திபெத்தில் உலகின் மிகப்பெரிய நீர் மின் நிலையம்.. வாலாட்டும் சீனா.. இந்தியாவுக்கு பாதிப்பா?

post-img
பீஜிங்: சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ள தன்னாட்சி பிராந்தியமான திபெத்தில் உலகின் மிகப்பெரிய நீர் மின் அணை கட்டும் திட்டத்திற்கு ஒப்புதலை அண்மையில் சீனா கொடுத்துள்ளது. இந்த அணை கட்டப்படுவதால் பிம்மபுத்திரா நதியின் நீரோட்டம் பாதிக்கப்படுமா? என கவலை எழுந்துள்ள நிலையில், இந்தியாவுக்கு வேறு விதமான பாதிப்புகள் இருக்கிறதா? இரு நாடுகளுக்கும் இடையே மோதல் ஏற்பட்டால் ஏதேனும் சிக்கல் வருமா? என்பது பற்றி இங்கே பார்க்கலாம். இந்தியாவின் அண்டை நாடுகளில் ஒன்றாக இருக்கும் சீனாவுக்கு, ஆசியாவில் அசைக்க முடியாத சக்தியாக விளங்க வேண்டும் என்ற கனவு இருந்து வருகிறது. சீனாவின் இந்த கனவுக்கு கடும் சவாலாக இருப்பது இந்தியாதான். இதனால் இந்தியா மீது கடும் கோபத்தில் இருக்கும் சீனா, இந்தியாவுக்கு எதிரான நடவடிக்கைகளை செய்து அவ்வப்போது சீண்டி வருகிறது. குறிப்பாக இந்தியாவை சுற்றியுள்ள நாடுகளை தனது கைக்குள் போட்டுக்கொள்ள சீனா துடிக்கிறது. இலங்கை, மாலத்தீவுகள் போன்ற நாடுகளுக்கு பெருமளவு நிதி கொடுத்து தனது வலையில் வீழ்த்த முயற்சிக்கிறது. சீனாவின் இந்த தந்திரங்க்களை முறியடிக்க இந்தியாவும் வியூகம் வகுத்து வருகிறது. இத்தக சூழலில் தான், இந்தியாவுக்கு மிக அருகில் உள்ள தன்னாட்சி பிராந்தியமான திபெத்திய பீடபூமியில் உலகின் மிகப்பெரிய நீர் மின் அணையை கட்டுவதற்கு சீனா ஒப்புதல் அளித்துள்ளது. திபெத்தில் உருவாகும் யார்லுங் சாங்போ என்ற நதியில் தான் இந்த அணை கட்டப்பட உள்ளது. இந்த நதிதான், அருணாச்சல பிரதேசம் மற்றும் அசாம் மாநிலங்களிலும் இறுதியாக வங்கதேசத்திலும் பாயும் போது பிரம்மபுத்திரா நதியாக மாறுகிறது. இரண்டு நாடுகள் வழியாக பாயும் இந்த யார்லுங் சாங்போ நதியைத் தடுத்து மிகப்பெரிய அணையை கட்டவே சீனா முயற்சியை மேற்கொண்டு வருகிறது. யார்லுங் சாங்போ ஆற்றில் அணை கட்டினால் ஆண்டுதோறும் 300 பில்லியன் கிலோவாட்-மணிநேர மின்சாரத்தை உற்பத்தி செய்ய முடியும் என சொல்லப்படுகிறது. அணை கட்டுவதற்காக 254.2 பில்லியன் யுவான் ($34.83 பில்லியன்) செலவு ஆகும் என மதிப்பிடப்பட்டுள்ளது. நதியில் அணை கட்டும் பட்சத்தில் சுற்றுச்சூழலுக்கும் இந்தியா, வங்கதேசம் செல்லும் நீரோட்டத்திலும் பாதிப்பை ஏற்படுத்தும் என பல்வேறு தரப்பினரும் கவலை தெரிவிக்கிறார்கள். அதேவேளையில், சுற்றுச்சூழலுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என்பது சீனாவின் வாதமாக உள்ளது. இந்த நதியில் அணை கட்டும் பட்சத்தில் அது நீரோட்டத்தை தடுக்கும் விதமாகவும் இருக்கும் என்பதோடு, மோதல்கள் ஏற்படும் சமயத்தில் அதிக தண்ணீரை திறந்துவிட்டு செயற்கையாக பேரழிவை ஏற்படுத்த முடியும் என்பதால் இந்தியாவுக்கு கவலையை ஏற்படுத்தியுள்ளது. அதே வேளையில், அருணாசல பிரதேசத்தின் பிரம்மபுத்திராவில் இந்தியா தனியாக ஒரு அணை கட்டி வருகிறது. உலகின் கொடை என்று அழைக்கப்படுவது திபெத்திய பீடபூமி. பூகோள ரீதியாக திபெத்திய பீடபூமி அமைந்து இருக்கும் இடம் மிகவும் சவாலானது. டெக்டானிக் பிளேட் நகர்வுகள் காரணமாக அங்கு அடிக்கடி நில அதிர்வுகள் ஏற்படும். இத்தகைய சிக்கலான பகுதியில் சீனா உலகின் மிகப்பெரிய அணை கட்ட துடிப்பது பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது. Note: The content shared here is sourced from publicly available internet platforms, and we do not claim ownership. We are not responsible for any inaccurate or fake information.

Related Post