புதிய சாதனை படைத்த பும்ரா இல்லாமல் இந்திய அணி ஆவேசம் - கடைசி டெஸ்ட் மூன்றாவது நாளே முடிவுக்கு வருமா?

post-img
சிட்னியில் நடந்துவரும் பார்டர் கவாஸ்கர் கோப்பைக்கான டெஸ்ட் தொடரின் 5வது மற்றும் கடைசி ஆட்டத்தில் இந்திய அணி 2-வது இன்னிங்ஸிலும் தடுமாறி வருகிறது. 2வது நாளான இன்று ஒரே நாளில் 15 விக்கெட்டுகள் வீழ்ந்தன. ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸை இன்று தொடர்ந்து மீதமிருந்த 9 விக்கெட்டுகளையும் இழந்தது. இந்திய அணி 2வது இன்னிங்ஸை ஆடத் தொடங்கி 6 விக்கெட்டுகளை பறிகொடுத்துள்ளது. இந்திய அணி 2வது இன்னிங்ஸில் 6 விக்கெட் இழப்புக்கு 141 ரன்கள் சேர்த்துள்ளது. முதல் இன்னிங்ஸில் 4 ரன்கள் முன்னிலையோடு சேர்த்தால் 145 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. 2வது நாளிலேயே 2வது இன்னிங்ஸ் தொடங்கிவிட்டது. இந்திய அணியின் முன்னிலையும் பெரிய அளவுக்கு இல்லாத பட்சத்தில் நாளையே(3-வது நாளிலேயே) ஆட்டம் முடிந்தாலும் வியப்படையத் தேவையில்லை. இரண்டாவது இன்னிங்சிலும் வழக்கம்போல் விராட் கோலி, கே.எல்.ராகுல், சுப்மான் கில் ஆகியோர் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்து வெளியேறினர். ரிஷப் பந்த் அதிரடியாக ஆடி 61 ரன்கள் சேர்த்ததால்தான் இந்திய அணியால் ஓரளவு முன்னிலை பெற முடிந்தது. களத்தில் ஜடேஜா(8), வாஷிங்டன் சுந்தர்(6) ஆட்டமிழக்காமல் உள்ளனர். முன்னதாக ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 181 ரன்களுக்கும், இந்திய அணி 185 ரன்களுக்கும் ஆட்டமிழந்தன. ஆஸ்திரேலிய அணியில் அறிமுக வீரராகக் களமிறங்கிய வெப்ஸ்டர் மட்டும்தான் முதல் இன்னிங்ஸில் அரைசதம் அடித்து 57 ரன்கள் சேர்த்தார். பிக்பாஷ் லீக், கவுன்டி போட்டிகளில் சிறப்பாக பேட் செய்ததால் வெப்ஸ்டர், ஆஸ்திரேலிய அணியில் சேர்க்கப்பட்டார். அறிமுக ஆட்டத்திலேயே அரைசதம் அடித்து அணியின் நம்பிக்கையை வெப்ஸ்டர் பெற்றார். கடந்த 2015 ஆஸ்திரேலிய வீரர் ஆடம் வோக்ஸ் அறிமுக ஆட்டத்திலேயே அரைசதம் அடித்திருந்தார். அதன்பின் 9 ஆண்டுகளுக்குப் பின் அதேபோன்று அறிமுக ஆட்டத்தில் வெப்ஸ்டர் அரைசதம் விளாசியுள்ளார். ஆஸ்திரேலிய அணியில் வெப்ஸ்டர் தவிர வேறு எந்த பேட்டரும் 25 ரன்களைக் கூட கடக்கவில்லை. 5-வது விக்கெட்டுக்கு ஸ்மித்-வெப்ஸ்டர் கூட்டணி 57 ரன்கள் சேர்த்தது. இதுதான் அந்த அணியின் அதிகபட்ச பார்ட்னர்ஷிப்பாகும். ஆஸ்திரேலிய அணி கடைசி 4 விக்கெட்டுகளை 19 ரன்களுக்குள் இழந்தது 181 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இன்று காலை இரண்டாவது நாள் ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்தில் லாபுஷேன் விக்கெட்டை பும்ரா வீழ்த்திய போது புதிய மைல்கல்லை எட்டினார். அதாவது ஆஸ்திரேலியாவுக்கு பயணம் செய்த இந்திய அணியில் ஒரே தொடரில் அதிகபட்ச விக்கெட்டுகள் எடுத்த பந்துவீச்சாளர் என்ற பெயரை எடுத்து, பிஷன் சிங் பேடியின் சாதனையை முறியடித்தார். இதற்கு முன் கடந்த 1977ம் ஆண்டு ஆஸ்திரேலியப் பயணத்தில் சுழற்பந்துவீச்சாளர் பிஷன் சிங் பேடி 31 விக்கெட்டுகள் வீழ்த்தியிருந்ததே அதிகபட்சமாக இருந்தது. அந்த சாதனையை முறியடித்த பும்ரா 32 விக்கெட்டுகளை வீழ்த்தி புதிய சாதனை படைத்தார். இந்திய அணியின் கேப்டன் ஜஸ்பிரித் பும்ராவுக்கு திடீரென முதுகுப்பிடிப்பு ஏற்பட்டதால் பந்துவீச முடியாமல் அவதிப்பட்டார். இதையடுத்து பிற்பகலில் பும்ரா மருத்துவரின் உதவியோடு அரங்கிலிருந்து வெளியேறி மருத்துவனைக்குப் புறப்பட்டார். அங்கு பும்ராவுக்கு ஸ்கேன் பரிசோதனை முடிந்த பின் அவருக்கு காயம் ஏற்பட்டுள்ளதா அல்லது சாதாரண தசைப்பிடிப்பா என்பது தெரியவரும். ஒருவேளை பும்ரா 2வது இன்னிங்ஸில் பந்துவீச முடியாமல் போகும் பட்சத்தில் இந்திய அணிக்கு அது பெருத்த பின்னடைவாக மாறிவிடும். ஆனால், பும்ரா இன்று மருத்துவப் பரிசோதனைக்குச் சென்ற பின்புதான் சிராஜ், பிரசித் கிருஷ்ணா, நிதிஷ் ரெட்டி ஆகியோரின் பந்துவீச்சில் ஆவேசம் தெறித்தது. சிராஜ் 3 விக்கெட்டுகளையும், பிரசித் கிருஷ்ணா, 3 விக்கெட்டுகளையும், நிதிஷ் ரெட்டி2 விக்கெட்டுகளையும் வீழ்த்தி ஆஸ்திரேலியாவுக்கு அதிர்ச்சியளித்தனர். பும்ரா இல்லாமல் பந்துவீசிய 3 பேரும் 132 ரன்களுக்கு 8 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினர். விராட் கோலி 2வது இன்னிங்ஸிலும் 6 ரன்னில் போலந்து பந்துவீச்சில் ஸ்மித்திடம் கேட்ச் பயிற்சி அளித்து ஆட்டமிழந்தார். இந்த பார்டர் கவாஸ்கர் தொடரில் 8-வது முறையாக ஆப் சைடு விலகிச் செல்லும் பந்தை தொட்டு கோலி தனது விக்கெட்டை இழந்துள்ளார். தொடர்ந்து ஒரே மாதிரியாக ஆட்டமிழந்ததை நினைத்து கோபப்பட்ட விராட் கோலி, ஆட்டமிழந்து செல்லும் போது தரையில் காலை உதைத்துக் கொண்டே ஆவேசத்துடன் சென்றார். விராட் கோலியின் "வீக்னஸ்" என்ன என்பதை சரியாகப் புரிந்து கொண்டு ஆஸ்திரேலியப் பந்துவீச்சாளர்கள் பந்துவீசியுள்ளனர். ஆனால், தனது வீக்னஸ் என்ன என்பது தெரிந்தும் கூட, மாற்றுத்திட்டம் இல்லாமல் தொடர்ந்து கோலி ஆப்சைடு விலகிச்செல்லும் பந்திலேயே தொடர்ந்து ஆட்டமிழக்கிறார். ரிஷப் பந்த் களத்துக்கு வந்தது முதலே ஆவேசமாக பேட் செய்தார். போலந்த், ஸ்டார்க், கம்மின்ஸ் பந்துவீச்சில் பவுண்டரி அடித்த ரிஷப் பந்த், 4 சிக்ஸர்களை விளாசினார். அதிலும் போலந்த் வீசிய ஓவரை சந்தித்த முதல் பந்திலேயே ரிஷப் பந்த் சிக்ஸருக்கு பறக்கவிட்டார். வெப்ஸ்டர் பந்துவீச்சில் 3 பவுண்டரிகளை விளாசிய ரிஷப் பந்த் தனது ஹெலிகாப்டர் ஷாட் மூலம் ஸ்டார்க் பந்தில் சிக்ஸர் விளாசி அரைசதத்தை எட்டினார். ரிஷப் பந்த் அதிரடியைப் பார்த்த ஆஸ்திரேலிய கேப்டன் கம்மின்ஸ் பீல்டிங் செட்அப்பை மாற்றி அமைத்து டி20 போன்று எல்லைக்கோட்டில் பீல்டர்களை நிறுத்தினார். டெஸ்ட் போட்டியில் அதிரடியாக டி20 போட்டி போல் ரிஷப் பந்த் விளையாடி 28 பந்துகளில் அரைசதம் அடித்தார். டெஸ்ட் போட்டிகளில் குறைந்த பந்துகளில் வேகமாக அரைசதம் அடித்த இந்திய வீரர் என்ற பெருமையையும் ரிஷப் பந்த் பெற்றார். இதற்கு முன் 2022ம் ஆண்டில் இலங்கைக்கு எதிராக 28 பந்துகளில் ரிஷப் பந்த் அரைசதம் அடித்திருந்த நிலையில் அவரின் சாதனையை அவரே தற்போது சமன் செய்துள்ளார். டெஸ்ட் போட்டிகளில் அதிவேகமாக அரைசதம் அடித்த வகையில் பாகிஸ்தானின் மிஸ்பா உல் ஹக்(21பந்துகள்) இருக்கிறார். கம்மின்ஸ் பந்துவீச்சில் ஆப்சைடு விலகிச் சென்ற பந்தை கட் செய்து ஆட முற்பட்டபோது விக்கெட் கீப்பர் அலெக்ஸ் கெரேயிடம் கேட்ச் கொடுத்து ரிஷப் பந்த் 33 பந்துகளில் 61 ரன்களில் ஆட்டமிழந்தார். இந்திய அணியின் டாப் ஆர்டர் பேட்டர்கள் இந்த தொடரில் தொடர்ந்து சொதப்பி வருகிறார்கள். அது கடைசி டெஸ்டின் இன்னிங்ஸ்களிலும் தொடர்ந்தது. ஜெய்ஸ்வால்(22), ராகுல்(13) , விராட் கோலி(6),சுப்மான் கில்(13) என வரிசையாக சொற்ப ரன்களுக்கு விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். கிரீன் பிட்ச் தளத்தில் புதிய பந்தில் போலந்தின் துல்லியமான வேகப்பந்துவீச்சையும், ஸ்விங் பந்தையும் இந்திய பேட்டர்களால் எதிர்கொண்டு விளையாட முடியவில்லை. 8-வது ஓவரில் ராகுலையும், 10-வது ஓவரில் ஜெய்ஸ்வாலையும், 14வது ஓவரில் விராட் கோலியையும் என போலந்த் சொல்லி வைத்தது போல் பெவிலியன் அனுப்பி வைத்தார். இந்திய அணியின் டாப்ஆர்டர் பேட்டர்கள் எந்தவிதமான சிரமத்தையும், ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர்களுக்கு வழங்கவில்லை. எந்த போராட்டக் குணத்தையும் வெளிப்படுத்தாமல் விக்கெட்டுகளை இழந்தனர். குறிப்பாக விராட் கோலி இரு இன்னிங்ஸ்களிலும் போலந்த் பந்துவீச்சில் ஒரே மாதிரியாக ஸ்லிப்பில் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். பார்டர் கவாஸ்கர் கோப்பை யாருக்கு என்பதை நிர்ணயிக்க இன்னும் ஒரு இன்னிங்ஸ் மட்டுமே இருக்கிறது. இந்திய அணி தற்போது 145 ரன்கள் முன்னிலையுடன் இருக்கிறது, இந்த முன்னிலை போதாது. ஜடேஜா, வாஷிங்டன் பெரிய பார்டர்னர்ஷிப்பை அமைத்து 100 ரன்களுக்கு மேல் சேர்த்தால் ஆட்டம் இந்திய அணிக்கு சாதகமாக வாய்ப்புள்ளது. ஒருவேளை மிகக் குறைந்த ரன்களில் நாளை இந்திய அணி ஆல்அவுட் ஆனால், இரண்டாவது இன்னிங்சை தொடங்கும் ஆஸ்திரேலிய அணி மூன்றாவது நாளான நாளைய தினமே ஆட்டத்தை முடித்துவிடவும் வாய்ப்புள்ளது. ஒருவேளை 250 ரன்களுக்கு மேல் முன்னிலை பெற்றால், பும்ராவோடு சேர்ந்து மற்ற பந்துவீச்சாளர்களும் சிறப்பாக பந்துவீசினால் வெற்றிக்கான வழியைத் தேடலாம். ஒருவேளை 2வது இன்னிங்ஸில் பும்ரா பந்துவீச முடியாத சூழல் ஏற்பட்டால், இந்திய அணி 250 ரன்கள் முன்னிலை பெற்றிருந்தாலும் ஆஸ்திரேலிய அணியை வீழ்த்துவது கடினம். இந்திய அணியின் கவுரமான முன்னிலையும், பும்ராவின் பந்துவீச்சும்தான் பார்டர் கவாஸ்கர் கோப்பை யாருக்கு என்பதை முடிவு செய்யும். ஒருவேளை இந்த ஆட்டத்தில் இந்திய அணி தோற்றால் பார்டர் கவாஸ்கர் கோப்பையை இழப்பது மட்டுமல்ல, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலில் விளையாடுவதையும் மறந்துவிட்டு தாயகம் திரும்ப வேண்டியதுதான். Note: The content shared here is sourced from publicly available internet platforms, and we do not claim ownership. We are not responsible for any inaccurate or fake information.

Related Post