சிரியா போரினால் சோர்வடைந்துள்ளதாகவும், அதன் அண்டை நாடுகளுக்கோ அல்லது மேற்கத்திய நாடுகளுக்கோ, தங்கள் நாட்டால் அச்சுறுத்தல் இல்லை என்றும், சிரியாவின் தற்போதைய தலைவர் அகமது அல்-ஷாரா கூறியுள்ளார்.
சிரியாவின் தலைநகரம் டமாஸ்கஸில் பிபிசிக்கு அளித்தப் பேட்டியில், சிரியா மீதான பொருளாதாரத் தடைகளை நீக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
"ஆட்சி மாற்றம் நடந்த பிறகு, பொருளாதாரத் தடைகள் நீக்கப்பட வேண்டும். ஏனெனில், அவை முந்தைய ஆட்சியை இலக்காக வைத்து மேற்கொள்ளப்பட்டன. பாதிக்கப்பட்டவர்களையும் ஒடுக்குமுறையில் ஈடுபட்டவர்களையும் ஒரே மாதிரியாக நடத்தக்கூடாது," என்று அல்-ஷாரா கூறினார்.
இரண்டு வாரங்களுக்கு முன்னர், சிரிய முன்னாள் அதிபர் பஷர் அல்-அசத்தின் ஆட்சியைக் கவிழ்த்த திடீர் தாக்குதல்களுக்கு ஷாரா தலைமைத் தாங்கினார்.
அகமது அல்-ஷாரா, கிளர்ச்சிக் குழுவான ஹயாத் தஹ்ரிர் அல்-ஷாமின் (HTS) தலைவர். முன்பு அவர் அபு முகமது அல்-ஜொலானி எனும் பெயரால் அறியப்பட்டார்.
ஹயாத் தஹ்ரிர் அல்-ஷாம் அமைப்பு, பயங்கரவாத அமைப்புகளின் பட்டியலில் இருந்து நீக்கப்பட வேண்டும் என்று அகமது அல்-ஷாரா தெரிவித்தார்.
கடந்த 2016 இல் அல்-கொய்தாவிலிருந்து பிரிந்துவந்து தொடங்கப்பட்ட குழுவாக, ஹயாத் தஹ்ரிர் அல்-ஷாம் அமைப்பு அறியப்படுவதால், அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள், ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் ஐ.நா. உட்பட பல சர்வதேச அமைப்புகளால் பயங்கரவாத அமைப்பாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஹயாத் தஹ்ரிர் அல்-ஷாம், ஒரு பயங்கரவாத குழு அல்ல என்று ஷாரா கூறினார்.
அக்குழுவைச் சேர்ந்தவர்கள், பொதுமக்களையோ அல்லது பொதுமக்கள் வசிக்கும் பகுதிகளையோ குறிவைக்கவில்லை என்று அவர் தெரிவித்தார். முந்தைய அசத் ஆட்சியில் நடந்த குற்றங்களால் தாங்கள் பாதிக்கப்பட்டதாக அக்குழுவினர் கருதுகின்றனர்.
மேலும், சிரியாவை ஆப்கானிஸ்தானாக மாற்ற அவர் விரும்புவதாகக் கூறப்படும் கருத்தையும் மறுத்தார்.
ஒவ்வொரு நாடும் வெவ்வேறு விதமான கலாசாரங்களுடன் வித்தியாசமானவை என அவர் தெரிவித்தார். ஆப்கானிஸ்தான் ஒரு பழங்குடி சமூகமாக இருந்தது. சிரியாவில், வித்தியாசமான மனநிலை இருப்பதாக அவர் தெரிவித்தார்.
பெண்களுக்குக் கல்வி வழங்கப்பட வேண்டும் என்பதை தான் நம்புவதாக அவர் கூறினார்.
கடந்த 2011 ஆம் ஆண்டு முதல் கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் இருக்கும் சிரியாவின் வடமேற்கு மாகாணமான இட்லிப் பற்றி குறிப்பிடுகையில், "எட்டு ஆண்டுகளுக்கும் மேலாக அங்கு பல்கலைக்கழகங்கள் உள்ளன," என்று ஷாரா கூறினார்.
அதுகுறித்து மேலும் பேசிய அவர், "பல்கலைக்கழகங்களில் 60 சதவிகிதத்திற்கும் அதிகமான பெண்கள் இருப்பதாக நான் நினைக்கிறேன்." என்றும் அவர் குறிப்பிட்டார்.
மேலும், மது அருந்துவது அனுமதிக்கப்படுமா என்ற கேள்விக்கு, "பல விஷயங்கள் சட்ட ரீதியானவை என்பதால் அதைப் பற்றி பேச எனக்கு உரிமை இல்லை" என்று ஷாரா தெரிவித்தார்.
"அரசியலமைப்பை இயற்றுவதற்கு சிரிய சட்ட நிபுணர்கள் அடங்கிய குழு ஒன்று உள்ளது. இந்த குழு சட்ட ரீதியான பிரச்னைகள் குறித்து முடிவு செய்யும். எந்த ஆட்சியாளரோ அல்லது அதிபரோ, அந்தச் சட்டத்தைப் பின்பற்ற வேண்டும்" என்றும் அவர் கூறினார்.
ஷாரா நேர்காணல் முழுவதும் நிதானமாக இருந்தார். குடிமக்கள் அணியும் உடைகளை அணிந்திருந்தார். மேலும், ஹயாத் தஹ்ரிர் அல்-ஷாம் அமைப்பு, அதன் கடந்த கால பயங்கரவாதத்திலிருந்து விலகவில்லை என நம்புபவர்களுக்கு, `அது உண்மையில்லை' என்று உறுதியளிக்க அவர் முயன்றார்.
சிரிய மக்களுள் பலர் அவரை நம்பவில்லை.
அடுத்த சில மாதங்களில், சிரியாவின் புதிய ஆட்சியாளர்களின் நடவடிக்கைகள், சிரியா எந்த மாதிரியான நாடாக இருக்க வேண்டும் என்பதையும், அவர்கள் எப்படி ஆட்சி செய்ய விரும்புகிறார்கள் என்பதையும் வெளிப்படுத்தும்.
Note:
The content shared here is sourced from publicly available internet platforms, and we do not claim ownership. We are not responsible for any inaccurate or fake information.