ரோஜா ஆதித்யா: ஒப்பாரிப் பாடல் முதல் கர்நாடக சங்கீதம் வரை... சுயதீன இசைக் கலைஞர் சந்திக்கும் சவால்கள் என்ன?

post-img
மார்கழியின் வழக்கத்திற்கு மாறான ஒரு பருவநிலையில், கொளுத்தும் வெயிலில், சென்னையில் நடைபெற்ற மார்கழியில் மக்கள் இசை நிகழ்வில், நான்கு பெண்கள் ராப் இசைக்க, "காதல் பண்ணா என்ன? குத்தமா என்ன? காதல் பண்ணா என்ன? பாவமா என்ன?" என்று பாடல் பாடிக் கொண்டிருந்தார் அந்தப் பெண். ஆணவப் படுகொலைக்கு எதிராக எழுதப்பட்ட அந்தப் பாடலில் பாதிக்கப்படும் பெண்களின் வாழ்க்கையையும் அவல நிலையையும் வரிகளாகக் கோர்த்து பயிற்சி எடுத்துக் கொண்டிருந்தது அந்த இசைக் குழு. சுயாதீன பாடகரும் இசையமைப்பாளருமான ரோஜா ஆதித்யாதான் அந்தப் பெண். தருமபுரியை பூர்வீகமாகக் கொண்ட அவருக்கு பின்னணிப் பாடகியாக வேண்டும் என்று கனவு. அந்தக் கனவையும், அதற்கான வாய்ப்பையும் தேடி கடந்த பத்து ஆண்டுகளாக சென்னையில் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். மார்கழியில் மக்களிசை நிகழ்வில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பாடிய ரோஜாவுக்கு இது இரண்டாவது வாய்ப்பு. இந்த முறை தனியாக அல்லாமல், தமிழகத்தின் முதல் பெண்கள் ராப் குழுவினரான சொல்லிசை சிஸ்டாவுடன் இணைந்து பாடினார். இத்தகைய மேடைகள் உருவாகும்போது மக்களுக்கான இசையை, சாமானிய மக்களால் உருவாக்கப்படும் இசையை, பல கட்டங்களுக்கு எடுத்துச் செல்ல முடியும் என்று கூறுகிறார் ரோஜா. ஆனால் அந்தப் பயணம் எளிதாக இல்லை என்று கூறுகின்றனர் சொல்லிசை சிஸ்டா குழுவைச் சேர்ந்த பெண்கள். இசைத்துறையில் பெண் கலைஞராக ரோஜா சந்திக்கும் சவால்கள் என்ன? சாமானிய மக்களின் இசைக்கான வாய்ப்புகள் கிடைக்கின்றனவா? முழு நேர தொழில்முறை கலைஞராக அவர் வளர்வதில் தடையாக இருப்பது என்ன? "பெண்கள் சுயாதீன இசைக்கலைஞர்களாக இருப்பதே சவாலான ஒன்றுதான். இதில் வருமானம் இல்லை. இவர்கள்தான் நமக்கு ரோல்மாடலாக இருக்க வேண்டும் என்று பார்ப்பதற்கான எடுத்துக்காட்டுகளும் தமிழ்ச் சூழலில் குறைவாகவே உள்ளது. அதோடு, இது ஆண்களுக்கான உலகமாகவே இருக்கிறது. ஒரு பெண் என்ன நினைக்கிறாள் என்பதையும் இங்கு ஆண்கள்தான் எழுதுகின்றனர். இந்தத் துறையில் காலடி எடுத்து வைத்து, ஒரு பாடல் பாடுவது என்பது பலரும் கற்பனை செய்ய முடியாத ஒன்றாக இருக்கிறது," என்கிறார் ரோஜா ஆதித்யா. பறை உள்படப் பல்வேறு இசைக்கருவிகளை இசைக்கும் ரோஜா பெரும்பாக்கத்தில் 10 ஆண்டுகளாக வசித்து வருகிறார். முழுநேர இசைக் கலைஞராக ஒருவர் மாறுவதற்குப் பல ஆண்டுகள் முதலீடு செய்ய வேண்டும் என்று கூறுகிறார் ரோஜா. தமிழில் பாடல்களை எழுதுவதும், இசைப்பதும்தான் அவருடைய நோக்கமாக இருக்கிறது. "பாடல் பாடுவதையும், எழுதுவதையும், அதற்கான 'ட்யூனை' உருவாக்குவதையும்தான் அதிகம் விரும்புகிறேன். ஆனால் தொழில்முறை கலைஞராக உருவெடுக்கப் பெரிய தொடர்புகள் தேவைப்படுகின்றன. பணமும், முதலீடும் தேவைப்படுகிறது. கூடவே எனது படைப்புகளின் தொகுப்பும் குறிப்பிட்ட அளவுக்குத் தேவைப்படுகிறது. இப்படி வாய்ப்பு கிடைக்கும் நேரங்களில் நான் மேடைகளில் பாடுகிறேன். ஆனால் வருமானத்திற்காக, என் பகுதியில் வசிக்கும் மாணவர்களுக்கு இசை வகுப்புகளை எடுத்து வருகிறேன்," என்கிறார் தகவல் தொழில்நுட்பப் பிரிவில் பொறியியல் பட்டம் பெற்ற ரோஜா. சிறுவயதில் இருந்தே பாடல்களை எழுதி வரும் அவர், ஓய்வாக இருக்கும் நேரத்தில் ஒப்பாரிப் பாடல்களை எழுதுவதை வழக்கமாகக் கொண்டிருப்பதாகக் கூறுகிறார். "நம்முடைய நாட்டுப்புறக் கலைகள் பன்முகத்தன்மை கொண்டவை. கும்மி, ஒப்பாரி, நடவுப் பாட்டு, தாலாட்டு என்று நமது நாட்டுப்புறப் பாடல் வடிவங்களை எண்ணிக் கொண்டே போகலாம்." என கூறும் ரோஜா, அவற்றை முறையாக டிஜிட்டல்மயமாக்கவில்லை என வருந்துகிறார். "நமக்கு பரவை முனியம்மாவையும், கிடாக்குழி மாரியம்மாளையும், விஜயலட்சுமி நவநீதனையும் திரைப்படப் பாடல்கள் மூலமாகவே தெரியும். ஆனால் அவர்கள் திரையில் தோன்றுவதற்கு முன்பாகவே பல்லாண்டுக் காலத்திற்குப் பல அற்புதமான பாடல்களை எழுதி, மெட்டுக்கட்டிப் பாடியுள்ளனர். இருப்பினும், அவர்களின் பெரும்பாலான பாடல்கள் டிஜிட்டலில் பதிவு செய்யப்படவில்லை. அவை கேசட்டுகளாக வந்தனவா என்பதும் கேள்விக்குறிதான். இன்று யூடியூப், ஸ்பாட்டிஃபை போன்ற செயலிகள் எங்களைப் போன்ற சுயாதீன இசைக்கலைஞர்களுக்கு ஒரு நம்பிக்கை அளிக்கின்றன. ஒரு வாய்ப்பை வழங்குகின்றன," என்கிறார் ரோஜா. ரோஜாவின் கூற்றுப்படி, ஒரு பெண் கலைஞர் உருவாவதில் அவருடைய குடும்பத்தின் ஆதரவு மிக முக்கியமானது. "வெளியூர்களில், வெளிமாவட்டங்களில்கூட இசை நிகழ்ச்சியில் பாடல்கள் பாடிவிடலாம். ஆனால் உங்கள் சொந்த ஊரில் நடக்கும் கோவில் திருவிழாக்களிலும் தேர் இழுக்கும் நிகழ்வுகளிலும் பாடல் பாட வேண்டும் என்றால் அது பல நேரங்களில் கைகூடாத கனவாகிவிடும்." கடந்த 10 ஆண்டுகளாகப் பாடல்கள் பாடி வந்தாலும்கூட, கடந்த மூன்று ஆண்டுகளில்தான் அவருடைய கிராமத்தில் நடைபெற்ற தேர்த் திருவிழாவில் பாடும் வாய்ப்பு அவருக்குக் கிடைத்து வருகிறது. இங்கு பல பெண்கள் பல்வேறு வகையில் திறமையுடையவர்களாக இருக்கிறார்கள் என்றும், ஆனால் அவர்களுக்கான வாய்ப்புகளை மறுக்கும் முதல் இடமாக இருப்பது அவர்களின் குடும்பங்கள்தான் என்றும் அழுத்தமாகக் கூறும் ரோஜா, "இசை அல்லது நடனத்தில் ஒரு பெண் குழந்தைக்கு ஆர்வம் இருக்கும்போது, அதை அவர் முதலில் வெளிப்படுத்துவது தன் வீட்டில்தான். ஆனால், இன்றும் பலரும் தங்கள் குடும்பத்தினரிடம் இருந்து பல வசைகளைக் கேட்ட வண்ணம்தான் இருக்கின்றனர். குடும்பம் ஓர் ஆரோக்கியமான விவாதத்தைத்தான் வழங்க வேண்டுமே தவிர, பெண்களின் ஆசைகளை முற்றிலுமாக மறுக்கும் இடமாகக் குடும்ப உறவுகள் இருக்கக் கூடாது," என்று வற்புறுத்துகிறார். அதோடு, இன்றும் தமிழ்நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் இசைக் கல்லூரிகள், வகுப்புகளை அறிமுகம் செய்ய அரசும், தனியார் நிறுவனங்களும் முன்வர வேண்டும் என்று ரோஜா விரும்புகிறார். ஆரம்பத்தில் தயக்கம் காட்டிய பெற்றோர்கள் தற்போது தனது கனவைப் புரிந்து கொண்டதாகக் கூறும் ரோஜா, ''இதன்மூலம் ஒருவேளை பலரின் அணுகுமுறை மாறக்கூடும்'' என்கிறார். ரோஜாவின் கனவை அவருடைய பெற்றோர்கள் புரிந்து கொண்டாலும்கூட சில நேரங்களில் "இந்தத் துறைக்கு வந்து கஷ்டப்பட்டது மட்டுமே மிச்சம். இதில் எந்தவிதமான வருமானமும் இல்லை. மேற்கொண்டு மன உளைச்சலும், அலைச்சலும் மட்டுமே மிஞ்சுகிறது. இதில் நீடிக்க வேண்டுமா என்று யோசி" எனத் தனது பெற்றோர் பேசத் தொடங்கி இருப்பதாக ரோஜா கூறினார். "என் பெற்றோர் கூறுவதும் உண்மைதான். உங்களுக்கான ஒரு நல்ல வாய்ப்பு கிடைக்கும் வரை தத்தளிக்கும் படகின் கதைதான். சில நேரங்களில் நாங்கள் பாடல்கள் பாட கிராமப்புறங்களுக்குச் செல்லும்போது, உண்ண உணவும், தூங்க இடமும் தரக்கூட யோசிப்பார்கள். ஒரு கச்சேரிக்கு 3,000 ரூபாய் ஒப்பந்தம் செய்திருப்போம். ஆனால் பாடல் பாடி முடித்த பிறகு எங்களுக்கு அதில் பாதிதான் வந்து சேரும்." சென்னை, கோவை, பெங்களூரு போன்ற இடங்களில் நடைபெறும் 'ஓப்பன் மைக்' நிகழ்வுகளுக்கு ரோஜா பணம் கொடுத்து, பாடல் பாடிய நிகழ்வுகளையும் நினைவுகூர்ந்தார். "நான் யார், என்ன செய்து கொண்டிருக்கிறேன் என்பதை தொடர்ச்சியாக என்னைச் சுற்றியுள்ள மக்களுக்கும், சில நேரங்களில் எனக்கும் உணர்த்திக்கொண்டே இருக்க வேண்டும். அதனால் இவ்வாறு நான் செய்வதுண்டு." உணவகங்கள் அல்லது பொதுமக்கள் கூடும் இடங்களில் இசைக் கலைஞர்கள், கவிஞர்கள், நகைச்சுவைப் பேச்சாளர்கள் தங்களின் திறமைகளை அங்கே கூடியிருக்கும் பொதுமக்களிடம் வெளிப்படுத்தும் நிகழ்வே ஓப்பன் மைக். சில நேரங்களில், எங்கெல்லாம் கலை நிகழ்ச்சிகள் நடக்கின்றனவோ, அங்கெல்லாம் பாடுவதற்கு ஒரு வாய்ப்பு வேண்டுமெனக் கேட்டிருப்பதாக கூறும் ரோஜா, "உண்மையில் சொல்லப் போனால் இலவசமாகப் பாடல் பாடிவிட்டுத் திரும்பி வருவேன்" என்கிறார். ரோஜா, தான் ஒரு இசைக்கலைஞராக அறியப்படுவதையே விரும்புகிறார். 'பறக்கவே நினைக்கிறேன்' என்ற பாடல் ஆல்பம் ஒன்றைத் தற்போது வெளியிட்டுள்ளார். இசையமைப்பாளர் ஷான் ரோல்டனின் இசையில் ஒரு திடைப்படப் பாடலைப் பாடியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். அதேவேளையில் தனது ஸ்பாட்டிஃபை தரவுகளின்படி, ஆண் ரசிகர்களே தனது பாடலை அதிகம் கேட்பதாகக் கூறுகிறார். "முதலில் என் இருப்பை உறுதி செய்தாக வேண்டும். அதற்கான பாடல்களுக்கு முக்கியத்துவமும் முன்னுரிமையும் வழங்குகிறேன். ஆனால், நான் யார் என்பதை அறிந்த ஒரு சிறிய பெண் ரசிகர் வட்டம் உருவாகும்போது, பெண்கள் மீதான ஒடுக்குமுறை, பிரச்னைகள் என்று எனது கலைப் பயணம் பரந்துபட்டதாக விரிவடையும்," என்று நம்பிக்கையுடன் பகிர்ந்துகொண்டார் ரோஜா ஆதித்யா. Note: The content shared here is sourced from publicly available internet platforms, and we do not claim ownership. We are not responsible for any inaccurate or fake information.

Related Post