அமெரிக்காவில் புத்தாண்டு கொண்டாட்டத்தில் டிரக்கை விட்டு ஏற்றிய டிரைவர்.. 10 பேர் பலி, பலர் படுகாயம்

post-img
நியூயார்க்: அமெரிக்காவின் நியூ ஆர்லியன்ஸ் நகரில் புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது கூட்டத்திற்குள் வாகனத்தில் வந்த மர்ம நபர் வேண்டுமென்றே மோதிய விபத்தில் 10 பேர் கொல்லப்பட்டனர். 30க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.அவர்கள் அனைவரும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். வேண்டுமென்றே வாகனத்தை ஓட்டி வந்த டிரைவரை போலீசார் சுட்டுக்கொன்றனர். அமெரிக்காவில் புத்தாண்டு இந்திய நேரப்படி இன்று மதியம் பிறந்தது. புத்தாண்டு பிறந்ததையொட்டி அமெரிக்கா முழுவதும் மக்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்நிலையில் அமெரிக்காவில் தென்கிழக்கு பகுதியில் அமைந்துள்ள மாநிலமான லூசியானாவில் உள்ள மிகப்பெரிய நகரம் நியூ ஆர்லியன்ஸ். இங்குள்ள போர்பன் தெருவில் புத்தாண்டு கொண்டாட்டம் களைகட்டியிருந்தது. அப்போது திடீரென வேண்டுமென்றே பிக்கப் டிரக்கை ஓட்டிச்சென்றார். கண் இமைக்கும் நேரத்தில் நடந்த இந்த விபத்தில் 10 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 30க்கும் மேற்பட்டோர் படு காயமடைந்தனர் . போலீசாருடனான துப்பாக்கிச் சண்டையில், டிரக்கை ஓட்டி வந்த டிரைவர் சுட்டுக் கொல்லப்பட்டதாக எஃப்.பி.ஐ. அதிகாரிகள் தெரிவித்தனர். நியூ ஆர்லியன்ஸ் காவல் துறை கண்காணிப்பாளர் அன்னே கிர்க்பாட்ரிக் இந்த சம்பவம் பற்றி கூறுகையில், டிரக்கை ஓட்டி வந்த டிரைவர், அதிகாரிகள் மீது துப்பாக்கியால் சூடுவதற்கு முன்பு, வேண்டுமென்றே மிகவும் மோசமான முறையில் புத்தாண்டு கொண்டாடிய மக்கள் மீது வாகனத்தை ஏற்றினார். போர்பன் தெருவில் தடுப்புகளை தாண்டி சென்று வாகனத்தால் மோதினார். இந்த மோசமான தாக்குதல் பயங்கரவாத தாக்குதல் ஆகும். இதுபற்றி விசாரித்து வருகிறோம் என்றார். இதனிடையே நியூ ஆர்லியன்ஸ் மேயர் லாடோயா கான்ட்ரெல் இது "பயங்கரவாத தாக்குதல்" என்று திட்டவட்டமாக தெரிவித்தார். போலீசார் துப்பாக்கியால் சுட்டு தாக்கியதால் பதிலுக்கு போலீசாரும் சுட்ட நிலையில்,டிரைவர் இறந்துவிட்டார் என்று எப்பிஐ அதிகாரிகள் தெரிவித்தனர். தன்னால் முடிந்தவரை அனைவர் மீதும் வாகனத்தை ஏற்றி அந்த நபர், இரண்டு காவல் அதிகாரிகளை துப்பாக்கியாலும் சுட்டார் என்று நியூ ஆர்லியன்ஸ் காவல் துறை கண்காணிப்பாளர் அன்னே கிர்க்பாட்ரிக் கூறினார். சம்பவம் நடந்த இடத்திலும், அதனை சுற்றியுள்ள பகுதிகளில் வெடிகுண்டுகள் வைக்கப்பட்டுள்ளதா என்று அதிகாரிகள் தீவிரமாக சோதனை நடத்தி வருகிறார்கள். வாகனத்தை இயக்கி 10 பேரை கொலை செய்த சந்தேக நபர், வெளிநாட்டு பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்புடையவரா என்று விசாரணை நடந்து வருவதாக எப்பிஐ அதிகாரிகள் தெரிவித்தனர். Note: The content shared here is sourced from publicly available internet platforms, and we do not claim ownership. We are not responsible for any inaccurate or fake information.

Related Post