விமானத்தில் பாதுபாப்பான இருக்கை எது? எங்கு அமர்ந்தால் விபத்திலும் உயிர் தப்பலாம்!

post-img
டெல்லி: கடந்த சில நாட்களாகவே விமான விபத்துகள் குறித்த தகவல்கள் வெளியாகி நமக்கு பெரும் அதிர்ச்சி தருவதாக அமைகிறது. இப்போது விமான பயணிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், இதுபோன்ற விபத்து செய்திகள் பலருக்கும் ஷாக் கொடுப்பதாக இருக்கிறது. இந்தச் சூழலில் பொதுவாக ஒரு விமானத்தில் அதிக பாதுகாப்பான சீட் எது என்பது குறித்து நாம் பார்க்கலாம். அஜர்பைஜான் விமான விபத்தில் 38 பேர் உயிரிழந்தனர். அதேநேரம் இந்த விமானத்தில் பயணித்த சிலர் உயிருடன் மீட்கப்பட்டனர். அதேபோல தென்கொரிய விமான விபத்தில் கூட 179 பேர் உயிரிழந்த நிலையில், அவர்களில் இருவர் மட்டுமே உயிருடன் மீட்கப்பட்டனர். விமான விபத்துகள்: இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால் இரு விபத்தில் விமானத்தின் பின்புறத்தில் அமர்ந்து இருந்தவர்களே உயிர் தப்பி இருக்கிறார்கள். இதைப் பார்க்கும் போது விமானத்தின் பின்புறம் தான் பாதுகாப்பானதா.. அதில் பயணித்தால் எந்தவொரு விபத்தில் இருந்தும் கூட தப்பிக்கலாமா என்று கேள்வி நமக்கு வரும் இதற்கான பதிலை நாம் பார்க்கலாம். விமானங்கள் பாதுகாப்பானது தான்: முதலில் நாம் ஒரு விஷயத்தைப் புரிந்து கொள்ள வேண்டும். அதாவது உலகின் மற்ற போக்குவரத்து முறைகளைக் காட்டிலும் விமான போக்குவரத்து தான் இருப்பதிலேயே பாதுகாப்பானது. சாலை விபத்துகள் மற்றும் ரயில் விபத்திகளில் ஏற்படும் உயிரிழப்புகளைக் காட்டிலும் குறைவான உயிரிழப்புகளே ஏற்படுகிறது. விமானத்தில் பின்பற்றப்படும் கடுமையான பாதுகாப்பு நெறிமுறைகளே இதற்குக் காரணம். மேலும், முந்தைய ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் விமான விபத்துகள் காரணமாக ஏற்படும் உயிரிழப்புகளும் கூட கணிசமாகக் குறைந்தே வருகிறது. பாதுகாப்பு அமைப்புகளில் பல முன்னேறி இருந்தாலும் கூட சிறிய இயந்திர கோளாறு அல்லது மனித பிழைகள் கூட பேரழிவை ஏற்படுத்திவிடும். மேலும், விமான விபத்துகள் பேரழிவை ஏற்படுத்துவதாக இருப்பதால் தான் அவை எப்போதும் பெரிய விஷயமாகச் செய்திகளில் இடம்பெறும். ஆனால், ஒப்பீட்டளவில் விமான போக்குவரத்து என்பது பல மடங்கு பாதுகாப்பானதாகவே இருக்கிறது. எந்த சீட் பாதுகாப்பானது: சரி விஷயத்திற்கு வருவோம். விமானத்தில் எந்த சீட் பாதுகாப்பானது. இதற்குத் துல்லியமான ஆய்வு முடிவுகள் இல்லை என்ற போதிலும், பொதுவாக பின் சீட்கள் தான் பாதுகாப்பானதாக இருப்பதாக ஆய்வாளர்கள் குறிப்பிடுகிறார்கள். கடந்த 1971 முதல் 2005 அமெரிக்காவில் நடந்த விமான விபத்துகளை ஆய்வு செய்து ஒரு ரிபோர்ட் வெளியிடப்பட்டது. அதில் மற்ற இருக்கைகளைக் காட்டிலும் விமானத்தின் பின்பகுதியில் உள்ள இருக்கைகள் மிகவும் பாதுகாப்பானவை என்று கூறப்பட்டுள்ளது. விமானத்தின் பின்பகுதியில் அமர்ந்திருக்கும் பயணிகளுக்கு உயிர் பிழைப்பதற்கான வாய்ப்பு 40% அதிகமாக இருப்பதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது. பின்பகுதியில் இருப்போர் உயிர் பிழைக்க அதிக வாய்ப்பு இருக்கும் நிலையில், அது முன்னோக்கி வர வர உயிர் பிழைப்பதற்கான வாய்ப்புகள் குறைந்து கொண்டே செல்கிறது. பிரிட்டனில் நடந்த மற்றொரு ஆய்விலும் கூட கிட்டதட்ட இதே முடிவுகள் தான் தெரிய வந்து இருக்கிறது. என்ன காரணம்: முன் இருக்கையில் தான் எப்போதும் முதல் வகுப்பு அல்லது அதிக கட்டணம் கொண்ட இருக்கைகள் இருக்கும். ஆனால் உண்மையில் அவை தான் எளிதாகப் பாதிக்கக்கூடிய சீட்களாக இருக்கும். ஏனென்றால் விமானம் எந்தவொரு வகையிலும் விபத்தில் சிக்கும் போது விமானத்தின் முன்பகுதி தான் அதிகம் பாதிக்கப்படும். இதன் காரணமாகவே முன் சீட்டு அதிக ஆபத்தானதாக இருக்கிறது. அப்படியென்றால் முன் சீட்டை புக் செய்யாமல் என்ன ஆனாலும் பின் சீட்டில் மட்டும் அமர்ந்து பயணிக்கலாமா.. அது நிச்சயம் உயிரைக் காப்பாற்றுமா எனக் கேட்டால்.. அவ்வளவு எல்லாம் யோசிக்கத் தேவையில்லை என்பதே பதில். விமான பயணங்கள் என்பது நீங்கள் நினைப்பதைக் காட்டிலும் பல மடங்கு பாதுகாப்பானது. எனவே, பின் சீட்டில் மட்டுமே அமர்ந்து பயணிப்பேன் என அடம்பிடிக்கத் தேவையில்லை. Note: The content shared here is sourced from publicly available internet platforms, and we do not claim ownership. We are not responsible for any inaccurate or fake information.

Related Post