கோலியை விடுங்க.. வெங்காயம் செஞ்சுரி அடிச்சுருச்சே! சிக்க வைக்கும் சின்ன வெங்காயம்!புத்தாண்டில் ஷாக்!

post-img
திண்டுக்கல்: திண்டுக்கல் வெங்காய மார்க்கெட்டிற்கு சின்ன வெங்காயம் வரத்து குறைந்ததால் தற்போது விலை கடுமையாக உயர்ந்துள்ளது. தற்போது 1 கிலோ சின்ன வெங்காயம் 100க்கும், பெரிய வெங்காயம் ஒரு கிலோ 80 ரூபாய்க்கும் விற்பனையாகும் நிலையில், வெளி மார்க்கெட்டில் 120 ரூபாய் வரை விற்கப்படுவதால் இல்லத்தரசிகள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். தென் மாவட்டங்களிலேயே திண்டுக்கல்லில் தான் வெங்காயத்திற்கென தனி சந்தை இரு இடங்களில் பிரம்மாண்டமாக உள்ளது. திண்டுக்கல் வெங்காயத்திற்கு என்று தனி சந்தையானது திங்கள், புதன், வெள்ளி ஆகிய மூன்று தினங்களில் நடைபெறும். இந்தச் சந்தைக்கு திண்டுக்கல், வேடசந்தூர், ஒட்டன்சத்திரம், தேனி, கம்பம் ,தாராபுரம், உடுமலைப்பேட்டை, திருப்பூர் உள்ளிட்ட பல பகுதிகளில் இருந்து விவசாயிகள் தங்கள் விளை நிலங்களில் வெள்ளாமை ஆகக்கூடிய வெங்காயங்களை இந்தச் சந்தைக்கு விற்பனைக்கு கொண்டு வருவது வழக்கம். சின்ன வெங்காயம்: இங்கு வரக்கூடிய வெங்காயம் சென்னை, திருச்சி, தஞ்சை, கோவை,மதுரை தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கும் கேரளா, ஆந்திரா போன்ற வெளிமாநிலங்களுக்கும் சிங்கப்பூர், மலேசியா, இலங்கை போன்ற வெளிநாடுகளுக்கும் வியாபாரிகள் விற்பனைக்கு வாங்கி செல்வர். சென்ற மாதம் 350 டன் சின்ன வெங்காயம் வரக் கூடிய இடத்தில் வரத்து அதிகரித்து நாள் ஒன்றுக்கு 500 டன் சின்ன வெங்காயம் வருகை தந்ததால் ஒரு கிலோ சின்ன வெங்காயம் 30 ரூபாய் முதல் 80 ரூபாய் வரை விற்பனையானது. நடவு பணிகள்: இந்நிலையில் மகாராஷ்டிராவில் இருந்து வெங்காயம் திண்டுக்கல் மார்க்கெட்டிற்கு கொண்டுவரப்பட்டு இங்கிருந்து பல பகுதிகளுக்கு அனுப்பிவைக்கப்படுகிறது. மார்க்கெட் செயல்படும் 3 நாட்களில் ஒரு நாளைக்கு 25 லாரிகளில் மகாராஷ்டிரா மாநிலத்தில் இருந்து வெங்காயம் வந்திறங்கும். தற்பொழுது திண்டுக்கல், தேனி, திருச்சி, அரியலூர், பெரம்பலூர், திருப்பூர் போன்ற மாவட்டங்களில் சின்ன வெங்காயம் நடவு செய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது. வரத்து குறைவு: நடவு செய்யப்பட்ட புது வெங்காயம் 2 மாதம் கழித்து விற்பனைக்கு வரும் அதுவரை ஏற்கனவே இருப்பு வைக்கப்பட்டிருந்த சின்ன வெங்காயத்தை விவசாயிகள் விற்பனைக்காக வெங்காய மார்க்கெட்டிற்கு கொண்டு வருகின்றனர். இதனால் வெங்காயத்தின் வரத்து குறைவாக உள்ளது. இன்று (31.12.2024) மட்டும் 50 கிலோ எடை கொண்ட சின்ன வெங்காயம் 2,500 மூட்டைகள் விற்பனைக்கு வந்துள்ளது. இதன் காரணமாக சின்ன வெங்காயத்தின் விலை அதிகமாக உயர்ந்துள்ளது. செஞ்சுரி அடித்த வெங்காயம்: கடந்த வாரம் வெங்காய மார்க்கெட்டில் மொத்த விலையில் ஒரு கிலோ சின்ன வெங்காயம் அதன் தரத்தை பொறுத்து கிலோ 30 முதல் 80 வரை விற்பனையானது. ஆனால் தற்பொழுது விற்பனைக்கு வரக்கூடிய சின்ன வெங்காயம் விளைச்சல் குறைந்து வரத்து குறைவாக உள்ளதால் அதன் தரத்தை பொறுத்து 80 முதல் 100 வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது. சில்லறையில் 5 முதல் 10 வரை கூடுதலாக வைத்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மக்கள் அதிர்ச்சி: ஏற்கனவே கனமழை காரணமாக தக்காளி, பீன்ஸ், கேரட், கத்தரிக்காய் உள்ளிட்ட காய்கறிகள் விலை கடுமையாக உயர்ந்து வருகிறது. வெங்காயத்தின் விலை ஏற்ற இறக்கமாக இருக்கும் நிலையில் தற்போது மழை உச்சம் அடைந்திருக்கும் நிலையில் விலை அதிகரித்து வருவது இல்லத்தரசிகளை கவலை கொள்ள வைத்துள்ளது. மேலும் வரும் நாட்களில் இன்னும் வெங்காயத்தின் விலை உயர்வதற்கே வாய்ப்பு இருப்பதாக கூறி அதிர வைக்கின்றனர் வியாபாரிகள். Note: The content shared here is sourced from publicly available internet platforms, and we do not claim ownership. We are not responsible for any inaccurate or fake information.

Related Post