உங்க ஏரியா மாநகராட்சி, நகராட்சி உடன் இணைய விருப்பம் இல்லையா? ஆட்சேபனை தெரிவிக்க 6 வார கால அவகாசம்!

post-img
சென்னை: மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகளின் எல்லைகளை விரிவாக்கம் செய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ள நிலையில் அது தொடர்பாக பொதுமக்கள் தங்களது ஆட்சேபனைகளை 6 வாரங்களுக்குள் தெரிவிக்கலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது. முதன்மைச் செயலாளர், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, தலைமைச் செயலகம் என்ற முகவரிக்கு பொதுமக்கள் கருத்துகளை அனுப்பலாம். தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளின் சட்டத்தின்படி பரிசீலனை செய்யப்பட்டு இறுதி முடிவு எடுக்கப்படும் என அரசு தெரிவித்துள்ளது. சென்னை, மதுரை, திருச்சி, உள்ளிட்ட 16 மாநகராட்சிகளையும், திருவாரூர், திருவள்ளூர், சிதம்பரம் உள்ளிட்ட 40 நகராட்சிகளையும் விரிவாக்கம் செய்திருப்பதோடு, கன்னியாகுமரி, அரூர், பெருந்துறை உள்ளிட்ட 13 புதிய நகராட்சிகளையும் உருவாக்குவதற்கான அரசாணையை தமிழக அரசு அண்மையில் வெளியிட்டது. நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளை சுற்றி அமைந்துள்ள பகுதிகளுக்கும், நகர்ப்புறங்களுக்கு இணையான வகையில் சாலைகள், குடிநீர், திடக்கழிவு மேலாண்மை, திரவக்கழிவு மேலாண்மை, பொது, சமுதாய பயன்பாட்டிற்கான நவீன கழிப்பிடங்கள், பாதாளச் சாக்கடை கட்டமைப்பு, ஆற்றல்மிகு தெரு விளக்குகள் போன்ற மக்களுக்கான இன்றியமையாத அடிப்படை வசதிகளை விரிவுப்படுத்த வேண்டியது அவசியமாகிறது. இதன்மூலம், நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுடன் இணைக்கப்படும் பகுதிகள் உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் குடியிருக்கும் பொதுமக்களின் வாழ்க்கை தரம் உயர்வதுடன், அடிப்படை வசதிகள், கட்டமைப்பு மேம்பாடு, மேம்படுத்தப்பட்ட சுகாதாரம் மற்றும் மருத்துவ வசதிகளும் மக்களுக்கு கிடைக்கும். இதன்மூலம், புதிய வேலைவாய்ப்பு உருவாகும். அரசு, நகரமயமாக்கலின் சவால்களை எதிர்கொள்ளும் வகையில், நகர்ப்புறத்தினை ஒட்டியுள்ள உள்ளாட்சி அமைப்புகளின் நகரமயமாக்கலின் தன்மையினை பொறுத்து, கிராம ஊராட்சிகளை மாநகராட்சி மற்றும் நகராட்சிகளுடன் இணைத்தும், பேரூராட்சிகளை நகராட்சிகளாகவும், நகராட்சிகளை மாநகராட்சிகளாகவும் தரம் உயர்த்துதல், மறுசீரமைப்பு நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. அதன்படி, சென்னை மாநகராட்சி, மதுரை, திருச்சிராப்பள்ளி உள்ளிட்ட 16 மாநகராட்சிகளுடன், 4 நகராட்சிகள், 5 பேரூராட்சிகள் மற்றும் 149 ஊராட்சிகளை இணைக்கவும், திருவாரூர், திருவள்ளுர், சிதம்பரம் உள்ளிட்ட 41 நகராட்சிகளுடன் 147 ஊராட்சிகள் மற்றும் 1 பேரூராட்சியை இணைக்கவும், பேரூராட்சிகளுடன் ஊராட்சிகளை இணைத்தும், தனித்தும் கன்னியாகுமரி, அரூர், பெருந்துறை உள்ளிட்ட புதிதாக 13 நகராட்சிகளை அமைத்துருவாக்கவும், கிராம ஊராட்சிகளை இணைத்து மற்றும் தனியாகவும் ஏற்காடு, காளையார்கோவில், திருமயம் உள்ளிட்ட புதிதாக 25 பேரூராட்சிகளை அமைத்துருவாக்கவும், 29 கிராம ஊராட்சிகளை 25 பேரூராட்சிகளுடன் இணைக்கவும் உத்தேச முடிவினை மேற்கொண்டுள்ளது என அரசாணை வெளியிடப்பட்டது. மத்திய அரசின் 100 நாள் வேலைத் திட்டம், பசுமை வீடு திட்டம், பிரதம மந்திரி கிராம சாலை திட்டம், தனிநபர் இல்ல கழிப்பறை கட்டும் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களால் பயனடைந்து வரும் ஊராட்சிகள் தற்போது நகராட்சிகளுடனும், மாநகராட்சிகளுடன் இணைக்கப்படுவதால் மத்திய அரசின் திட்டங்கள் அனைத்தையும் இழக்கும் சூழல் உருவாகியிருப்பதாக பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். மேலும், மாநகராட்சியுடன் இணைக்கப்பட்டால் சொத்து வரி, குடிநீர் வரி ஆகியவையும் உயரும் என்பதால் பலர் அதிருப்தி தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகளின் எல்லைகளை விரிவாக்கம் செய்து அரசாணை வெளியிடப்பட்டது தொடர்பாக பொதுமக்கள் தங்களது ஆட்சேபனைகளை 6 வாரங்களுக்குள் தெரிவிக்கலாம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. தங்கள் பகுதியை மாநகராட்சிக்குள் இணைப்பதற்கு ஆட்சேபனை இருந்தால் அதனை அரசுக்கு தெரியப்படுத்தலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், பல்வேறு உள்ளாட்சி அமைப்புகளின் மறுசீரமைப்பை மேற்கொள்ள தமிழக அரசு முடிவு செய்தது. அதன்படி, பதவிக் காலம் நிறைவு பெற்ற (ஜனவரி 5 ஆம் தேதியுடன்) 28 மாவட்டங்களில் உள்ள நகர்ப்புரத்தன்மை வாய்ந்த ஊராட்சிகளை அருகிலுள்ள மாநகராட்சிகள், நகராட்சிகளுடன் இணைக்கவும், பேரூராட்சிகள் மற்றும் கிராம ஊராட்சிகளை இணைத்து நகராட்சியாக அமைத்துருவாக்கம் செய்திடவும் உள்ளாட்சி அமைப்புகளின் மறுசீரமைப்பு தொடர்பான உயர்நிலைக்குழு, மாவட்ட ஆட்சியர்களுடன் மேற்கொண்ட தொடர் ஆலோசனைகளின் அடிப்படையில், உரிய செயற்குறிப்புகள் பெறப்பட்டன. இதனைத் தொடர்ந்து இது தொடர்பாக 5 அரசாணைகள் வெளியிடப்பட்டது. இந்த அரசாணைகளை அரசிதழில் வெளியிட்டுள்ள தமிழ்நாடு அரசு, இது தொடர்பான ஆட்சேபனைகளை 6 வாரங்களில் தெரிவிக்கலாம் என்று அறிவித்துள்ளது. இதன்படி, முதன்மை செயலாளர், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, தலைமை செயலகம், புனித ஜார்ஜ் கோட்டை என்ற முகவரி அனுப்பலாம் என்ற அறிவிக்கப்பட்டுள்ளது. ஆட்சேபனைகள் அனைத்தும் தமிழ்நாடு நகர்புற உள்ளாட்சி அமைப்புகள் சட்டத்தின் படி பரிசீலனை செய்யப்பட்டு இறுதி முடிவு எடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. Note: The content shared here is sourced from publicly available internet platforms, and we do not claim ownership. We are not responsible for any inaccurate or fake information.

Related Post