டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு எழுத போறீங்களா? 8ஆம் தேதி முதல் இலவச கோச்சிங் கிளாஸ்

post-img
சேலம்: சேலம் மாவட்டத்தில் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் மூலம் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் குரூப் 4 தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் வரும் 8ஆம் தேதி தொடங்கப்படவுள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் வெளியிட்ட செய்தி குறிப்பில்; தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் (TNPSC) குரூப் IV இல் அடங்கிய பணிக்காலியிடங்களுக்கான தேர்வு அறிவிப்பு 25.04.2025 அன்று வெளியிடப்பபடவுள்ளது. இத்தேர்விற்கான இலவசப் பயிற்சி வகுப்பு சேலம், ஏற்காடு சாலை, கோரிமேடு பகுதியில் அமைந்துள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் 08.01.2025 அன்று காலை 10.00 மணி அளவில் துவங்கப்படவுள்ளது. இப்பயிற்சி வகுப்பு ஏற்கனவே போட்டித் தேர்வுகளில் வெற்றி பெற்ற சிறந்த வல்லுநர்களைக் கொண்டு நடத்தப்பட உள்ளது. மேலும் பாடக்குறிப்புகள் இலவசமாக வழங்கப்படுவதோடு மாதிரித் தேர்வுகளும் நடத்தப்படவுள்ளன. சென்ற ஆண்டு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், சீருடைப் பணியாளர் தேர்வாணையம், மருத்துவப் பணியாளர் தேர்வாணையம் ஆகிய தேர்வு வாரியங்களால் அறிவிக்கப்பட்ட பல்வேறு தேர்வுகளுக்கு இவ்வலுவலகத்தில் நடத்தப்பட்ட இலவசப்பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டு 322 பேர் அரசுப்பணியினை பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது நடத்தப்படவுள்ள குரூப் IV -இல் அடங்கிய பணிகளுக்காக இலவசப் பயிற்சி வகுப்பில் கலந்துகொள்ள தகுதியும் விருப்பமும் உள்ள தேர்வர்கள் இரண்டு பாஸ்போர்ட் அளவு புகைப்படத்துடன் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தை நேரில் அணுகி முன்பதிவு செய்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. மேலும் இப்பயிற்சி வகுப்பு குறித்தான விவரங்களைப் பெற அலுவலக வேலைநாட்களில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை 04272401750 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு அறிந்து கொள்ளலாம். தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் குரூப் IV தேர்வுக்கு தயாராகும் சேலம் மாவட்டத்தைச் சார்ந்த தேர்வர்கள் இப்பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டு பயன்பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. Note: The content shared here is sourced from publicly available internet platforms, and we do not claim ownership. We are not responsible for any inaccurate or fake information.

Related Post