சீனாவில் HMPV வைரஸ்! தயாராக உள்ளோம்.. அச்சப்பட வேண்டாம்.. மத்திய சுகாதாரத்துறை அட்வைஸ்

post-img
டெல்லி: கொரோனா எங்கிருந்து முதலில் பரவியதோ அதே சீனாவில் புதிய வகை வைரஸ் ஒன்று பரவுதாக வெளியாகியிருக்கும் தகவல் உலக நாடுகளை அதிர வைத்துள்ளது. இந்த நிலையில், இது தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் சார்பில் கூட்டு கண்காணிப்பு குழு கூட்டம் நடைபெற்றது. சீனாவில் பரவி வரும் சுவாச நோய்கள் தொடர்பாக அச்சப்பட வேண்டிய அவசியம் இல்லை. ஹெச்.எம்.பி.வி வைரசால் ஏற்படும் பாதிப்பு குறித்தும் கவலைப்பட வேண்டாம் என்று மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. சீனாவில் கடந்த 2019 ஆம் ஆண்டு இறுதியில் கண்டறியப்பட்ட கொரோனா எனும் கோவிட் 19 பெருந்தொற்று நோய் உலக நாடுகளை பாடாய் படுத்தியது. கிட்டத்தட்ட 2 ஆண்டுகள் சர்வதேச அளவில் போக்குவரத்து பாதிப்பு, பொதுமுடக்கம், சுகாதார நெருக்கடி என பெரும் சிரமத்தை மொத்த பூமியும் எதிர்கொண்டது. தடுப்பூசி கண்டுபிடிப்புக்கு பிறகு இந்த வைரஸ் பாதிப்பில் இருந்து உலகம் மெல்ல மெல்ல மீண்டு வந்தது. தற்போது கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டு வந்துள்ள நிலையில், கொரோனா எங்கிருந்து முதலில் பரவியதோ அதே சீனாவில் புதிய வகை வைரஸ் ஒன்று பரவுதாக வெளியாகியிருக்கும் தகவல் உலக நாடுகளை அதிர வைத்துள்ளது. கொரோனாவை போன்றே இந்த வைரஸால் காய்ச்சல், இருமல், சளி, தொண்டை வலி உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படும் என்று சொல்லப்படுகிறது. புதிய வைரஸால் சிறுவர்களே அதிக அளவில் பாதிக்கப்படுகிறார்கள். HMPV வைரஸ் என்று சொல்லப்படும் இந்த வைரஸ் பாதிப்பு காரணமாக மருத்துவமனைகளில் மக்கள் கூட்டம் அலைமோதும் காட்சிகளும் வெளியாகின. இந்த வைரஸ் பரவல் காரணமாக சீனாவில் சுகாதார அவசர நிலை அமல் செய்யப்பட்டு இருப்பதாகவும் செய்திகள் வெளியாகின. வைரஸ் குறித்த விவரங்களை அளிக்குமாறு சீன அரசிடம் உலக சுகாதார அமைப்பு கேட்டுக்கொண்டது. இதற்கிடையே, மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் சார்பில் கூட்டு கண்காணிப்பு குழு கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்திற்கு பிறகு மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:- சீனாவில் பரவி வரும் சுவாச நோய்கள் தொடர்பாக அச்சப்பட வேண்டிய அவசியம் இல்லை. ஹெச்.எம்.பி.வி வைரசால் ஏற்படும் பாதிப்பு குறித்தும் கவலைப்பட வேண்டாம். சீனாவில் வழக்கத்திற்கு மாறான நிலை இல்லை. சுவாச தொற்று பாதிப்புகளை கையாள இந்தியா தயார் நிலையில் உள்ளது. உலக சுகாதார அமைப்பு மற்றும் பிற சர்வதேச அமைப்புகள் அளிக்கும் தகவல்களை உன்னிப்பாக கண்காணித்து வருகிறது" என்று தெரிவிக்கபட்டுள்ளது. முன்னதாக சீன வெளியுறவு அமைச்சகம் வைரஸ் பாதிப்பு தொடர்பாக கூறுகையில், "ஆண்டு தோறும் குளிர் காலத்தில் பரவும் சுவாச தொற்றுக்கள்தான் இவை. சீனா தனது குடிமகள் மற்றும் நாட்டிற்கு வரும் வெளிநாட்டு பயணிகள் நலனில் எப்போதும் அக்கறையுடன் இருக்கும் தற்போது பரவும் வைரசால் ஏற்படும் பாதிப்பு குறைவு தான். கடந்த ஆண்டை விட தற்போது பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் குவைவாகவே உள்ளது" என்று தெரிவித்தது. Note: The content shared here is sourced from publicly available internet platforms, and we do not claim ownership. We are not responsible for any inaccurate or fake information.

Related Post