HMPV வைரஸ் பாதிப்பு.. சீனாவில் உண்மையில் என்ன நடக்குது? நேரில் பார்த்த கேரள மருத்துவர் விளக்கம்

post-img
பீஜிங்: சீனாவில் HMPV வைரஸ் தீவிரமாக பரவுவதாகவும், இதனால் அங்கு மக்கள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் இணையத்தில் தகவல் பரவி வருகிறது. மேலும் மருத்துவமனைகள் எல்லாம், நோயாளிகளால் நிரம்பி வழிவதாகவும் தகன கூடங்களில் சடலங்கள் குவிந்து வருவதாகவும் தகவல் பரவியது. இந்த நிலையில் இது உண்மையில்லை என்று சீனாவில் வசித்து வரும் கேரள மருத்துவர் ஒன்இந்தியாவுக்கு விளக்கம் அளித்துள்ளார். சீனாவில் நிலைமை மோசமாக இருப்பதாக கூறப்படுவது உண்மையல்ல. சீனாவில் அவசர நிலை எதுவும் பிறப்பிக்கப்படவில்லை. மக்கள் இயல்பாகவே நடமாடுகிறார்கள். சீனாவில் தகன கூடங்கள் நிரம்பி வழிவதாக வெளியான தகவல்களை கேள்வி பட முடிந்தது. அதில் உண்மையில்லை என்று சீனாவில் வசித்து வரும் இந்தியர்கள் ஒன் இந்தியாவுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளனர். HMPV வைரஸ் பரவல் சீனாவில் HMPV (ஹியூமன் மிடாநிமோவைரஸ்) என்ற தொற்று வேகமாக பரவி வருகிறது. இதனால் அங்கு மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக இந்த வகை வைரஸ் குழந்தைகளை தான் அதிகமாக தாக்குகிறது. HMPV வைரஸ் பரவலால் மருத்துவமனைகளில் நோயாளிகளால் நிரம்பி வழிவதாகவும் தகன கூடங்களில் சடலங்களை எரியூட்ட கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளதாகவும் தகவல் பரவியது. ஆனால் சீனாவில் உண்மையான நிலை என்ன என்பது பற்றி அங்கு வசிக்கும் கேரளாவை சேர்ந்த மருத்துவர் பைசல் மற்றும் தொழிலதிபர் பாசில் ஒன் இந்தியாவுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:- எந்த பிரச்சினையும் இல்லை சீனாவில் நிலமை மோசமாக இருப்பதாக கூறப்படுவது உண்மையல்ல. சீனாவில் அவசர நிலை எதுவும் பிறப்பிக்கப்படவில்லை. மக்கள் இயல்பாகவே நடமாடுகிறார்கள். அவசர நிலை அறிவிக்கப்பட்டால் சீனாவில் இப்படி சூழல் இருக்காது. புஜியான் நகரில் உள்ள மருத்துவமனையில் பெரிய அளவில் எந்த பிரச்சினையும் இல்லை. HMPV வைரஸ் பாதிப்புக்கு இயல்பாகவே சிகிச்சை அளிக்கப்படுகிறது. தடுப்பூசி இல்லை தகன கூடங்கள் நிரம்பி வழிவதாக வெளியான தகவல்களை கேள்வி பட முடிந்தது. அதில் உண்மையில்லை. HMPV வைரஸ் பாதிப்பால் எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை. இருந்தாலும் இது வைரஸ் என்பதால் நாளை எப்படி பரவும் என்பதை சொல்ல முடியாது. தற்போது இந்த வைரஸ்க்கு தடுப்பூசி இல்லை. அறிகுறிகளுக்கு மட்டுமே சிகிச்சை அளிக்கப்படுகிறது. மாஸ்க் அணிவது, சானிடைசர்கள் பயன்படுத்துவது பிசிஆர் பரிசோதனை எல்லாம் முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கைகள்தான். அது கூட தனி நபர் விருப்பமாகத்தான் உள்ளது. அரசு கட்டாயம் ஆக்கவில்லை. சளி பாதிப்பினால் வந்தவர்கள் கூட HMPV பாதிப்பு ஏற்பட்டவர்களாக கருதுகிறார்கள். அதுதான் பிரச்சினை. சீனாவுக்கு வெளியில் விவாதிப்பதை போல நாட்டிற்குள் HMPV பற்றி யாருமே பேசுவது இல்லை. இப்படி ஒரு வைரஸ் இருக்கிறது என்பதை மட்டுமே மக்கள் அறிந்து வைத்துள்ளார்கள். இவ்வாறு அவர்கள் கூறினர். இந்தியாவில் 8 பேருக்கு பாதிப்பு சீனாவில் பரவிய HMPV வைரஸ் தற்போது இந்தியாவுக்குள்ளும் அடியெடுத்து வைத்துள்ளது. குஜராத்தின் அகமதாபாத் நகரில் ஒரு குழந்தைக்கும், கர்நாடகாவின் பெங்களூரில் 2 குழந்தைக்கும், சென்னை மற்றும் சேலத்தில் தலா ஒருவருக்கும், கொல்கத்தாவில் 3 பேருக்கும் என மொத்தம் 8 பேருக்கு இந்த பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் இது உருமாறிய HMPV வைரஸ் இல்லை என்றும், எப்போதும் போல பரவும் வைரஸ் காய்ச்சல் தான் என்றும் மத்திய சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. மக்கள் யாரும் அச்சம் கொள்ள வேண்டாம் என்றும் தெரிவித்துள்ளது. Note: The content shared here is sourced from publicly available internet platforms, and we do not claim ownership. We are not responsible for any inaccurate or fake information.

Related Post