செல்லப்பிராணி வளர்ப்பவர்களுக்கு குட்நியூஸ்.. அடுக்குமாடி விதிகள் ரத்து.. சென்னை கோர்ட் தீர்ப்பு

post-img
சென்னை: செல்லப்பிராணிகள், பொதுவெளியில் மலம் அல்லது சிறுநீர் கழித்தால் அபராதம், செல்லப்பிராணிகளை அழைத்து செல்ல, 'லிப்ட்'டை பயன்படுத்தக்கூடாது, 3 முறைக்கு மேல் விதிகளை பின்பற்றாத குடியிருப்பு வாசியின் பெயர் அறிவிப்பு பலகையில் ஒட்டப்படும் என்று அடுக்குமாடி குடியிருப்போர் சங்கம் விதிகள் கொண்டு வந்தது. இந்த விதிகளை ரத்து செய்து சென்னை கூடுதல் சிட்டி சிவில் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. சென்னை திருவான்மியூரில் 'ஆர்ட்ரியம்' என்ற அடுக்குமாடி குடியிருப்பு அமைந்துள்ளது. இந்த அடுக்குமாடியில் 78 வயதாகும் மனோரமா ஹிதேஷி என்பவர் வசித்து வருகிறார். இவர் நாய் வளர்த்து வருகிறார். இந்நிலையில் அடுக்குமாடி குடியிருப்போர் சங்கம் செல்லப்பிராணிகள் வளர்க்க கடும் கட்டுப்பாடுகள் விதித்து விதிகளை கொண்டு வந்து, அமல்படுத்தியது. அதன்படி, அடுக்குமாடி குடியிருப்பில் திறந்த வெளியில் செல்லப்பிராணிகள் மலம் கழித்தால், அதை 10 நிமிடங்களில் அவர்கள் சுத்தம் செய்யவேண்டும். தவறினால், முதல் முறை ஆயிரம் ரூபாய் அபராதமும், 2-வது முறை ரூ.2 ஆயிரமும், 3-வது முறை ரூ.3 ஆயிரமும் அபராதம் விதிக்கப்படும் என்று அடுக்குமாடி குடியிருப்போர் சங்கம் விதிகளை உருவாக்கியது. இதேபோல் அடுக்குமாடிகளில் பொது இடங்களில் செல்லப்பிராணிகள், பொதுவெளியில் சிறுநீர் கழித்தால், ரூ.250 முதல் ரூ.750 வரை அபராதம் விதிக்கப்படும். செல்லப்பிராணிகளை அழைத்து செல்ல, 'லிப்ட்'டை பயன்படுத்தக்கூடாது. 3 முறைக்கு மேல் விதிகளை பின்பற்றாத குடியிருப்பு வாசியின் பெயர் அறிவிப்பு பலகையில் ஒட்டப்படும்'' என்றும் அடுக்குமாடி குடியிருப்போர் சங்கம் விதிகளை அறிவித்தது. இந்நிலையில் ஆர்ட்ரியம் அடுக்குமாடி குடியிருப்பில் செல்லப்பிராணி வளர்த்து வரும் மனோரமா ஹிதேஷி இந்த விதிகளுக்கு எதிராக வழக்கு தொடர்ந்தார். இந்த விதிகள், விலங்குகள் நலவாரிய வழிகாட்டுதல்களுக்கு எதிராக உள்ளது என்றும், அந்த விதிகளை செல்லாது என அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் சென்னை 16-வது உதவி சிட்டி சிவில் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த சிவில் கோர்ட்டு கடந்த 2023-ம் ஆண்டு தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. இதை எதிர்த்து கூடுதல் சிட்டி சிவில் கோர்ட்டில் மனோரமா ஹிதேஷி மேல்முறையீடு செய்தார். இந்த மேல்முறையீட்டு வழக்கை நீதிபதி எல்.ஆபிரகாம் லிங்கன் விசாரித்து வந்தார். விசாரணை முடிவில் நேற்று நீதிபதி தீர்ப்பளித்தார். அதில்,"சங்கத்தின் பெரும்பான்மை உறுப்பினர்களால், தீர்மானம் நிறைவேற்றப்பட்டது என்பதற்காக இதுபோல அபராதம் விதிக்க இயலாது. செல்லப்பிராணி உரிமையாளர்களுக்கு அபராதம் விதிப்பது என்பது மிரட்டலுக்குச் சமம். இதை நிச்சயம் தவிர்க்க வேண்டும். நாட்டின் சட்டங்களுக்கு முரணாகவும், எதிராகவும் இதுபோன்ற சங்கங்களின் பொதுக்குழுவில் முடிவு எடுக்க முடியாது. இதுபோன்ற கடுமையான விதிகளை ஏற்க முடியாது. இந்த விதிகள் செல்லாது. அதை ரத்து செய்கிறேன். கீழ் கோர்ட்டு தீர்ப்பும் ரத்து செய்யப்படுகிறது" இவ்வாறு நீதிபதி தீர்ப்பில் கூறியுள்ளார். Note: The content shared here is sourced from publicly available internet platforms, and we do not claim ownership. We are not responsible for any inaccurate or fake information.

Related Post