அன்று விஜயதரணி.. இன்று குஷ்பு.. காலியாகும் பாஜக? விஜய் கட்சியில் குஷ்பு?

post-img
சென்னை: அண்ணாமலையுடன் மனவருத்தம் ஏற்பட்டுள்ள நிலையில் குஷ்பு விரைவில் விஜய் கட்சியில் இணைவதற்காக வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக தகவல்கள் அடிபட்டுவருகின்றன. தமிழக அரசியலில் மீண்டும் குஷ்பு விவாத பொருளாக மாறி இருக்கிறார். அவர் பாஜக ஏற்பாடு செய்யும் எந்தக் கூட்டங்களிலும் பங்கேற்காமல் ஒதுங்கி இருப்பது ஏன்? அதற்கு என்ன காரணம் என்ற சந்தேகம் எழுந்திருக்கிறது. அவர் பாஜகவைப் புறக்கணிக்கிறாரா? இல்லை பாஜக மாநிலத் தலைமை புறக்கணிக்கிறதா? என்று ஊடகங்கள் ஒரு விவாதத்தைக் கிளப்ப, அதற்கு குஷ்பு, “என்னை ஏன் அழைப்பது இல்லை என்பது பற்றி அண்ணாமலையிடம்தான் கேட்க வேண்டும். அதற்கு நான் எப்படி பதில் சொல்ல முடியும். அவர்கள் என்னை அழைப்பது இல்லை. அழைத்தால் நான் போக தயாராக இருக்கிறேன்” என்று கூல் ஆக பதிலளித்திருக்கிறார். குஷ்பு தனது அரசியல் வாழ்க்கையை திமுகவிலிருந்து தொடங்கினார். 2010முதல் 2014 வரை கருணாநிதியின் ஆதரவாளராக இருந்த அவர் தலைமை மாற்றம் ஸ்டாலின் கைக்குப் போகும் போது அதற்கு எதிராக ஒரு கருத்தை முன்வைத்தார். பின்னர் ஒரு வாரப் பத்திரிகை கருணாநிதியுடன் இணைத்து அவரை தவறாகச் சித்தரித்தது. ஆகவே அவர் கட்சியிலிருந்து வெளியேறினார். இன்னும் சொல்லப் போனால் வெளியேற்றப்பட்டார். அதன்பின் காங்கிரஸ் கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டவர், மதவாத அரசியலை எதிர்த்தார். வடநாட்டிலிருந்து தமிழ்நாட்டுக்கு வந்த அவர் பெரியாரையும் முற்போக்கு கருத்துகளையும் சொல்லி அரசியல் களத்தில் அதிரடி ஆட்டம் ஆடினார். கற்பு பற்றி அவர் சொன்ன கருத்து பல விவாதங்களை உண்டாக்கியது. முற்போக்கு முகத்துடன் இருந்த குஷ்பு, பின்னர் அதற்கு நேர்மாறாக பாஜகவில் இணைந்தார். தன்னை ஒரு இந்து பெண்ணாக அடையாளம் காட்டிக் கொண்டார். ஆயிரம் விளக்கு தொகுதியில் அவர் பாஜக சார்பாக 2021 இல் போட்டியிட்டார். முதலில் அவர் சேப்பாக்கம் திருவல்லிக்கேணியில் நிற்பதாக இருந்தது. ஆனால், உதயநிதியை எதிர்த்துப் போட்டியிடாமல் தொகுதியை மாற்றிக் கொண்டார். காங்கிரசிலிருந்த போது தேசிய செய்தி தொடர்பாளராக இருந்தார். ராகுல்காந்திக்கு நெருக்கமாக இருந்தார்.அப்படி இருந்தும் காங் மாநிலத் தலைமை அவருக்கு சீட் கொடுக்கப்படவில்லை. எனவே பாஜக பக்கம் போனார். அங்கே அவருக்கு தேசிய மகளிர் ஆணையம் உறுப்பினர் பதவி வழங்கப்பட்டது. அதில் சில காலம் வரை நீடித்தார். 2024 எம்பி தேர்தலை ஒட்டி மனமாற்றம் ஏற்பட்டு கடந்த ஆகஸ்ட் மாதம் அப்பதவியை ராஜினாமா செய்தார். அப்போது முழு நேர அரசியலில் இனிமேல் ஈடுபடப் போவதாக அவர் சொல்லி இருந்தார். ஆனால், பதவியை ராஜினாமா செய்தது முதல் வீட்டில் முடங்கிப்போனார் குஷ்பு. தீவிர அரசியல் களத்தில் அவரைக் காணவே இல்லை. 4மாதங்கள் முன்பு பாஜக மாநிலத் தலைவராகிறார் என்று பேச்சு அடிப்பட்டது. அதேநேரம் தமிழிசையும் போட்டியிலிருந்தார். இப்போதும் தமிழிசைக்கு பாஜகவில் முக்கிய இடம் இல்லை. அவர் ஆந்திர முதல்வர் சந்திரபாபு பதவி ஏற்பு நிகழ்வில் கலந்து கொண்ட போது மேடையிலேயே அமித்ஷா அவரைக் கண்டித்தார். அவர் அண்ணாமலைக்கு ஆதரவாக இருக்க வலியுறுத்தினார் என சொல்லப்பட்டது. அதன்பின் அமைதியானார் தமிழிசை. மீண்டும் சமாதானம் அடிப்படையில் தமிழிசையை வீடு தேடிப் போய் அண்ணாமலை பார்த்தார். அண்ணாமலை கட்சி பொறுப்புக்கு வந்தது முதல் பலர் பாஜகவை விட்டு வெளியேறிவிட்டனர். அண்ணாமலை வந்த பிறகு காயத்ரி ரகுராம் ஓரங்கட்டப்பட்டார். அப்படித்தான் அத்வானி காலத்திலிருந்தே பாஜகவிலிருந்து வந்த கவுதமி சில மாதங்கள் முன்னதாக அதிமுகவில் இணைந்தார். வானதி சீனிவாசன் கூட பெரிய முக்கியத்துவம் கட்சியில் இல்லை என்றே சொல்லப்படுகிறது. அண்ணாமலையால் நம்பிக்கை வார்த்தைகள் அளிக்கப்பட்டு பாஜகவில் இணைந்தார் விஜயதரணி. அவருக்கு எம்பி சீட் கன்னியாகுமரியில் வழங்கப்படும் என வாக்கு கொடுத்திருந்தார் அண்ணாமலை. கட்சியில் பதவியும் இல்லை. சீட்டும் கொடுக்கவில்லை என பொது மேடையில் போட்டு உடைத்தார் விஜயதரணி. அது சர்ச்சையானது. அவர் இப்போது சைலண்ட் ஆகிவிட்டார். 2024 மக்களவைத் தேர்தல் முடிந்த உடனேயே நயினார் நாகேந்திரன் கட்சியிலிருந்து விலகலாம் என பேச்சு அடிபட்டது. அவர் பின் மவுனமானார். அப்படித்தான் ஊடகப் பிரின் தலைமை பொறுப்பிலிருந்த நிர்மல்குமார் அதிமுகவுக்கு தாவினார். பாஜக மாநிலச் செயலாளர் திலீப் கண்ணன் வெளியேறினார். அண்ணாமலையால் அழைத்துவரப்பட்ட திருச்சி சூர்யா கட்சியிலிருந்து நீக்கப்பட்டார். மாநிலத் தலைவராகப் பொறுப்பேற்ற போது அண்ணாமலை 500 தலைவர்களை உருவாக்குவேன் என்றார். ஆனால், அவர் வருகைக்குப் பின் பல முக்கிய முகங்கள் கட்சியைவிட்டு வெளியேறியுள்ளனர். இப்போது அந்தப் பட்டியலில் குஷ்பு இடம்பெற்றுள்ளார். அண்ணாமலை மீது குஷ்பு வைத்த குற்றச்சாட்டு பற்றி இதுவரை அண்ணாமலை வாய் திறக்கவில்லை. ஆகவே, அவர் இனிமேல் விஜய் கட்சிக்குப் போகலாம் என்கிறார்கள். அது நடக்காது என்பதை உறுதியாகச் சொல்ல முடியவில்லை. Note: The content shared here is sourced from publicly available internet platforms, and we do not claim ownership. We are not responsible for any inaccurate or fake information.

Related Post