காமெடி பீசு.. சாட்டையடிக்கு பதிலடி..? விஜய் Gate பூட்டிக்கிடக்கு? வேல்முருகன் வேதனை

post-img
சென்னை: அண்ணா பல்கலைக் கழக மாணவி பாலியல் பலாத்காரம் தொடர்பாகப் போராட்டத்தை எதிர்க்கட்சிகளைத் திரட்டி தீவிரப்படுத்தாமல், அண்ணாமலை அதை காமெடியாக்கி விட்டார் என்று பண்ருட்டி வேல்முருகன் குற்றஞ்சாட்டி இருக்கிறார். அண்ணா பலகலைக் கழக வளாகத்திற்குள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட மாணவிக்கு நீதி கேட்டு எதிர்க்கட்சிகள் தனித்தனியாகப் போராடி வருகின்றனர். பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தனது வீட்டின் முன்பாக நின்று சாட்டையால் அடித்துக் கொண்டு போராட்டம் நடத்தி இருந்தார். தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சரியாக இல்லை என்று பின்னர் ஆளுநரைச் சந்தித்து மனு அளித்தார். அதேபோல் நடிகர் விஜய் திடீரென்று கைப்பட எழுதிய கடிதத்தை வெளியிட்டுக் கண்டித்திருந்தார். அதன் நகல்களை அவரது கட்சித் தொண்டர்கள் மக்களிடம் விநியோகித்தனர். அதற்காக தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் உட்படக் கைது செய்யப்பட்டனர். பின்னர் தனது கட்சி நிர்வாகிகளுடன் ஆளுநரைச் சந்தித்து புகார் மனுவை அளித்தார் விஜய். அவர் ஆளுநரிடம் என்ன கோரிக்கைகளை வைத்தார் என்பதில் வெளிப்படைத் தன்மை இல்லை என்று சில தலைவர்கள் கருத்து கூறி வருகின்றனர். இந்தக் குற்றச்சம்பவத்தில் கைது செய்யப்பட்டுள்ள ஞானசேகரன் திமுகவைச் சேர்ந்தவர் என்றும் அமைச்சர்களுடன் நெருங்கிய தொடர்பிலிருந்தவர் என்றும் எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டி வருகின்றனர். ஞானசேகரன் குறிப்பிட்டுச் சொன்ன 'அந்த சார் யார்?' என கேள்வி எழுப்பிவருகிறனர். ஆனால், திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் திமுகவில் ஞானசேகரன் உறுப்பினர் இல்லை என்று மறுத்துள்ளார். சட்டப்படி குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்கள் என அரசு கூறிவருகிறது. மறுபக்கம் பதிவு செய்யப்பட்ட எஃப்ஐஆர் வெளியே கசிந்த விவகாரம் சர்ச்சையானது. மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய நடைமுறைச் சட்டப்படி மேலிடத்திற்கு அனுப்பப்பட்ட ஆவணம் வெலியே கசிந்துள்ளது. அதை மத்திய அரசு சார்ந்த அதிகாரி ஏற்றுக் கொண்டுள்ளார். எஃப்ஐஆர் கசிவதற்குக் காரணமான அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் எனச் சென்னை உயர்நீதிமன்றம் கூறியுள்ளது. ஆனால், தமிழகக் காவல்துறை மீது குற்றச்சாட்டுகளை முன்வைத்து வரும் அண்ணாமலை மத்திய அரசின் உளவுப்பிரிவு மூலம் தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி குற்றவாளி யாருடன் தொடர்பிலிருந்தான் என்ற விவரங்களை வெளியிட்டிருக்க முடியும். ஆனால், அவர் சாட்டையடியால் போராட்டத்தை விவகாரத்தை காமெடியாக மாற்றிவிட்டார் என்கிறார் பண்ருட்டி வேல்முருகன். இந்த விவகாரம் தொடர்பாக வேல்முருகன் அளித்துள்ள பேட்டியில், "சில மாதங்களாகப் பெண்களுக்கு பாதுகாப்பற்ற சூழல் தமிழ்நாட்டில் ஏற்பட்டிருக்கிறது. சென்னை தலைநகரில் உள்ள புகழ்பெற்ற அண்ணா பல்கலை வளாகத்திற்குள்ளாகவே ஒரு பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டிருக்கிறார். இப்படித்தான் வேலூரில் தன் காதலனுடன் பேசிக் கொண்டிருந்த மாணவியை வடமாநில கும்பல் ஒன்று காதலனை அடித்து உடைத்துவிட்டு, அந்தப் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த பாதக செயல் நடந்துள்ளது. இரண்டு நாட்கள் முன்பாக ஒரு செவிலியர் மாணவி கொலை செய்யப்பட்டுத் தூக்கிவீசப்பட்டுள்ளார். அதற்காகக் காரணம் இன்னும் வெளியாகவில்லை. அண்ணா பலகலை மாணவி விவகாரத்தில் குற்றஞ்சாட்டப்பட்டு கைதாகி இருக்கும் ஞானசேகரன் மீதுள்ள வழக்கை விரைவுபடுத்தி அவனுக்கு மரண தண்டனை பெற்று தரவேண்டும். நான் மரண தண்டனைக்கு எதிரானவன். ஆனாலும், இந்த குற்றச்செயலைச் செய்த அவனுக்கு மரணதண்டனைதான் சரியானது. இந்தச் சர்ச்சையில் சில விசயங்களை வெளிப்படையாகவே பேசலாம். கைது செய்யப்பட்டவர் திமுக அமைச்சர் மா.சுப்பிரமணியனுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டார் எனும் ஒரே காரணத்திற்காக அவரை இந்த விவகாரத்தில் பாஜக உள்ளிட்ட சில கட்சிகள் இழுத்துவிடுவது சரியானதல்ல.அவர் மீது வைக்கப்படும் விமர்சனம் அரசியல் காழ்ப்பில் வருகிறது. அதை நான் ஏற்கவில்லை" என்று சொல்லியுள்ளார். மேலும், "விஜய் வழக்கம் போல் ஆளுநரைப் பார்த்து மனு அளித்துவிட்டு வீட்டில் உள்ள பெரிய கேட்டை இழுத்து சாத்திக்கொண்டார். அவர் தொண்டர்களை வைத்து பெரிய போராட்டத்தை முன் எடுத்திருக்க வேண்டும். ஆளுநரைச் சந்தித்தவர் பின் ஊடகங்களைச் சந்தித்து விளக்கமும் அளிக்கவில்லை. அதனால் ஒரு பலனும் இல்லை" என்கிறார். Note: The content shared here is sourced from publicly available internet platforms, and we do not claim ownership. We are not responsible for any inaccurate or fake information.

Related Post