விஜயகாந்த் நினைவு தினம்! அஞ்சலி செலுத்த திரண்ட தமிழகம்! கேப்டன் உடலை வட்டமிட்ட கருடன்! பிளாஷ்பேக்

post-img
சென்னை: தேமுதிக தலைவரும் தமிழக முன்னாள் எதிர்க்கட்சித் தலைவருமான நடிகர் விஜயகாந்தின் முதலாம் ஆண்டு நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. இந்த நிகழ்வுக்காக தேமுதிக பேரணி நடத்த அனுமதி கோரிய நிலையில் அதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. கருப்பு தங்கம், கருப்பு எம்ஜிஆர் என ரசிகர்களாலும் தொண்டர்களாலும் அன்போடு அழைக்கப்பட்டவர் விஜயகாந்த். தமிழ் மீதான பற்றுக் காரணமாக தமிழ் திரைப்படங்களில் மட்டுமே நடித்திருந்தார். இவர் இதுவரை 100-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். மேலும் ஏராளமான புது இயக்குநர்களை அறிமுகம் செய்துள்ளார். எம்ஜிஆர் பிலிம் இன்ஸ்டிடியூட்டில் படித்தவர்களுக்கு வாய்ப்புகளை அள்ளிக் கொடுத்து முன்னுக்கு வரவைத்தார். விஜயகாந்த் பெயரை சொன்னாலே அந்த காலகட்டங்களில் நடிகர், நடிகைகளுக்கு ஒரு விதமான உணவும், மற்றவர்களுக்கு கொஞ்சம் தரம் குறைவான உணவும் வழங்கப்பட்டு வந்ததாம். இதை மாற்றி அனைவருக்கும் ஒரே உணவு என்பதை கொண்டு வந்தார். நடிகர், நடிகைகள் மட்டன் சாப்பிட்டால் லைட்மேன்களும் சாப்பிட வேண்டும். ஜூஸ் குடித்தால் அவர்களுக்கும் கொடுக்க வேண்டும் என உணவிலிருந்து சமத்துவத்தை தொடங்கினார். யார் இல்லை என கேட்டாலும் அவர்களுக்கு எல்லாம் வாரி வழங்கிய வள்ளல் என்கிறார்கள். இப்படிப்பட்ட விஜயகாந்த் அரசியலுக்கு வந்து அதிமுக, திமுகவே அஞ்சும் அளவுக்கு வளர்ந்தார். ஆனால் யார் கண்ணு பட்டதோ தெரியவில்லை! அவருக்கு 2014ஆம் ஆண்டு முதலே அரசியலில் சரிவுதான். கூட்டணி தொடர்பான முடிவுகள் தோல்வியை கொடுத்ததா என்றெல்லாம் தெரியவில்லை. மேலும் விஜயகாந்த் நேரடியாக அரசியலில் ஈடுபட முடியாத அளவுக்கு அவருடைய உடல்நிலை பாதிக்கப்பட்டது. இந்த நிலையில் அவர் அமெரிக்கா, சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளுக்கெல்லாம் சென்று சிகிச்சை பெற்றார். 2018-ஆம் ஆண்டு முன்னாள் முதல்வர் கருணாநிதி காலமான போதுக் கூட அமெரிக்காவில் இருந்து கண்ணீர் அஞ்சலி செலுத்தினார். மேலும் சென்னை வந்ததுமே விமான நிலையத்தில் இருந்து மெரினாவுக்கு சென்று அஞ்சலி செலுத்தினார். கள்ளம் கபடமில்லாதவர், இதுவரை அவர் மீது எந்த ஊழல் கறையும் படிந்ததில்லை. இப்படி தமிழகமே போற்றி கொண்டாடிய தலைவர் விஜயகாந்த் மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற நிலையில் கடந்த ஆண்டு டிசம்பர் 28ஆம் தேதி சிகிச்சை பலனின்றி காலமானார். அவரது இறப்பால் தொண்டர்கள், ரசிகர்கள், பொதுமக்கள் கண்ணீர் விட்டனர். விஜயகாந்தின் உடல் அவருடைய வீட்டிற்கு கொண்டு வரப்பட்டு பிறகு கட்சி அலுவலகத்திற்கு பொதுமக்கள் அஞ்சலிக்காக கொண்டு செல்லப்பட்டது. ஆனால் அந்த இடத்தில் சாரை சாரையாக அஞ்சலி செலுத்த மக்கள் வந்ததால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. இதையடுத்து அவருடைய உடல் தீவுத்திடலில் வைக்கப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து அவருடைய உடலை கட்சி அலுவலகத்தில் நல்லடக்கம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டது. இதற்காக தீவுத்திடலில் இருந்து 29ஆம் தேதி மாலை கோயம்பேட்டுக்கு ஊர்வலகமாக கொண்டு வரப்பட்டது. அப்போது வந்த மக்கள் கூட்டத்தை பார்த்து பலர் வியந்துவிட்டனர். தேமுதிகவையும் விஜயகாந்தையும் மட்டமாக பேசிய அரசியல்வாதிகள் எல்லாம் மூக்கில் விரல் வைக்கும் அளவுக்கு தான் யார் என்பதை சொல்லாமல் சொன்னார் விஜயகாந்த். எல்லாவற்றையும் விட விஜயகாந்த் மார்கழி மாதம் இறந்துவிட்டார். அவரது உடலை பிராட்வே பகுதியில் ஒரு கழுகானது 3 முறை வட்டமிட்ட காட்சி பெரும் மெய்சிலிர்ப்பை ஏற்படுத்தியது. பிறகு இரவு 7 மணி போல் முழு அரசு மரியாதையுடன் அவருடைய உடல் சந்தன பேழையில் நல்லடக்கம் செய்யப்பட்டது. அன்று முதல் அந்த நினைவிடம் ஒரு கோயில் என பிரேமலதா அறிவித்தார். மேலும் விஜயகாந்தின் விருப்பமான அன்னதானம் அவருடைய நினைவிடத்தில் தினமும் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இன்றுடன் ஓராண்டு நிறைவு பெறுகிறது. இந்த நினைவு தினத்தையொட்டி விஜயகாந்தின் நினைவிடம் மலர்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. அவருடைய நினைவஞ்சலி நிகழ்வில் கலந்து கொள்ள மக்கள் கூட்டம் கூட்டமாக வந்து கொண்டிருக்கிறார்கள். அவரது நினைவு தினத்தையொட்டி பேரணிக்கு அனுமதி கேட்கப்பட்டு அதை தமிழக காவல் துறை மறுத்துவிட்டது. Note: The content shared here is sourced from publicly available internet platforms, and we do not claim ownership. We are not responsible for any inaccurate or fake information.

Related Post