Manmohan Singh: மன்மோகன் சிங்கிற்கு நினைவிடம்.. எங்கே அமைகிறது? மத்திய அரசு கொடுத்த கிரீன் சிக்னல்

post-img
டெல்லி: மறைந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு டெல்லியில் நினைவிடம் அமைக்க மத்தியஅரசு அனுமதி வழங்கி உள்ளது. நினைவிடம் அமைக்க மத்திய அரசு அனுமதி மறுப்பதாக நேற்று இரவு காங்கிரஸ் விமர்சித்த நிலையில் நள்ளிரவில் மத்திய அரசு திடீரென்று நினைவிடத்துக்கு கிரீன் சிக்னல் வழங்கி உள்ளது. நம் நாட்டின் பிரதமராக 2 முறை பதவி வகித்தவர் மன்மோகன் சிங். இவர் முதன் முதலில் முன்னாள் பிரதமர் நரசிம்மராவ் அரசில் நிதி அமைச்சராக இருந்தார். அதன்பிறகு தான் 2004 முதல் 2014 வரை பிரதமராக இருந்தார். பொருளாதார மேதையான மன்மோகன் சிங் நம் நாட்டின் நிதி நிலைமையை சீர்ப்படுத்தினார். சரிவில் இருந்த பொருளாதாரத்தை மீட்டார். இந்நிலையில் தான் தனது 92வது வயதில் நேற்று முன்தினம் மன்மோகன் சிங் காலமானார். வயோதிகம் காரணமாக ஏற்பட்ட உடல்நலக்குறைவால் அவர் காலமானார். நேற்று அவரது உடலுக்கு பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள், காங்கிரஸ் தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர். இதைடுத்து இன்று மன்மோகன் சிங் உடல் காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ளது. அங்கு தலைவர்கள் இறுதி அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இதற்கிடையே தான் மன்மோகன் சிங்கிற்கு நினைவிடம் அமைக்க வேண்டும் என்று காங்கிரஸ் சார்பில் நேற்று பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதப்பட்டது. இதுதொடர்பான கடிதத்தை காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே எழுதியிருந்தார். அதில், "நாட்டு மக்களின் நலனுக்கு பாடுபட்டவா் மன்மோகன் சிங். சா்வதேச அளவில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்ட சமயத்தில் அதை சீரமைக்க மன்மோகன் சிங் ஆற்றிய பணிகள் மறக்க முடியாதது. அவருக்கு நினைவகம் அமைப்பதற்கு ஏதுவான இடத்தில் இறுதிச் சடங்கு நடத்தப்பட வேண்டும். உயிரிழந்த முன்னாள் பிரதமா்களுக்கு இறுதிச் சடங்கு நடைபெறும் இடத்தில் நினைவகம் அமைக்கும் நடைமுறையின்படி மன்மோகன் சிங்குக்கும் இடம் ஒதுக்க வேண்டும்" என்று குறிப்பிட்டிருந்தாா். இதற்கிடையே தான் நேற்று இரவு காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ஜெய்ராம் ரமேஷ், ‛‛ இந்தியாவின் முன்னாள் பிரதமர், முதல் சீக்கிய பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு மத்திய அரசு நினைவிடம் அமைக்க அனுமதி தராமல் திட்டமிட்டே அவமதிப்பு செய்கிறது'' என்று குற்றம்சாட்டினார். இந்த குற்றச்சாட்டை தொடர்ந்து மத்திய உள்துறை அமைச்சகம் சார்பில் மன்மோகன் சிங்கிற்கு நினைவிடம் அமைக்க ஒப்புதல் வழங்கி உள்ளது. இதுதொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், "மன்மோகன் சிங்குக்கு நினைவகம் அமைப்பது தொடா்பாக காங்கிரஸ் தேசியத் தலைவா் காா்கேவிடம் இருந்து வேண்டுகோள் பெறப்பட்டது. இதையடுத்து, மன்மோகன் சிங்குக்கு நினைவகம் அமைக்க இடம் ஒதுக்கப்படும் என மத்திய அமைச்சரவை கூட்டத்துக்கு பிறகு காா்கேவிடமும், மன்மோகன் சிங் குடும்பத்தினரிடம் தெரிவிக்கப்பட்டது. அவரது இறுதிச் சடங்குகளை முன்னெடுக்கவும் கூறப்பட்டது'' என குறிப்பிடப்பட்டுள்ளது. அதன்படி இன்று மன்மோகன் சிங்கின் உடல் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு யமுனை ஆற்றின் கரையில் அமைந்துள்ள நிகம்போத் காட் பகுதியை அடையும். அங்கு அவருக்கு இறுதி சடங்குடன் உடல் தகனம் செய்யப்பட உள்ளது. அதன்பிறகு மத்திய அரசு வழங்கும் இடத்தில் மன்மோகன் சிங்கிற்கு நினைவிடம் அமைக்கப்பட உள்ளது. ஆனால் தற்போது வரை மன்மோகன் சிங்கின் நினைவிடம் அமைக்கும் இடத்தை மத்திய அரசு அடையாளம் காணவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. Note: The content shared here is sourced from publicly available internet platforms, and we do not claim ownership. We are not responsible for any inaccurate or fake information.

Related Post