கோலி, ரோஹித் இருவரும் ஓய்வை அறிவிக்கும் நேரம் வந்துவிட்டதா?

post-img
பார்டர்-கவாஸ்கர் தொடரில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடந்து முடிந்த கடைசி மூன்று டெஸ்ட் போட்டிகளில் இந்தியாவை வழிநடத்திய ரோஹித் சர்மா, ஐந்தாவது டெஸ்டில் இருந்து வெளியேறியதற்கான காரணத்தை தெரிவித்துள்ளார். ஐந்தாவது டெஸ்டில் மதிய உணவு இடைவேளையின்போது இந்த போட்டியை ஒளிபரப்பும் நிறுவனத்துடன் பேசிய ரோஹித், தனது ஓய்வு குறித்து பரவி வரும் கருத்துக்களை நிராகரித்தார். மேலும் தான் ஓய்வு பெறவில்லை என்றும் ரோஹித் கூறினார். ஐந்தாவது டெஸ்டில் பங்கேற்காதது தொடர்பான கேள்விகளுக்கு பதிலளித்த அவர், தனக்கு ஓய்வு அளிக்கப்படவில்லை அல்லது தான் நீக்கப்படவில்லை என்றும், தேர்வாளர்கள் மற்றும் பயிற்சியாளரிடம் பேசி, தானாகவே போட்டியில் இருந்து விலக முடிவு செய்ததாகவும் கூறினார். பார்டர்-கவாஸ்கர் கோப்பையின் ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி சிட்னியில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையே நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் இருந்து ரோஹித் சர்மா வெளியேறினார். அவருக்குப் பதிலாக இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா அணியை வழிநடத்துகிறார். "நான் ஓய்வு பெறவில்லை. மாறாக, இந்த டெஸ்டில் இருந்து விலகி இருக்க முடிவு செய்துள்ளேன். இந்த முடிவு கடினமாக இருந்தது, ஆனால் இது ஒரு புத்திசாலித்தனமான முடிவு" என்று ரோஹித் ஷர்மா கூறினார். ஓய்வு தொடர்பாக கேட்கப்பட்ட கேள்விகளுக்கு, "நான் சிட்னியை அடைந்தவுடன் போட்டியில் இருந்து விலகி இருக்க முடிவு செய்தேன். நாங்கள் என்ன செய்யப் போகிறோம் என்பதை மற்றவர்கள் தீர்மானிக்க முடியாது" என்று பதிலளித்தார் ரோஹித் ஷர்மா. சிட்னியில் நடந்து வரும் பார்டர் கவாஸ்கர் கோப்பைத் தொடரின் கடைசி டெஸ்ட் முடிந்தபின் கேப்டன் ரோஹித் சர்மா டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு அறிவிப்பார் என்று ஆங்கில ஊடகங்கள் தெரிவித்தன. இப்போது அதனை ரோஹித் சர்மா மறுத்துள்ளார். விராட் கோலி டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவாரா அல்லது தொடர்ந்து விளையாடுவாரா என்பது இதுவரை தெளிவில்லாமலே தொடர்கிறது. மீண்டும் டெஸ்ட் அணிக்கு மட்டும் கோலி கேப்டனாக விரும்புகிறார் என்றும், 2027 வரை டெஸ்ட் கிரிக்கெட்டில் கோலி விளையாட விரும்புகிறார் என்றும் ஆங்கில ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. ஆனால், இதற்கு கோலியிடம் இருந்தோ, பிசிசிஐ தரப்பிலோ இதுவரை தெளிவான விளக்கம் இல்லை. இந்தநிலையில், உண்மையில் ரோஹித் சர்மா ஓய்வு பெறுவது அவசியமா பார்க்கலாம். 2013-ஆம் ஆண்டு மேற்கிந்தியத்தீவுகள் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் அறிமுகமாகிய ரோஹித் சர்மா கடந்த 11 ஆண்டுகளில் 67 டெஸ்ட் போட்டிகளில் 117 இன்னிங்களில் ஆடி, 4,301 ரன்கள் சேர்த்துள்ளார். 12 சதங்களையும், 18 அரைசதங்களையும் அடித்த ரோஹித் சர்மா 40.57 ரன்கள் சராசரி வைத்துள்ளார். தொடக்கத்தில், இந்திய அணியின் நடுவரிசை வீரராகவும், கீழ்வரிசை பேட்ஸ்மேனாக அறிமுகமாகிய ரோஹித் சர்மா மெல்ல, மெல்ல டாப் ஆர்டர் பேட்ஸ்மேனாக விளையாடத் தொடங்கினார். சச்சின், சேவாக் ஆகியோரின் ஓய்வுக்குப்பின் அதிரடியான தொடக்கத்துக்கு பேட்ஸ்மேன்கள் தேவை என்றபோது ரோஹித் சர்மாவின் எழுச்சி வந்தது. ஒருநாள், டி20 போட்டிகளில் அறிமுகமாகி விளையாடி, 4 ஆண்டுகளுக்குப்பின்புதான் ரோஹித் சர்மா டெஸ்ட் போட்டிகளில் விளையாடத் தொடங்கினார். டெஸ்ட் போட்டிகளில் கேப்டனாக ரோஹித் சர்மா பொறுப்பேற்று சில போட்டிகளை மட்டுமே அணியை வழிநடத்தியுள்ளார். டெஸ்ட் போட்டிகளில் ரோஹித் சர்மா கேப்டன்ஷிப்பில் இந்திய அணி 24 போட்டிகளை விளையாடியுள்ளது. அதில் 12 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது, 9 போட்டிகளில் தோல்வி அடைந்துள்ளது மற்றும் 3 ஆட்டங்களை டிரா செய்துள்ளது. வெளிநாடுகளில் ரோஹித் சர்மா தலைமையில் இந்திய அணி 8 போட்டிகளில் 2 ஆட்டங்களில் வென்று, 4 ஆட்டங்களில் தோல்வி அடைந்துள்ளது, 2 போட்டிகளை டிரா செய்துள்ளது. இதில் ரோஹித் சர்மா தலைமையில்தான் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டி வரை இந்திய அணி சென்று தோற்றதும் குறிப்பிடத்தக்கது. ரோஹித் சர்மாவைப் பொருத்தவரை அவரின் டெஸ்ட் சராசரி ரன்கள் என்பது 50 என வலுவாக வைத்துள்ளார். மேற்கிந்தியத்தீவுகள் அணிக்கு எதிராக 90 ரன்கள் சராசரியும், இலங்கைக்கு எதிராக 50 சராசரியும் வைத்துள்ள ரோஹித் சர்மா ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக 28 ரன்களும், தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக 38, நியூசிலாந்துக்கு எதிராக 36 ரன்களும் சராசரியாக வைத்துள்ளார். இங்கிலாந்து அணிக்கு எதிராக 47 சராசரி வைத்துள்ளார். ரோஹித் சர்மாவின் பேட்டிங்கில் ஃபார்ம் இழந்து தவிப்பது என்பது கடந்த ஆண்டு டி20 உலகக் கோப்பைத் தொடருக்குப்பின் இருந்துதான் மோசமாகியுள்ளது. கடந்த 15 டெஸ்ட் இன்னிங்ஸில் ஒரு அரைசதம், 10 ஒற்றைய இலக்க ரன்களை மட்டுமே ரோஹித் சர்மா சேர்த்து மோசமாக விளையாடி வருகிறார். 2013 முதல் 2024 வரை ரோஹித் சர்மா டெஸ்ட் போட்டிகளில் ஆண்டுதோறும் விளையாடி சேர்த்த ரன்களை ஆய்வு செய்யலாம். அதில் 2013 (4 டெஸ்ட், 333 ரன்கள்), 2014(5 டெஸ்ட் 237 ரன்கள்), 2015(7 டெஸ்ட், 326 ரன்கள்), 2016(5 டெஸ்ட், 288 ரன்கள்), 2017(2 டெஸ்ட், 287 ரன்கள்), 2018(4 டெஸ்ட், 184ரன்கள்), 2019(5 டெஸ்ட், 556 ரன்கள்), 2021(11 டெஸ்ட், 906 ரன்கள்), 2022(2 டெஸ்ட், 30 ரன்கள்), 2023(8 டெஸ்ட், 545 ரன்கள்), 2024(14 டெஸ்ட், 619 ரன்கள்) என சேர்த்துள்ளார். ரோஹித் சர்மாவின் டெஸ்ட் சராசரி குறைந்ததும், ஃபார்ம் குறைந்ததும் கடந்த ஆண்டிலிருந்துதான். 2024-ஆம் ஆண்டில் ரோஹித் சர்மாவின் டெஸ்ட் சராசரி 24 ரன்களாகவே இருக்கிறது. அதிலும் தற்போது நடந்துவரும் பார்டர்-கவாஸ்கர் கோப்பைக்கான டெஸ்ட் தொடரில் ரோஹித் சர்மா கடந்த 3 டெஸ்ட்களில் 30 ரன்கள் மட்டுமே சேர்த்துள்ளார். இதனால் ஐசிசி டெஸ்ட் தரவரிசைப் பட்டியலி்ல் 24-வது இடத்திலிருந்த ரோஹித் சர்மா 40-வது இடத்துக்கு தள்ளப்பட்டார். கிரிக்கெட் வீரர்களின் வாழ்க்கையில் ஃபார்மின்றி தவிப்பதும், பின்னர் இழந்த ஃபார்மை சில போட்டிகளில் மீட்டு 2வது இன்னிங்ஸைத் தொடர்வதும் வழக்கமானதுதான். சச்சின், கங்குலி, டிராவிட் போன்ற ஜாம்பவான்கள் வாழ்க்கையிலும் இது நடந்துள்ளது. அதுபோன்ற நெருக்கடியான காலத்தைத்தான் ரோஹித் சர்மா தற்போது எதிர்கொண்டு வருகிறார். ஆனால், கடந்த 3 டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணிக்கு பேட்டிங்கில் பெரிய பங்களிப்பை அவர் அளிக்க முடியவில்லை. அணியின் கேப்டனாக இருக்கும் ரோஹித் சர்மா, சிட்னி டெஸ்டில் பங்கேற்காமல் ஒதுங்கியது பெரிய கேள்வியை எழுப்பியுள்ளது. குறிப்பாக சஞ்சய் மஞ்சரேக்கர், சுனில் கவாஸ்கர், மார்க் வாஹ் ஆகியோர் சிட்னி டெஸ்டில் இந்திய அணி தோற்றால் ரோஹித் சர்மா டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவது சிறப்பான முடிவாக இருக்கும், இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கு இளம் வீரர்களை விளையாட அனுப்புங்கள் என்று வலியுறுத்தியுள்ளனர். இதுபோன்ற கருத்துக்கள் ரோஹித் சர்மாவுக்கான நெருக்கடியை மேலும் அதிகப்படுத்திதான், சிட்னி டெஸ்டிலிருந்து அவர் ஆட்டத்தில் இல்லாமல் விலகியிருக்கலாம். இதேபோலத்தான் விராட் கோலியின் நிலையும் இருக்கிறது. விராட் கோலி ஆஸ்திரேலியத் தொடரில் ஒரு சதம் அடித்தபின் மற்ற 4 போட்டிகளிலும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்துள்ளார். கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் விராட் கோலி 38 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 2005 ரன்கள் சேர்த்து, 31 ரன்கள் சராசரி வைத்துள்ளார். இதில் 3 சதங்கள் 9 அரைசதங்கள் அடங்கும். இந்திய அணி கடைசியாக தோல்வி அடைந்த 5 டெஸ்ட் போட்டிகளில் கோலி 152 ரன்கள் மட்டுமே சேர்த்து 15.20 சராசரி வைத்துள்ளார். 2024ம் ஆண்டில் 10 டெஸ்ட் போட்டிகளில் ஆடிய விராட் கோலி 417 ரன்கள் சேர்த்து, 24 ரன்கள் மட்டுமே சராசரி வைத்துள்ளார். ஐசிசி டெஸ்ட் வரிசையிலும் 24வது இடத்துக்கு கோலி சரிந்து தனது வாழ்க்கையில் மோசமான நிலையை எட்டியுள்ளார். கிரிக்கெட் உலகில் இளம் வயதில் ஏராளமான சாதனைகளை செய்துள்ள கோலி, சமீபகாலமாக டெக்னிக்கல் தவறால் தடுமாறி வருகிறார். குறிப்பாக அவுட்சைட் ஆஃப் சைட் செல்லும் பந்துகளால் கோலி ஆட்டமிழப்பது தொடர்கதையாகி வருகிறது. இந்திய அணியின் பயிற்சியாளாரக ரவி சாஸ்திரி இருந்தபோது அதேபோன்ற சிக்கலால் கோலி தவித்த நிலையில், அது தீவிரமான பயிற்சியால் சரி செய்யப்பட்டு, அவுட் சைட் ஆஃப் சைடு செல்லும் பந்துகளை கோலி லீவ் செய்து பழகினார். ஆனால், சிறிது கால இடைவெளியில் மீண்டும் அதேபோன சிக்கலுக்கு கோலி ஆளாகியுள்ளார். பார்டர் கவாஸ்கர் கோப்பைத் தொடரில் விராட் கோலி கடந்த 4 டெஸ்ட் போட்டிகளிலும் பெரும்பாலும் அவுட்சைட் ஆஃப் சைடு செல்லும் பந்துகளை தட்டிவிட்டுதான் தனது விக்கெட்டை பறிகொடுத்துள்ளார். அது மட்டுமல்ல நியூசிலாந்து, ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடர்களில் லெக் ஸ்பின், இடதுகை சுழற்பந்துவீச்சில் கோலி பலவீனமாக இருக்கிறார் என்பதையும் வெளிக்காட்டியது. கோலி களமிறங்கினாலே இடதுகை சுழற்பந்துவீச்சாளரை பயன்படுத்துவதும், லெக் ஸ்பின்னரை களமிறக்கும் உத்தியையும் எதிரணிகள் கையிலெடுக்கும் நிலை வந்துவிட்டது. ஃபார்மின்றி தவித்து வரும் கோலி, இதுபோன்ற பேட்டிங் தவறுகளாலும் தனது கிரிக்கெட் வாழ்க்கையில் மோசமான நிலையையும், அணியில் தனக்குரிய இடத்தையும் மெல்ல இழந்து வருகிறார். இதனால் சிட்னி டெஸ்ட் முடிந்தபின் கோலி டெஸ்ட் ஓய்வு குறித்து அறிவிக்கலாம் என ஆங்கில ஊடகங்களான இந்துஸ்தான் டைம்ஸ், தி இந்தியன் எக்ஸ்பிரஸ், டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளேடுகள் தெரிவிக்கின்றன. அதேசமயம், டெஸ்ட் அணிக்கு மீண்டும் கேப்டனாக கோலி முயற்சிக்கிறார், 2027 வரை டெஸ்ட் போட்டியில் விளையாட கோலி விருப்பமாக இருக்கிறார் என்றும் மற்ற ஆங்கில ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இந்திய அணியின் மூத்த வீரர்களில், எதிரணிக்கு எந்த நேரத்திலும் மிரட்டல் விடுக்கும் பேட்ஸ்மேன்கள் என்றால் அது ரோஹித் சர்மா, விராட் கோலிதான். இவர்கள் அணியில் இருந்தாலே எதிரணிக்கு ஒருவிதமான பதற்றம் இருக்கும். கிரிக்கெட் வீரர்கள் வாழ்க்கையில் ஃபார்மின்றி தவிப்பதும், மீண்டும் ஃபார்முக்கு வருவதும் இயல்பானது. தங்களுக்கான தருணம்(மொமென்டம்) கிடைக்காத வரை இது போன்ற வீரர்கள் சரிவில் இருப்பார்கள், அது கிடைத்தவுடன் மீண்டும் சிம்மாசனம் ஏறச் செல்வதும் வழக்கமாக இருந்துள்ளது. "ஹிட் மேன்", "கிங் கோலி" என்று ரோஹித் சர்மாவும், கோலியும் ரசிகர்களால் வர்ணிக்கப்பட்ட நிலையில் அதே ரசிகர்களால் இன்று தூற்றப்பட்டு, ஓய்வு பெறுங்கள் என்று சமூக வலைத்தளத்தில் வலியுறுத்தப்படுவது காலத்தின் கோலம். இந்திய அணிக்கு கோலி, ரோஹித் சர்மா அவசியம் என்று எம்ஆர்எப் அணியின் துணைப் பயிற்சியாளரும், டிஎன்பிஎல் திருச்சி கிராண்ட் சோழா அணியின் பயிற்சியாளருமான எட்வர்ட் கென்னடி பிபிசி தமிழிடம் தெரிவித்தார். அவர் கூறுகையில் "ரோஹித் சர்மா, கோலி இல்லாத இந்திய அணி நிச்சயம் பெரிய தோல்விகளை எதிர்காலத்தில் சந்திக்கும். அதிலும் இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் மோசமான தோல்விகளைச் சந்திக்கும். கோலி, ரோஹித் சர்மாவுக்கு ஃபார்ம் இல்லை என்பது தெரிந்துவிட்டது. அதை சரி செய்வதற்கான வாய்ப்புகளை வழங்க வேண்டுமே தவிர அழுத்தம் கொடுத்து ஓய்வு பெறவைப்பது சரியல்ல. இருவருமே 36 வயதை எட்டிவிட்ட நிலையில், இவர்களின் இடத்தை நிரப்ப சரியான வீரர்களை அடையாளம் கண்டபின் ஓய்வு பெறலாம்" எனத் தெரிவித்தார். விராட் கோலி பேட்டிங்கில் தனது தவறை செய்யும் பணியில்தான் ஈடுபட்டுள்ளார், தவறு சரியாகும்வரை ஆட்டமிழப்பது தொடரும் என்றும் கென்னடி தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில் " அவுட்சைட் ஆஃப் சைடில் செல்லும் பந்துகளில் கோலி ஆட்டமிழப்பது தொடர்ந்துவருவது உண்மைதான். பந்துவீச்சாளரின் திட்டத்தை உடைக்க கோலி ஷாட்களுக்கு முயற்சிக்கும்போது ஆட்டமிழக்கிறார். இதற்கு நீண்டகாலப் பயிற்சியும், எந்திரத்தில் பந்துவீசி பயிற்சி எடுப்பதைவிட, ஒரு பந்துவீச்சாளரைபந்துவீசச் செய்து பயிற்சி எடுத்தால் தவறு விரைவில் களையப்படும். ரோஹித் சர்மா, கோலி இருவரும் இருவரும் இல்லாத அணி என்பது இந்தியா ஏ அணிதான். அதை எளிதாக எந்த அணியும் அணுகிவிடுவார்கள். சச்சின்,டிராவிட், கங்குலிக்கு மாற்றாக சரியான வீரர்களாக கோலி, ரோஹித் வந்தபின் அணி சரியான திசையில் பயணித்தது. அதுவரை சறுக்கல்கள் இருந்தது, அதுபோலத்தான் இப்போதுள்ள சூழலும் இருக்கிறது" எனத் தெரிவித்தார். இந்திய அணியின் தேவை குறித்து கென்னடி கூறுகையில் " ரோஹித் சர்மா, கோலி இருவரும் இப்போதுள்ள சூழலில் ஓய்வு பெறுவது சரியல்ல. ஒரு சில தொடர்களை மட்டும் வைத்து ஒரு வீரரை எடைபோட முடியாது. ரோஹித் சர்மாவுக்கு இருக்கும் சிக்கல் என்பது உடல் எடை. அவரின் பிட்னஸ் அவருக்கு பெரிய சிக்கலாக மாறியுள்ளது. உடல் எடை கூடிவிட்டதால், அவரால் நீண்டநேரம் டிபென்ஸ் ஆடமுடியவில்லை. டெஸ்ட் போட்டிகளில் டிபென்ஸ் ப்ளே என்பது அவசியமானது. அதிகமான டி20 போட்டிகளில் விளையாடி இந்த இரு வீரர்களும் மட்டுமல்லாது இந்திய அணியே அந்த கலையை மறந்துவிட்டார்கள். முதலில் டிபென்ட்ஸ் விளையாட போதுமான பயிற்சியும், நேரமும் ஒதுக்கினாலே டெஸ்ட் போட்டியில் இழந்த ஃபார்மை இருவரும் மீட்டுவிடுவார்கள். புதிய பந்தில் நிலைத்து ஆடுவது அவசியமானது, பந்து தேயும் வரை விக்கெட்டை இழக்காமல் பேட் செய்தாலே ஃபார்முக்கு வந்துவிடலாம். ஆனால், புதிய பந்திலேயே இந்திய வீரர்கள் விக்கெட்டை இழந்து விடுகிறார்கள். இப்போதுள்ள நிலையில் இந்திய பேட்ஸ்மேன்களுக்கு டிபென்ஸ் ப்ளே குறித்த பயிற்சிதான் அணி இழந்த ஃபார்மை மீட்க வழியாகும்." எனத் தெரிவித்தார். Note: The content shared here is sourced from publicly available internet platforms, and we do not claim ownership. We are not responsible for any inaccurate or fake information.

Related Post