. இதுதொடர்பாக அமலாக்கத்துறை சார்பில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. சைபர் மோசடி தொடர்பான வழக்குகள் குறித்து அமலாக்கத்துறை தொடர் விசாரணை நடத்தி வருகிறது. மேற்கு வங்கம், பீகார், ஓடிசா உள்ளிட்ட கிழக்கு இந்தியாவில் உள்ள மாநிலங்களை சேர்ந்த பலர் இந்த சைபர் குற்றங்களில் ஈடுபட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இது தொடர்பாக கொல்கத்தாவில் 8 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள 5 இடங்கள் உட்பட 8 இடங்களில் இன்று அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். கொல்கத்தாவில் உள்ள பார்க் ஸ்ட்ரீட், சால்ட் லேக் மற்றும் பாகுய்ஹாட்டி ஆகிய பகுதிகளில் உள்ள 5 இடங்களிலும், மேலும் மூன்று இடங்களிலும் இன்று ஒரே நேரத்தில் ED அதிகாரிகளின் சோதனைகள் நடந்து வருகின்றன. கொல்கத்தா சால்ட் லேக் பகுதியில் ஒரு கேரேஜில் நடந்த ரெய்டின் போது, பல்வேறு தகவல்கள் கிடைத்ததாகவும், அமலாக்கத்துறை அதிகாரிகள் ஒருவரை விசாரணைக்காக அழைத்துச் சென்றுள்ளதாகவும், பாகுய்ஹாட்டியில் உள்ள ஹைடெக் குடியிருப்பு வளாகத்தில் உள்ள ஒரு வீட்டில் சோதனை நடத்தி வருவதாகவும், கொல்கத்தாவின் வடக்குப் புறநகரில் உள்ள ரகுநாத்பூரில் உள்ள ஒரு ஆடம்பர குடியிருப்பில் சோதனை நடந்து வருவதாகவும் அமலாக்கத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்ததாக பிடிஐ தெரிவித்துள்ளது. சுமார் 60 லட்சம் சைபர் மோசடி செய்த குற்றச்சாட்டின் பேரில் தன்மய் பால் என்ற நபரை கொல்கத்தா காவல்துறையினர் சமீபத்தில் கைது செய்தனர். நாடு முழுவதும் செயல்படும் இதேபோன்ற மோசடியில் தன்மய் பால் தொடர்பில் இருந்ததும், அவர் சுமார் 300 பேரிடம் ரூ.60 கோடிக்கு மேல் மோசடி செய்திருப்பதும் விசாரணையில் தெரியவந்ததாக கூறப்படுகிறது. Note: The content shared here is sourced from publicly available internet platforms, and we do not claim ownership. We are not responsible for any inaccurate or fake information.

Related Post