“முதல்வர் எங்க கடவுள்”.. வீடு வழங்கிய ஸ்டாலினுக்கு கண்ணீர் மல்க நன்றி சொன்ன சிறுமி டானியாவின் தாய்!

post-img
சென்னை: முகச் சிதைவு நோயால் பாதிக்கப்பட்டு குணமடைந்த சிறுமி டானியா குடும்பத்திற்கு இன்று வீடு வழங்கி உள்ளார் தமிழக முதல்வர் ஸ்டாலின். தங்களுக்கு தொடர்ந்து உதவி செய்து வரும் முதல்வருக்கு டானியாவின் பெற்றோர் கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தனர். திருவள்ளூர் மாவட்டம் ஆவடி அருகே வீராபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ஸ்டீபன்ராஜ், இவரது மனைவி சவுபாக்யா. இவர்களின் மகள் டானியா அரிய வகை முகச்சிதைவு நோயால் பாதிக்கப்பட்டார். முகச்சீரமைப்பு அறுவை சிசிச்சைக்கு பண வசதியின்றி டானியாவின் பெற்றோர், குடும்பத்தினர் தவித்தனர். தனக்கு உதவிக்கரம் நீட்டுமாறு தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு சிறுமி டானியா கோரிக்கை விடுத்திருந்த நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் சிறுமிக்கு உடனடியாக உரிய சிகிச்சை அளிக்க உத்தரவிட்டார். சிறுமி டானியாவின் மருத்துவச் செலவு முழுவதையும் ஏற்பதாகவும் தெரிவித்தார். பூந்தமல்லி அருகே தண்டலம் தனியார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கடந்த 2022 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 23 ஆம் தேதி சிறுமி டானியாவுக்கு, 8 மணி நேர தொடர் அறுவை சிகிச்சை அளிக்கப்பட்டு முக சீரமைப்பு செய்யப்பட்டது. அதைத்தொடர்ந்து, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மருத்துவமனையில் சிறுமி டானியாவை சந்தித்து நலம் விசாரித்தார். பிறகு, செப்டம்பர் மாதத்தில் சிறுமி டானியா வீடு திரும்பினார். முகச் சீரமைப்பு அறுவை சிகிச்சை செய்த பக்கமுள்ள கண் மூடவும், பேசவும், சாப்பிட வாய் திறக்கவும் சிரமப்பட்டு வந்தார் டானியா. அதற்கு தீர்வு காண கடந்த 2023 ஆம் ஆண்டு ஜனவரி 5-ம் தேதி தண்டலம் தனியார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிறுமி டானியாவுக்கு, 2 ஆம் கட்ட அறுவை சிகிச்சை 11 மருத்துவர்கள் அடங்கிய குழுவினரால் சுமார் 2 மணி நேரம் நடைபெற்றது. அதன் பிறகு சில நாட்களில் சிறுமி டானியா வீடு திரும்பினார். அதைத்தொடர்ந்து, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், சிறுமி டானியா வீட்டுக்கே நேரில் சென்று அவரிடம் நலம் விசாரித்தார். சிறுமி டானியா 12 ஆம் வகுப்பு வரை கல்வி கற்பதற்கான செலவை தான் ஏற்றுக்கொள்வதாக பள்ளி நிர்வாகத்திடம் உறுதியளித்தார் திமுக எம்எல்ஏ மாதவரம் சுதர்சனம். மேலும், சிறுமி டானியா கேட்டுக் கொண்டதன் பேரில் அவர்களின் பெற்றோருக்கு இலவச வீட்டு மனையினை வழங்கி அரசின் மூலம் வீடு கட்டித்தரவும் முதல்வர் ஸ்டாலின் ஆணையிட்டார். அதனை தொடர்ந்து திருவள்ளூர் ஊராட்சி ஒன்றியம் பாக்கம் கிராமத்தில் வீட்டு மனை அரசின் சார்பில் வழங்கப்பட்டு, தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் மூலம் அனைவருக்கும் வீட்டு வசதி திட்டத்தின் கீழ் 2.10 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 400 சதுரடிக்கு வீடு கட்டி முடிக்கப்பட்டது. இந்நிலையில், இன்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினால் அந்த வீடு திறக்கப்பட்டு சிறுமி டானியாவின் குடும்பத்தினருக்கு சாவி வழங்கப்பட்டது. டானியாவின் குடும்பத்தினரை தலைமைச் செயலகத்திற்கு இன்று நேரில் அழைத்து சாவியை வழங்கினார் முதல்வர் ஸ்டாலின். அப்போது டானியாவின் தாயார், கண்ணீர் மல்க முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்தார். செய்தியாளர்களிடம் பேசிய சிறுமி டானியா, "இரண்டு வருடத்திற்கு முன் என்னை பலரும் கேலி செய்தனர். தற்போது அறுவை சிகிச்சைக்கு பின் என்னுடன் அனைவரும் இயல்பாக பழகுகின்றனர். தற்போது எனக்கும் சொந்தமாக வீடு உள்ளது என நண்பர்களுடன் மகிழ்ச்சியாக தெரிவிப்பேன். எதிர்காலத்தில் எனக்கு மருத்துவராக ஆக வேண்டும் ஆசை உள்ளது. அனைவருக்கும் இலவசமாக சிகிச்சை அளிப்பேன். முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மிகவும் நன்றி" என நெகிழ்ச்சியோடு தெரிவித்துள்ளார். சிறுமி டானியாவின் தாயார் செளபாக்யா பேசுகையில், "முன்பெல்லாம் எனது குழந்தையின் முகத்தை மறைத்துத்தான் பல இடங்களுக்கு அழைத்துச் சென்றேன். எனது மகளுடன் சக நண்பர்களே பழகாமல் இருந்தனர். அறுவை சிகிச்சைக்கு பின் இந்த நிலை முழுவதுமாக மாறியுள்ளது. தற்போது எனது மகள் எவ்வித சிக்கலும் இன்று பள்ளிக்கு சென்று வருகிறாள். அவளுடன் அனைவரும் இயல்பாக பழகுகின்றனர். மற்ற மாணவர்களை போல் எனது மகளும் அனைத்து கலை நிகழ்ச்சியிலும் பங்கேற்கிறாள். எங்களுக்கும் தற்போது வீடு கிடைத்துள்ளது. முதலமைச்சரின் உதவியால் எங்கள் குடும்பமே முன்னேறியுள்ளது. முதலமைச்சர் எங்களுக்கு கடவுள் போன்றவர்" என கண்ணீர் மல்க நன்றி தெரிவித்துள்ளார். Note: The content shared here is sourced from publicly available internet platforms, and we do not claim ownership. We are not responsible for any inaccurate or fake information.

Related Post