ஆருத்ரா தரிசனம்.. சிதம்பரம் நடராஜர் கோவிலில் இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.. பக்தர்கள் பரவசம்!

post-img
கடலூர்: சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆருத்ரா தரிசன உற்சவம் இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கி உள்ளது. இந்த நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். வரும் ஜனவரி 13 ஆம் தேதி ஆருத்ரா தரிசனம் நடைபெற உள்ளது. சிவபெருமானுக்கு நடத்தப்படும் மிக உயர்வான ஆறு வகை அபிஷேகங்களில் ஒன்று ஆருத்ரா தரிசனம். ஆருத்ரா என்பதற்கு தமிழில் திருவாதிரை என்று பொருள். மார்கழி மாததில் வரும் திருவாதிரை நட்சத்திரமும் பௌர்ணமியும் இணைந்து வரும் நாளில் ஆருத்ரா தரிசனம் சிவ ஆலயங்களில் கொண்டாடப்படுகிறது. சிதம்பரத்தில் உள்ள உலகப் புகழ்பெற்ற நடராஜர் கோயிலில் வருடந்தோறும் மார்கழி மாதம் ஆருத்ரா தரிசனம் சிறப்பாக நடைபெறுவது வழக்கம். ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் உள்ளிட்ட சிவாலயங்களிலும் ஆருத்ரா தரிசனம் சிறப்பாக நடைபெறுகிறது. இந்த ஆண்டு ஜனவரி 4 ஆம் தேதியான இன்று காலை சிவாலயங்களில் கொடியேற்றத்துடன் ஆருத்ரா தரிசன உற்சவம் தொடங்கி உள்ளது. இன்று காலை 6.15 முதல் 7 மணிக்குள் சிவ ஆலயங்களில் கொடியேற்றத்துடன் ஆருத்ரா தரிசன விழா தொடங்கியது. இனி ஒவ்வொரு நாளும் சுவாமி வீதியுலா நடைபெறும். சிதம்பரம் நடராஜர் கோவிலில் சிவகாமசுந்தரி சமேத நடராஜமூர்த்தியின் மார்கழி ஆருத்ரா தரிசன உற்சவம் இன்று காலை 6.50 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்கியது. சிவகாமசுந்தரி சமேத நடராஜமூர்த்தி வீற்றுள்ள சித்சபை எதிரே உள்ள கொடிமரத்தில், பஞ்சமூர்த்திகள் முன்னிலையில், சுவாமியின் பிரதிநிதியான ஹஸ்தராஜரை முன்னிறுத்தி ஆவாஹணம் செய்து உற்சவ ஆச்சாரியார் ச.க. சிவராஜ தீட்சிதர் ரிஷபக் கொடியை ஏற்றி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர். தொடர்ந்து 10 நாட்கள் பஞ்சமூர்த்தி பல்வேறு வாகனங்களில் வீதி உலா உற்சவம் நடைபெறுகிறது. விழாவின் முக்கிய நிகழ்வான ஜனவரி 12 ஆம் தேதி தேரோட்டமும், 13 ஆம் தேதி அதிகாலை மகாபிஷேகம், பிற்பகல் 2 மணிக்கு ஆருத்ரா தரிசனம் நடைபெற உள்ளது. அன்றைய தினம் பல்வேறு மாவட்டங்களில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் சிதம்பரம் நடராஜர் கோவிலுக்கு வருகை தருவார்கள். சிதம்பரம் ஆருத்ரா தரிசனத்தையொட்டி வரும் ஜனவரி 13ஆம் தேதி கடலூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் சி.பி.ஆதித்யா உத்தரவிட்டுள்ளார். அந்த விடுமுறையை ஈடுசெய்யும் வகையில் பிப்ரவரி 1 ஆம் தேதி வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. Note: The content shared here is sourced from publicly available internet platforms, and we do not claim ownership. We are not responsible for any inaccurate or fake information.

Related Post