கோவை: கோவை வனத்தை ஒட்டிய கிராமங்களில் வனவிலங்குகளின் நடமாட்டம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் தொண்டாமுத்தூர் அருகே உள்ள தேவராயபுரத்தில் 10 அடி நீள மலைப்பாம்பு உலாவியதால் மக்கள் பீதியடைந்தனர். சம்பவ இடத்துக்கு சென்ற வனத்துறையினர் நீண்ட நேரம் போராடி அந்தப் பாம்பை பிடித்தனர்.
கோவை மாவட்டம், மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தை ஒட்டியிருப்பதால் அருகில் உள்ள கிராமங்களில் வனவிலங்குகளின் நடமாட்டம் அதிகம் இருப்பது வழக்கம். யானைகள், சிறுத்தைகள், கருஞ்சிறுத்தைகள், மான்கள், காட்டு பன்றிகள் உள்ளிட்ட ஏராளமான விலங்குகளின் நடமாட்டம் அதிகம் இருக்கிறது. தற்போது யானைகளின் வலசை காலகட்டம்.
தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா ஆகிய மூன்று மாநிலங்களைச் சேர்ந்த யானைகள் வலசையில் ஈடுபட்டுள்ளன. இதன் காரணமாக கோவையிலும் யானைகள் நடமாட்டம் முன்பை விட அதிகமாக உள்ளது. யானைகள் கூட்டம் கூட்டமாக ஊர்களிலும், விவசாய நிலங்களிலும் நுழைந்து வருகின்றன.
அதேபோல சிறுத்தைகள் நடமாட்டமும் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. சமீபத்தில் ஒரு கருஞ்சிறுத்தை ஒரு முயலை கவ்விக் கொண்டு செல்லும் வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதனால் வனப்பகுதியை ஒட்டியுள்ள கிராமங்களில் மக்கள் அச்சத்தில் உறைந்து போயுள்ளனர். மேலும் வனத்தை ஒட்டியுள்ள பகுதிகளில் மலை பாம்புகளின் நடமாட்டமும் அதிகரித்துள்ளது.
இந்நிலையில் தொண்டாமுத்தூர் அருகே தேவராயபுரம் காப்புக் காட்டில் இருந்து சுமார் ஒரு கி.மீ தொலைவில், சிறுவாணி சாலை ஐந்து முக்கு பகுதி அருகில் மலைப்பாம்பு உலாவியுள்ளது. அந்த மலைப்பாம்பு சுமார் 10 அடி நீளத்தில் இருந்துள்ளது. இதைப் பார்த்து பயந்த மக்கள் வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர். உடனடியாக வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்தனர்.
அப்போது மலைப்பாம்பு சாலையில் படுத்திருந்தது. வனத்துறையினர் அந்தப் பாம்பை நீண்ட நேரம் போராடி மீட்டனர். மீட்கப்பட்ட மலைப் பாம்பு இச்சிக்குழி சராகம் வனப்பகுதியில் பத்திரமாக விட்டனர். அந்த பாம்பு நல்ல நிலையில் உள்ளது. என்று வனத்துறையினர் கூறியுள்ளனர். இதனால் அந்தப் பகுதியில் சிறிது நேரத்துக்கு பரபரப்பு நிலவியது.
Note:
The content shared here is sourced from publicly available internet platforms, and we do not claim ownership. We are not responsible for any inaccurate or fake information.