லடாக்கில் 2 மாவட்டங்களை அறிவித்த சீனா.. மத்திய வெளியுறவுத்துறை கொடுத்த பதிலடி.. எல்லையில் பதற்றம்

post-img
டெல்லி: நம் நாட்டுடன் மோதலை சீனா கடைப்பிடித்து வரும் நிலையில் லடாக் பகுதியில் புதிதாக 2 கவுண்ட்டி மாவட்டங்களை அந்த நாடு புதிதாக அறிவித்துள்ளது. இதற்கு மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளதோடு, அந்த 2 கவுண்ட்டி பிராந்தியங்களை முற்றிலுமாக நம் நாடு நிராகரித்த பதிலடி கொடுத்துள்ளது. அண்டை நாடான சீனா நம் நாட்டுடன் தொடர்ந்து மோதலை கடைப்பிடித்து வருகிறது. குறிப்பாக எல்லையில் உள்ள அருணாச்சல பிரதேசம் மற்றும் லடாக் பகுதிகளுக்கு சீனா உரிமை கொண்டாடி வருகிறது. அதோடு நம் நாட்டுக்கு சொந்தமான இடங்களை ஆக்கிரமிப்பு செய்யும் வேலையில் சீனா தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில் தான் கடந்த 2021இல் அருணாச்சல பிரதேசத்தில் சுமார் 101 வீடுகளைக் கொண்ட ஒரு புதிய கிராமத்தை சீனா உருவாக்கியிருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியது. 2023ல் சீனா புதிய மேப்பை வெளியிட்டது. அதில் நம் நாட்டின் சில பகுதிகளை சீனா உள்ளடக்கி வைத்திருந்தது. அதோடு நம் நாட்டின் பகுதிகளை உள்ளடக்கிய இடங்களுக்கு ‛அக்‌ஷயா சின்' என பெயர் வைத்துள்ளது. இதற்கு நம் நாடும் தொடர்ந்து பதிலடி கொடுத்து வருகிறது. சீனாவின் இந்த சீண்ட நடவடிக்கையை முற்றிலுமாக ஏற்காத நம் நாடு, ஒரு அடி இடத்தை கூட சீனாவிடம் விட்டு கொடுக்க முடியாது. சீனா உடனடியாக தனது ஆக்கிரமிப்பு நடவடிக்கை மற்றும் நம் நாட்டின் நிலப்பரப்புக்கு உரிமை கொண்டாடுவதை நிறுத்த வேண்டும் என்று எச்சரிக்கை விடுத்தது. ஆனாலும் சீனா திருந்தவில்லை. தொடர்ந்து நம் நாட்டின் எல்லையில் கட்டுமானங்களை மேற்கொண்டு வருகிறது. ராணுவ நிலைகளை உருவாக்கி வருவதாக அவ்வப்போது சேட்டிலைட் புகைப்படங்கள் வெளியாகி வருகிறது. இதற்கிடையே தான் நம் நாட்டின் எல்லையில் அருணாச்சல பிரதேசத்தையொட்டிய இடுத்தில் திபெத்தில் பிரம்மபுத்திரா நதியின் குறுக்கே 11 லட்சம் கோடி ரூபாய் செலவில் உலகின் மிகப்பெரிய அணையை கட்ட சீனா திட்டமிட்டுள்ளது. இது நமக்கு தற்போது புதிய பிரச்சனையாக மாறி உள்ளது. இதற்கிடையே தான் சீனா தற்போது லடாக்கில் ஆக்கிரமித்த பகுதிகளில் புதிதாக 2 கவுண்ட்டிகளை உருவாக்குவது தொடர்பான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதாவது லடாக் என்பது நம் நாட்டுக்கு சொந்தமான பகுதியாகும். காஷ்மீர் அருகே உள்ள லடாக் நம் நாட்டின் யூனியன் பிரதேசமாக உள்ளது. இந்நிலையில் தான் லடாக் யூனியன் பிரதேசத்தின் வடமேற்கில் அக்சாய் சின் (Aksai Chin) என்ற நிலப்பகுதி அமைந்துள்ளது. இது நம் நாட்டுக்கு சொந்தமான இடம். ஆனால் தற்போது சீனா ஆக்கிரமித்து அக்சாய் சின் என்று பெயர் வைத்துள்ளது. இன்னும் புரியும்படி கூற வேண்டும் என்றால் வரலாற்றை உற்று கவனிக்க வேண்டும். அதாவது 1947ல் நடந்த பிரிவினையின்போது இந்த பகுதி நம் நாட்டுடன் இருந்தது. ஆனாலும் சீனாஅந்த பகுதியை நமக்கு விட்டு கொடுக்க விரும்பவில்லை. இதனால் அதனை சீனா தனது நிலப்பரப்பாகவே கருதியது. கடந்த 1962ம் ஆண்டு இந்தோ-சீனா போர் மூண்டது.இந்த போரில் சீனா வெற்றி பெற்ற பின்னர் இப்பகுதி முழுவதும் சீன அரசின் கட்டுப்பாட்டிற்குள் சென்று விட்டது. அன்று முதல் சீனா தொடர்ந்து நிர்வகித்து வருகிறது. இப்படியாக இந்த இடத்தை சீனா ஆக்கிரமித்து வைத்துள்ளது. இந்த நிலப்பரப்பின் அருகே திபெத் உள்ளது. இதனால் இங்கிருந்து சீனாவின் சின்ஜியாங் மாகாணத்தையும், திபெத்தையும் இணைக்கும் வகையில் சீனா சாலையை அமைத்துள்ளது. இதற்கிடையே தான் இங்கு புதிதாக 2 கவுண்ட்டி பிராந்தியங்களை சீனா உருவாக்கி உள்ளது. அதாவது கவுண்ட்டி என்பது பிரிட்டன், அய்ர்லாந்து உள்ளிட்ட நாடுகளில் பயன்படுத்தப்படும் சொல்லாகும். அதாவது குறிப்பிட்ட ஒரு நாட்டின் சார்பில் புதிதாக உள்ளாட்சி அமைப்புகளை உருவாக்கி நிர்வகிக்கும் ஏரியாக்களை கவுண்ட்டி என்ற சொல்லால் அழைப்பார்கள். அதன்படி தற்போது சீனா அக்சாய் சின் பகுதியில் He'an மற்றும் Hekang என்று 2 கவுண்ட்டி மாவட்டங்களை உருவாக்கி உள்ளது. மேலும் இந்த 2 கவுண்ட்டிகளும் சீனாவின் சின்ஜியாங்கிற்குள் உட்பட்டு செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் கவுண்ட்டிகள் என்று அறிவிக்கப்பட்ட இரண்டு இடங்களுக்கும் நம் நாட்டின் லடாக் யூனியன் பிரதேசத்துக்கு உட்பட்ட இடத்தில் வருகிறது. இதனால் நம் நாடு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இதற்கு மத்திய வெளியுறவுத்துறை கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் நேற்று பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவர் சீனாவின் இந்த 2 கவுண்ட்டி அறிவிப்புகளுக்கு நம் நாடு ஏற்கவில்லை. எந்த காரணம் கொண்டும் சீனாவின் இந்த செயலை இந்தியா ஏற்காது என்று பதிலடி கொடுத்தார். இதுபற்றி ரந்தீர் ஜெய்ஸ்வால், "இந்திய பகுதியை சட்டவிரோதமாக சீனா ஆக்கிரமித்ததை இந்தியா ஒருபோதும் ஏற்றுக்கொண்டது இல்லை. சீனா அறிவித்துள்ள 2 புதிய கவுண்ட்டி பகுதிகள் நம் நாட்டின் லடாக் யூனியன் பிரதேசத்துக்குள் வருகிறது. வெறுமனே நம் நாட்டின் நிலத்தில் புதிய கவுண்ட்டிகளை உருவாக்குவதன் மூலம் அது சீனாவுக்கு சொந்தமாக்கிவிட முடியாது. அதோடு குறிப்பிட்ட நிலப்பகுதியில் நம் நாட்டின் இறையாண்மையை மீறி செயல்பட முடியாது. சீனாவின் சட்டவிரோதமானசெயல், ஆக்கிரமிப்பு உள்ளிட்டவை என்பது எந்த வகையிலும் அந்த நாட்டுக்கு சட்டப்பூர்வ அங்கீகாரத்தை வழங்காது. தூதரகம் வழியாக சீன தரப்பிற்கு கண்டனம் பதிவு செய்யப்பட்டுள்ளது'' என்றார். Note: The content shared here is sourced from publicly available internet platforms, and we do not claim ownership. We are not responsible for any inaccurate or fake information.

Related Post