பிடி அரசகுமார் அன்பில் மகேஷ் பங்கேற்ற விழா.. பாஜக மாநில தலைவர் அண்ணாமலை எழுப்பிய முக்கிய கேள்வி

post-img
சென்னை: தனியார் பள்ளிகள் உதவியுடன் அரசு பள்ளிகளை மேம்படுத்தும் திட்டத்திற்கு திமுகவின் கூட்டணியில் உள்ள இடதுசாரி கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இந்நிலையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலையும் இந்த திட்டத்தை விமர்சித்துள்ளார். தமிழக பட்ஜெட்டில், கல்வித்துறைக்கு ஒதுக்கப்பட்ட ரூ. 44,042 கோடி எங்குச் சென்றது? சிதிலமடைந்த 10,000 பள்ளிகளுக்குப் புதிய கட்டிடங்கள் கட்டப்படும் என்ற திமுகவின் வாக்குறுதி என்ன ஆனது? என்று கேள்வி எழுப்பியுள்ளார். தமிழ்நாட்டில் 500 அரசு பள்ளிகளை தனியாருக்கு தத்து கொடுப்பதாக செய்திகள் வெளியாகி இருந்தது. அடுத்த கல்வி ஆண்டில் 500 அரசு பள்ளிகளில் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த, அவற்றின் அருகில் உள்ள தனியார் பள்ளிகள் பங்களிப்புடன் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தகவல்கள் பரவி இருந்தது. இவை அரசுப் பள்ளிகளை தனியார் பள்ளிகளுக்கு தத்துக் கொடுக்கும் செயல் என மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன் கண்டனம் தெரிவித்து இருந்தது. ஏழை குழந்தைகளின் கல்வி உரிமையை பறிக்கும் இந்த செயலை அரசு கைவிட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியிருந்தார். இந்நிலையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள பதிவில், "தமிழகத்தில், திமுக மாவட்டச் செயலாளர்கள் தொடங்கி, சட்டமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் என இறுதியில் கோபாலபுரம் குடும்பம் வரை, தனியார் பள்ளிகள் நடத்தி வருவது அனைவரும் அறிந்த உண்மை. இந்த நிலையில், திமுகவின் தலைமைக் கழக செய்தித் தொடர்பு துணைத்தலைவராக இருக்கும் திரு. B.T.அரசகுமார் அவர்கள், தமிழகம் முழுவதும் இருக்கும் அனைத்துத் தனியார் பள்ளிகளுக்கும், தனது தலைமையில் ஒரு புதிய சங்கம் தொடங்குகிறார். அதன் தொடக்கவிழாவில், பள்ளிக் கல்வித்துறை அமைச்சரும் பங்கேற்கிறார். விழா பற்றிய செய்திக் குறிப்பு, தமிழக ஊடகங்களுக்கு வழங்கப்படுகிறது. அந்தச் செய்திக் குறிப்பின் அடிப்படையில், தினமணி உள்ளிட்ட முன்னணி ஊடகங்கள், "தமிழகத்தில் 500 அரசுப் பள்ளிகளைத் தத்தெடுக்கும் தனியார் பள்ளிகள்: அமைச்சர் அன்பில் மகேஷ் பாராட்டு" என்ற தலைப்பில், கடந்த 31.12.2024 அன்று செய்தி வெளியிடுகின்றன. அமைச்சர்கள் பங்கேற்கும் இது போன்ற தனியார் நிகழ்ச்சிகளில், ஊடகங்கள், தாங்கள் பெற்ற செய்திக் குறிப்பை அடிப்படையாகக் கொண்டு செய்திகள் வெளியிடுவது வழக்கமான ஒன்று. எங்களுடைய கேள்விகள் என்னவென்றால், தமிழக பட்ஜெட்டில், கல்வித்துறைக்கு ஒதுக்கப்பட்ட ரூ. 44,042 கோடி எங்குச் சென்றது? சிதிலமடைந்த 10,000 பள்ளிகளுக்குப் புதிய கட்டிடங்கள் கட்டப்படும் என்ற திமுகவின் வாக்குறுதி என்ன ஆனது? அடிப்படைத் தேவைகள் எதையுமே நிறைவேற்றாமல், எதற்காக திமுக அரசு ஒவ்வொரு ஆண்டும், புதிதாக ஒரு லட்சம் கோடி ரூபாயைக் கடன் வாங்கிக் கொண்டிருக்கிறது? இவ்வாறு அண்ணாமலை கூறியுள்ளார். இதனிடையே அரசு பள்ளிகளை தனியாருக்கு தத்துக் கொடுப்பதாக வெளியான தகவல் தவறானது என தமிழ்நாடு தனியார் பள்ளிகள் சங்கம் மறுத்துள்ளது. அரசு பள்ளிகளை மேம்படுத்த சிஎஸ்ஆர் எனப்படும் பெரு நிறுவனம் சமூக பொறுப்பு நிதி மூலம் தனியார் பள்ளிகளின் பங்களிப்பு இருக்கும் என்று மட்டுமே கூறப்பட்டது. எந்த ஒரு இடத்திலும் அரசு பள்ளிகள் தத்து எடுக்கப்படும் என்ற வார்த்தை பயன்படுத்தவில்லை என்று அச்சங்கம் தெளிவுபடுத்தி இருக்கிறது. சொல்லப்படாத ஒரு வார்த்தையை அரசியல் ஆக்க வேண்டாம் என்றும் அரசு பள்ளிகளின் சீரமைப்பு பற்றி சரியாக புரிந்து கொள்ள வேண்டும் என்றும் தமிழ்நாடு தனியார் பள்ளிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது. Note: The content shared here is sourced from publicly available internet platforms, and we do not claim ownership. We are not responsible for any inaccurate or fake information.

Related Post