பாகு: அஜர்பைஜான் ஏர்லைன்ஸ் விமான நிறுவனத்துக்கு சொந்தமான பயணிகள் விமானம் கடந்த டிசம்பர் 25ம் தேதி கஜகஸ்தானில் அவசரமாக தரையிறங்கியபோது விமானம் வெடித்துச் சிதறியதில் 38 பேர் பலியானார்கள். 29 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர். இந்நிலையில் முதற்கட்ட விசாரணையின் படி, தொழில்நுட்ப வெளிப்புற குறுக்கீடு (technical external interference) மற்றும் வெளிப்புறத்தில் விமானத்திற்கு ஏற்பட்ட பாதிப்பு (physical) ஆகிவற்றால் விமானம் விபத்தில் சிக்கியது என அஜர்பைஜான் ஏர்லைன்ஸ் தெரிவித்துள்ளது.
ஐரோப்பிய நாடான அஜர்பைஜானின் தலைநகர் பாகுவில் இருந்து, ரஷியாவின் குரோஸ்னி நகருக்கு அஜர்பைஜான் ஏர்லைன்ஸ் விமான நிறுவனத்துக்கு சொந்தமான 'எம்ப்ரேயர் 190’ ரக பயணிகள் விமானம் கடந்த டிசம்பர் 25ம் தேதி புறப்பட்டு சென்றது. இந்த விமானத்தில் 2 விமானிகள் உள்பட 5 பணியாளர்களும், 62 பயணிகளும் இருந்தனர்.
இந்த விமானம் கஜகஸ்தான் நாட்டின் வான்பரப்பில் பறந்து கொண்டிருந்தபோது விமானம் மீது பறவை ஒன்று மோதியதாக சொல்லப்படுகிறது. இதனால் விமானத்தை அவசரமாக தரையிறக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இதனால் கஜகஸ்தானின் அக்தாவ் நகருக்கு திருப்பி அங்குள்ள விமான நிலையத்தில் விமானத்தை அவசரமாக தரையிறக்க விமானிகள் முடிவு செய்தனர். அதன்படி அக்தாவ் நகர விமான நிலைய அதிகாரிகளுக்கு இது குறித்து தகவல் தெரிவித்து, விமானத்தை அவசரமாக தரையிறக்குவதற்கான அனுமதியை பெற்றார்கள்.
இதன் படியே விமானம் திசை மாற்றப்பட்டு அக்தாவ் நகர விமான நிலையத்தை நோக்கி பறந்து வந்தது. ஆனால் விமான நிலையத்தை அடைவதற்கு முன்பாக விமானம் விமானிகளின் கட்டுப்பாட்டை இழந்தது. இதையடுத்து விமானத்தை பத்திரமாக தரையிறக்க விமானிகள் கடுமையாக போராடினார்.
இதனால் விமானம் வானிலேயே போராடியது. ஆனால் அக்தாவ் நகர விமான நிலையத்தில் தரையிறக்க முடியவில்லை..
'
இதனால் அதன் அருகில் 3 கி.மீ தொலைவுக்கு முன்னதாக உள்ள திறந்தவெளி பகுதியில் விமானத்தை அவசரமாக தரையிறக்க விமானிகள் முயற்சித்தனர். இதன்படியே விமானம் தரை நோக்கி சென்று கொண்டிருந்தது. ஆனால் அடுத்த சில நொடிகளில் விமானம் திடீரென தரையில் விழுந்து வெடித்துச் சிதறி தீப்பிடித்தது. பெரும் தீப்பிழம்புகளுடன் கரும்புகை மண்டலமாக மாறியது.
இந்த விபத்தில் 2 விமானிகள் உள்பட 38 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். அதே சமயம் 29 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
படுகாயம் அடைந்த அவர்களை காப்பாற்றிய மீட்பு குழுவினர் ஆம்புலன்சுகள் மூலம் அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் பறவை மோதியதால் விமானம் திருப்பிவிடப்பட்டதாக கூறப்படும் நிலையில், குரோஸ்னி நகரில் நிலவிய மோசமான வானிலை காரணமாகவே அக்தாவ் நகருக்கு திருப்பிவிடப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது. இந்த விபத்து குறித்து உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிட்டுள்ள அஜர்பைஜான் அரசு, அக்தாவ் நகருக்கு விசாணை குழுவினை அனுப்பி உள்ளது.
விபத்து தொடர்பாக அஜர்பைஜான் ஏர்லைன்ஸ் விமான நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் “விமானத்தில் பயணித்தவர்களில் 37 பேர் அஜர்பைஜானைச் சேர்ந்தவர்கள், 16 பேர் ரஷியாவை சேர்ந்தவர்கள், 6 பேர் கஜகஸ்தானை சேர்ந்தவர்கள், 3 பேர் கிர்கிஸ்தானைச் சேர்ந்தவர்கள். இந்த விபத்து குறித்து கஜகஸ்தான் மற்றும் அஜர்பைஜான் அதிகாரிகள் தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறார்கள்” என்று கூறியது.
இந்நிலையில் ரஷ்யா நடத்திய ஏவுகணைச் சோதனைதான் விபத்திற்கு காரணம் என்ற குற்றச்சாட்டு எழுந்தது. இதை மறுத்த ரஷ்யா, விமானம் தரையிறங்க முயற்சிக்கும்போது பொதுமக்களின் கட்டமைப்புகளை குறிவைத்து குரோன்ஸி மற்றும் விளாடிகவ்காஸ் நகரங்களில் உக்ரைன் டிரோன் தாக்குதல் நடத்தியது இதுதான் பிரச்சனைக்கு காரணம் என ரஷ்யா விளக்கம் அளித்தது. இதனை திட்டவட்டமாக மறுத்த உக்ரைன், சேதமடைந்த ஜெட் விமானத்தை காஸ்பியன் கடலைக் கடக்க கட்டாயப்படுத்தியது ரஷ்யா தான். பெரும்பாலும் அவர்களின் குற்றத்திற்கான ஆதாரங்களை மறைக்க எங்கள் மீது குற்றம் சாட்டுகிறது என்று கூறியது.
இதனிடையே அஜர்பைஜான் ஏர்லைன்ஸ் விமான நிறுவனம் வெளியிட்ட அறிவிப்பில், முதற்கட்ட விசாரணையின் தகவலின்படி தொழில்நுட்ப வெளிப்புற குறுக்கீடு (technical external interference) மற்றும் வெளிப்புறத்தில் விமானத்திற்கு ஏற்பட்ட பாதிப்பு (physical) ஆகிவற்றால் விமானம் விபத்தில் சிக்கியது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே ரஷ்யாவிற்கு தற்காலிகமாக அனைத்து விமானங்களையும் அஜர்பைஜான் ஏர்லைன்ஸ் விமான நிறுவனம் ரத்து செய்துள்ளது.
Note:
The content shared here is sourced from publicly available internet platforms, and we do not claim ownership. We are not responsible for any inaccurate or fake information.