தமிழ்நாட்டில் பைக் டாக்சி சேவைக்கு அனுமதி உண்டா.. இல்லையா.. அரசு பதிலால் ஆட்டோ டிரைவர்கள் ஆவேசம்

post-img
சென்னை: தமிழ்நாட்டில் பைக் டாக்சி சேவைக்கான அனுமதி உண்டா.. இல்லையா என்ற கேள்வி பலருக்கும் இருக்கும். அண்மையில் இந்த பிரச்சனை விஸ்வரூபம் எடுத்த போது போக்குவரத்து துறை சார்பில் முக்கியமான அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதாவது வணிக நோக்கத்துக்காக பயன்படுத்தப்படும் இருசக்கர வாகனங்கள் மீது மோட்டார் வாகன சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என கூறப்பட்டது. அதேநேரம் பைக் டாக்ஸிக்கு தடை.. தடையில்லை என்ற பதிலும் உறுதியாக தெரியவில்லை. இப்போது அந்த உண்மை தெரியவந்துள்ளது. கால மாற்றத்திற்கு ஏற்ப பெரு நகரங்களில் தொடங்கி சிறிய நகரங்கள் வரை போக்குவரத்து விஷயங்களில் புதிய மாற்றங்கள் வந்து கொண்டே இருக்கின்றன. முதலில் பேருந்து எப்போது வரும் என்று காத்திருந்த மக்கள், அதன்பிறகு ஓரளவு எளிதாக போக்குவரத்து வசதிகளுக்கு ஆட்டோ ரிக்ஸாக்களை அணுக தொடங்கினார்கள். அதன்பிறகு கார்கள் மெல்ல மெல்ல வாடகைக்கு வர ஆரம்பித்தன. தற்போதைய நிலையில் பேருந்துகள், வேன்கள், கார்கள், ஆட்டோக்களை வணிக நோக்கத்துடன் பயன்படுத்தலாம். அதற்கான சட்ட விதிகள் உள்ளன. ஆனால் சென்னை, மும்பை, டெல்லி, பெங்களூர், ஹைதராபாத், டெல்லி, அஹமதாபாத், புனே, கொச்சி, திருவனந்தபுரம், விசாகப்பட்டினம், கொல்கத்தா உள்ளிட்ட இந்தியாவின் பல்வேறு பெருநகரங்களில் வாகன நெருக்கம் அதிகமானது. பல லட்சம் மக்கள் இந்த நகரங்களில் வசிக்கிறார்கள். இதில் சென்னை, மும்பை, டெல்லி, பெங்களூர், ஹைதராபாத், டெல்லி, கொல்கத்தா உள்ளிட்ட நகரங்களில் கோடிக்கணக்கான மக்கள் வசிக்கிறார்கள். ஆட்டோக்களே செல்ல முடியாத சாலைகளும் உள்ளன. இந்நிலையில் இருசக்கர வாகனங்களை கேப்களாக பயன்படுத்த தொடங்கினார்கள். கார்களில் ஆட்டோக்களில் சென்றால் 200 ரூபாய் என்றால், வெறும் 50 ரூபாய் கொடுத்து அந்த இடத்திற்கு பைக்கில் போய்விட முடியும். இந்த பைக் டாக்ஸி ஓட்டுநர்கள் யார் என்றால், அந்த வழியாக செல்வோர் தான். லிப்ட் கேட்டால் கொடுப்பார்கள் அல்லவா. அதையே இப்போது பணம் வாங்கி கொண்டு செய்கிறார்கள். இந்த சேவை இந்தியாவின் டெல்லி, மும்பை, சென்னை, பெங்களூரு உள்பட பெருநகரங்களில் அதிகரித்து வருகிறது. பல்வேறு தனியார் நிறுவனங்கள் இந்த சேவையை வழங்கி வருகின்றன. முதலில் எங்காவது வேலைக்கு செல்வோர், வேலை செய்வோர் தான் தாங்கள் செல்லும் வழியில் பயணிகளை இறக்கிவிட்டார்கள். இப்போது இதையே தொழிலாக செய்பவர்கள் அதிகரித்து விட்டார்கள். குறிப்பாக கல்லூரிகளில் படிப்பவர்கள் பகுதி நேரமாக அதிக அளவில் இந்த வேலையில்ஈடுபடுகிறார்கள். ஸ்விக்கி, ஜொமாட்டோ உள்ளிட்ட டெலிவரி செய்வோரும் இந்த வேலைகளில் ஈடுபட தொடங்கினார்கள். இதேபோல் இப்போது வேலையில்லாத அல்லது வேலை தேடும் பல இளைஞர்கள் பெரு நகரங்களில் பைக்டாக்ஸி ஓட்டும் சேவையை செய்ய தொடங்கிவிட்டார்கள். இதனால் ஆட்டோ, கார் ஓட்டுநர்கள் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஒருவர் மட்டும் என்றால் பைக் டாக்ஸியை தேர்வு செய்வது அதிகரித்து விட்டது. இருவருக்கு மேல் என்றால் மட்டுமே இப்போது ஆட்டோ அல்லது காரை அழைக்கிறார்கள் ஏனெனில் கார், ஆட்டோக்களுடன் ஒப்பிடும்போது மிகவும் குறைவான வாடகை கட்டணம், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டால் குறுகலான பாதையில் நுழைந்து விரைவாக செல்ல வேண்டிய இடங்களுக்கு செல்ல முடியும் என்பதால் பைக் டாக்ஸி சேவைக்கு பொதுமக்களிடம் வரவேற்பு உள்ளது. இதனால் பைக் டாக்சி சேவையை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை மிகப்பெரிய அளவில் வேகமாக அதிகரித்து வருகிறது. இதனிடையே கார், ஆட்டோ டிரைவர்கள் உள்பட போக்குவரத்து தொழிலாளர்கள் தங்களுக்கு வருவாய் இழப்பு ஏற்படுவதாக பைக் டாக்சிக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தி வருகிறார்கள். இதுதொடர்பாக தமிழக அரசுக்கும் புகார்கள் வந்துகொண்டே இருந்தது. இதைத்தொடர்ந்து பைக் டாக்சி சேவை தொடர்பாக போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் துறை சார்ந்த உயர் அதிகாரிகளுடன் சில தினங்களுக்கு முன்பு ஆலோசனை கூட்டமும் நடத்தினார். இந்த கூட்டத்துக்கு பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறும்போது, "மத்திய அரசு இருசக்கர வாகனங்களை வாடகைக்கு பயன்படுத்த அனுமதி அளித்துள்ளது. அந்தவகையில், இது இந்தியா முழுவதற்கும் பொருந்தும். ஆனாலும், நீதிமன்றங்களில் பைக் டாக்சிகளுக்கு ஆதரவாகவும், எதிராகவும் பலவித கருத்துகள் கூறப்பட்டிருக்கிறது.. தமிழக அரசின் சார்பில் உயர் அதிகாரிகளை கொண்டு குழு அமைத்து, பைக் டாக்சி தொடர்பாக ஆய்வு செய்துவருகிறோம்" என்று தெரிவித்தார். இந்த சூழலில் வணிக நோக்கத்துக்காக பயன்படுத்தப்படும் இருசக்கர வாகனங்கள் மீது மோட்டார் வாகன சட்டப்படி நடவடிக்கை எடுக்க போக்குவரத்து துறை கமிஷனர் உத்தரவிட்டிருந்தார். அதன் அடிப்படையில், சென்னையில் பல்வேறு முக்கிய பகுதிகளில் உள்ள பிரதான சாலைகளில் ஓடிக்கொண்டிருக்கும் பைக் டாக்சி மீது போக்குவரத்து துறை அபராதம் விதித்தது. ஆனாலும் இன்னமும் பைக் டாக்சி சேவைகள் தொடர்ந்து இயங்கி வருகிறது. தமிழ்நாட்டில் பைக் டாக்சி சேவை இயங்குவதற்கு அனுமதி வழங்கப்பட்டு உள்ளதா? என்று தகவல் அறியும் சட்ட உரிமை ஆர்வலர் ஒருவர் கேட்ட கேள்விக்கு, சென்னை கிண்டியில் உள்ள போக்குவரத்து மற்றும் சாலை பாதுகாப்பு ஆணையரகம் பதில் அளித்துள்ளது. அதில், "தமிழ்நாட்டில் பைக் டாக்சி ஓட்டுவதற்கு இந்த அலுவலகத்தில் இதுநாள் வரை அனுமதி ஏதும் வழங்கப்படவில்லை" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. முறையான அனுமதியின்றி ஓடுவதால் பைக் டாக்சி தமிழகத்தில் சட்டவிரோதமானது என்று அறிவித்து தடை விதிக்குமாறு ஆட்டோ ஓட்டுர்கள், கார் டிரைவர் குரல் எழுப்பியுள்ளார்கள். Note: The content shared here is sourced from publicly available internet platforms, and we do not claim ownership. We are not responsible for any inaccurate or fake information.

Related Post