புவி ஈர்ப்பு விசை இல்லாத விண்வெளியில் துளிர் விட்ட தட்டைப்பயறு - இஸ்ரோ சாதித்தது எப்படி?

post-img
'விண்வெளியில் உயிர் துளிர்விட்டுள்ளது.' இஸ்ரோ வெளியிட்ட எக்ஸ் பதிவில் இருந்த இந்த வார்த்தைகள் மிகவும் உணர்ச்சிப்பூர்வமானவை. இந்திய விண்வெளி ஆய்வு மையத்தால் விண்வெளிக்கு கடந்த டிசம்பர் 30ஆம் தேதியன்று எடுத்துச் செல்லப்பட்டு, பூமியின் சுற்றுப்பாதையில் பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட நான்கு நாட்களில் தட்டைப்பயறு விதைகள் துளிர்விடத் தொடங்கியுள்ளன. அதுமட்டுமின்றி, இந்தியாவின் முதல் ரோபோடிக் கையின் செயல்பாடு குறித்த சோதனையும் விண்வெளியில் வெற்றிகரமாக நடத்தப்பட்டுள்ளது. ஈர்ப்பு விசையில்லாத விண்வெளியில் இஸ்ரோ ஒரு தாவரத்தை முளைவிடச் செய்தது எப்படி? இஸ்ரோ பி.எஸ்.எல்.வி சி-60 ராக்கெட்டில் அனுப்பிய போயம்-4 என்ற இயங்குதளத்தில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்தப் பரிசோதனை CROPS என்று அழைக்கப்படுகிறது. எளிதாகச் சொல்ல வேண்டுமெனில், விண்வெளியில் தாவரங்களை வளர்ப்பதற்கான ஒரு முயற்சி. இஸ்ரோவின் ஸ்பேடெக்ஸ் (SPADEX) திட்டத்தில் அனுப்பப்பட்ட விண்கலனில் தட்டைப்பயறு விதைகள் அனுப்பப்பட்டன. அவை கட்டுப்படுத்தப்பட்ட வெப்பநிலையைக் கொண்ட ஒரு சிறிய பெட்டியில் வைக்கப்பட்டிருந்தன. புவி ஈர்ப்புவிசை அல்லாத நுண்ணீர்ப்பு விசை சூழலில் விதைகள் முளைத்து, இலை விடுமா என்பதை ஆராய்வதே இந்தப் பரிசோதனையின் நோக்கம். அதன் முடிவில், நான்கு நாட்களில் விண்வெளியில் இருந்த தட்டைப்பயறு விதைகள் துளிர்விடத் தொடங்கியுள்ளதாக இஸ்ரோ தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளது. கடந்த டிசம்பர் 30ஆம் தேதியன்று, ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து பிஎஸ்எல்வி சி-60 ரக ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது. ஸ்பேடெக்ஸ் (SpaDex) திட்டத்தின் கீழ் செலுத்தப்பட்ட அந்த ராக்கெட் இரண்டு விண்கலங்களை பூமியின் சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தியுள்ளதாக இஸ்ரோ தலைவர் சோம்நாத் அன்றைய தினம் தெரிவித்திருந்தார். அதன் ஒரு பகுதியாக, விண்வெளியில் ஒரு சிறிய ஆய்வுக்கூடமாகச் செயல்படும் POEM-4 என்ற இயங்குதளமும் அனுப்பப்பட்டிருந்தது. நுண்ணீர்ப்புவிசையில் ஆய்வு மேற்கொள்ளும் திறனுடன் இது அனுப்பப்பட்டது. இதன் தொடர்ச்சியாக, பூமியின் சுற்றுவட்டப் பாதையில் ரோபோடிக் கையை பரிசோதனை செய்ததோடு, தட்டைப்பயறு விதைகளையும் இஸ்ரோ வெற்றிகரமாக முளைக்க வைத்துள்ளது. பூமியில் தாவரங்களுக்கு சூரிய ஒளியின் மூலம் கிடைக்கும் நன்மைகள் விண்வெளியில் கிடைக்காது. அத்தகைய தட்பவெப்பநிலையை செயற்கையாக உருவாக்கி, பூமியில் இருந்து மண் உள்பட தேவையானவற்றைக் கொண்டு சென்று இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டதாகக் கூறுகிறார் பிரேக்த்ரூ சயின்ஸ் சொசைட்டியை சேர்ந்த அறிவியலாளர் வெங்கடேசன். இத்தகைய ஆய்வுகளின் மூலம் விண்வெளியில் தாவரங்களை வளர்ப்பது, உணவு உற்பத்தியில் ஈடுபடுவது ஆகியவை எதிர்காலத்தில் சாத்தியமா என்று கேட்டபோது, அதற்கான தேவையோ சாத்தியக்கூறுகளோ இல்லை என்கிறார் அவர். அதாவது, "விண்வெளியில் உணவு உற்பத்தி செய்வது அடிப்படையில் சாத்தியமில்லை. இந்தப் பரிசோதனையின் மூலம் அங்கு உயிரி தொழில்நுட்ப ஆய்வுகளை மேற்கொள்வதற்கான வாய்ப்புகள் இருப்பது உறுதியாகியுள்ளது. ஆகவே, எதிர்காலத்தில் அத்தகைய ஆய்வுகள் நடக்கலாம்," என்று தெரிவித்தார் அவர். ஸ்பேடெக்ஸ் திட்டத்தின்கீழ், பி.எஸ்.எல்.வி சி-60 ராக்கெட், 220 கிலோ எடை கொண்ட இரண்டு சிறிய விண்கலங்களைச் சுமந்து சென்றது. அவை பூமியில் இருந்து 470 கி.மீ உயரத்தில் நிலைநிறுத்தப்பட்டன. அவற்றில் ஒன்றின் பெயர் சேசர் (Chaser- SDX01), மற்றொன்று டார்கெட் (Target- SDX02). இதில் டார்கெட் என்ற விண்கலத்தின் ஒரு பகுதியாகத்தான் போயம்-4 என்ற ஆய்வுக்கூடம் அனுப்பப்பட்டது. அதில் விண்வெளியில் சோதனை மேற்கொள்ளத் தேவையான அனைத்து உபகரணங்களும் பொருத்தப்பட்டிருந்தன. பொதுவாக, வேர் விடுவது முதல் இலைவிட்டு செடியாக வளர்வது வரை தாவரங்களின் வளர்ச்சியில் பூவி ஈர்ப்புவிசை குறிப்பிட்ட அளவுக்குப் பங்களிக்கின்றன. ஆனால், விண்வெளியில் ஈர்ப்புவிசையே கிட்டத்தட்ட இருக்காது. புவி சுற்றுவட்டப் பாதையில் இருக்கும் அத்தகைய நிலை நுண்ணீர்ப்பு விசை என அழைக்கப்படுகிறது. அந்தச் சூழலில் தாவரங்களை வளர்ப்பதற்கு ஏற்ற நிலைமைகளை உருவாக்க வேண்டும். இந்நிலையில், ஈர்ப்பு விசை இல்லாத விண்வெளியில்கூட தாவரங்களை வளர வைப்பது எப்படி என்பதைப் புரிந்துகொள்ள இந்தத் திட்டத்தின் மூலம் இஸ்ரோ முயற்சி மேற்கொண்டது. இந்தப் பரிசோதனை முற்றிலுமாக தானியங்கி ரோபோடிக் கை மூலம் செய்யப்பட்டது. அதாவது இந்தச் செயல்முறையை விண்வெளியில் ஒருவர் இருந்து நிர்வகிக்க வேண்டிய அவசியம் இல்லை. தாவரத்தின் வளர்ச்சிக்குத் தேவையான தண்ணீரைப் பாய்ச்சுவது, உரிய வெப்பநிலையைப் பராமரிப்பது என அனைத்தும் தானியங்கி முறையில் கையாளப்பட்டன. அதற்கான பணிகளை இஸ்ரோ அனுப்பிய தானியங்கி ரோபோடிக் கை மேற்கொள்கிறது. ஒரே இடத்தில் நிலையாக இருந்து, பொருட்களை இங்கும் அங்குமாக நகர்த்துவதும் எடுப்பதும் மட்டுமின்றி, ஒரு கம்பளிப்புழு ஊர்ந்து செல்வதைப் போல நகர்ந்து சென்று செயல்படக் கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டு இருப்பதே இந்த ரோபோடிக் கையின் சிறப்பம்சம். அதோடு, இந்தக் கையில் மொத்தமாக ஏழு மூட்டு அமைப்புகள் உள்ளன. அவற்றைப் பயன்படுத்தி ரோபோடிக் கையால் பல்வேறு திசைகளில் நகர முடியும். அதன் மூலம், பொருட்களை எங்கு வேண்டுமானாலும், எப்போது வேண்டுமானாலும் நகர்த்தவும் இறுகப் பற்றி எடுக்கவும் முடியும். இதுபோகத் தனது சுற்றத்தில் இருப்பவற்றை உணர்ந்து எப்படிச் செயலாற்ற வேண்டும் என்று முடிவெடுக்க, இதில் கேமராக்களும் மேம்பட்ட மென்பொருட்களும் பொருத்தப்பட்டுள்ளன. இதனால், மேலே-கீழே, இடது-வலது, முன்-பின் என்று அதனால் பார்த்து உணர முடியும். விண்வெளியில் தட்டைப்பயறு விதைகளை வளர வைப்பதில் இந்த ரோபோடிக் கை கவனம் செலுத்தியதன் மூலம், மொத்தமாக ஒரே நேரத்தில் இஸ்ரோ இரண்டு பரிசோதனைகளை வெற்றிகரமாகச் செய்துள்ளது. அதில் ஒன்று நுண்ணீர்ப்பு விசை சூழலில் விதையை முளைக்க வைப்பது. இரண்டாவது, இந்த ரோபோடிக் கையின் திறனைப் பரிசோதிப்பது. இஸ்ரோவின் இந்த முயற்சியின் மூலம், எதிர்காலத்தில் விண்ணில் நிறுவத் திட்டமிடப்பட்டுள்ள இந்திய விண்வெளி நிலையத்தில் விண்வெளி வீரர்களால் செய்ய முடியாத கடினமான பணிகளைச் செய்வதில் ரோபோடிக் கை உதவக்கூடும் என்றும் விஞ்ஞானிகள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர். இந்தப் பரிசோதனை, ரோபோடிக் கை விசாலமான பகுதியில் நன்கு நகர்வதை உறுதி செய்துள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. அதோடு இஸ்ரோ கூற்றுப்படி, இந்த ரோபோடிக் கை விண்ணில் செயல்பட்டுக் கொண்டிருக்கும்போதே பூமிக்கு தரவுகளை அனுப்பவும் முடியும். இந்திய விண்வெளி நிலையத் திட்டமான பாரதிய அந்தாரிக்‌ஷ் நிலையத்தில் இதைப் பயன்படுத்துவதற்கான ஒரு சோதனை ஓட்டமாக இந்தப் பரிசோதனை நடத்தப்பட்டது. இந்த ரோபோடிக் கையின் சோதனை ஓட்டம் வெற்றி பெற்றிருப்பது எதிர்காலத்தில் இந்திய விண்வெளி நிலையத்திற்குப் பல வகைகளில் உதவும் என்கிறார் அறிவியலாளர் வெங்கடேசன். அவரது கூற்றுப்படி, மனிதர்களை விண்வெளி நிலையம் அல்லது விண்கலத்திற்கு வெளியே ஏற்படும் கோளாறுகளைச் சரிசெய்ய அனுப்புவது மிகவும் ஆபத்தானது. "தோட்டாக்களைவிட வேகமாக நகரக்கூடிய, கடுகைவிடச் சிறிய, கண்ணுக்கே தெரியாத விண்துகள்கள் விண்வெளியில் இருக்கும். விண்கலத்தை விட்டு வெளியே செல்லும் விண்வெளி வீரர்கள் எவ்வளவு பாதுகாப்புளுடன் சென்றாலும் அந்த துகள்களால் அவர்களுக்கு எப்போதுமே அபாயம் இருக்கும்." அத்தகைய அபாயகரமான சூழலில் பணி செய்ய இந்த ரோபோடிக் கை இருக்கும் போது, மனிதர்களை அப்படி வெளியே அனுப்ப வேண்டிய தேவை ஏற்படாது என்கிறார் அவர். ஏற்கெனவே பல ரோபோடிக் தொழில்நுட்பங்கள் செயல்பாட்டில் இருந்தாலும், பல வகைகளிலும் மேம்பட்ட இந்தத் தொழில்நுட்பம் இந்தியாவின் விண்வெளி ஆய்வுப் பணிகளில் பெரிதும் பயனுள்ளதாக இருக்கும் என்றும் வெங்கடேசன் தெரிவித்தார். Note: The content shared here is sourced from publicly available internet platforms, and we do not claim ownership. We are not responsible for any inaccurate or fake information.

Related Post